
நம் வாழ்வை இறைவனிடம் கையளிக்கவும், அவரில் நம்பிக்கை வைக்கவும், நம்மைத் துன்புறுத்துவோரை மன்னிக்கவும், புனித ஸ்தேவானிடமிருந்து நாம் கற்றுக்கொள்கிறோம் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இப்புதனன்று கூறினார்.
டிசம்பர் 26, இப்புதனன்று சிறப்பிக்கப்பட்ட புனித ஸ்தேவான் திருவிழாவன்று, வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில் கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான திருப்பயணிகளுக்கு, நண்பகல் மூவேளை செப உரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மன்னிப்பு, இதயத்தை விரிவுபடுத்துகின்றது, பகிர்வை உண்டாக்குகிறது மற்றும், மனஅமைதியைத் தருகின்றது என்று கூறினார்.
குழந்தை இயேசுவின் பிறப்பின் மகிழ்வு பற்றி பேசியதற்கு அடுத்த நாளில், புனித ஸ்தேவானின் கொடூரமான மறைசாட்சியம் பற்றி பேசுவது புதிராகத் தோன்றலாம், ஆனால் உண்மையில், மனிதரான, இறைமகனான குழந்தை இயேசு, மனித சமுதாயத்தை மீட்பதற்காக, சிலுவையில் உயிர்துறந்தார் என்றார், திருத்தந்தை பிரான்சிஸ்.
மறைசாட்சியம் வழியாக, இயேசுவின் அடிச்சுவடுகளைப் பின்பற்றிய முதல் மனிதராக, புனித ஸ்தேவான் இருந்தார் எனவும், இவர், தன் வாழ்வைக் கடவுளிடம் ஒப்படைத்து, தன்னை சித்ரவதைப்படுத்தியவர்களை மன்னித்து, இயேசுவைப் போல் இறந்தார் எனவும், திருத்தந்தை கூறினார்.
புனித ஸ்தேவானைப் பின்பற்றி, தன்னைத் துன்புறுத்துவோரை மன்னிக்கின்ற மற்றும் அவர்களுக்காகச் செபிக்கின்ற மனநிலையிலும், புனித ஸ்தேவான் இயேசுவைப் பின்பற்றினார் என்றுரைத்த திருத்தந்தை, நாமும், மன்னிக்கவும், எப்போதும் மன்னிக்கவும் புனித ஸ்தேவானிடமிருந்து கற்றுக்கொள்ள அழைக்கப்படுகிறோம் என்று கூறினார்.
மன்னிப்பை செபத்தின் வழியாகப் பெறுகிறோம், புனித ஸ்தேவான், மறைசாட்சியத்தை ஏற்பதற்கு, செபமே அவருக்கு வலிமை தந்தது, எனவே நாமும், இத்தகைய வல்லமையைப் பெற, தூய ஆவியாரிடம் இடைவிடாது செபிக்க வேண்டும் என, மூவேளை செப உரையில் கேட்டுக்கொண்டார், திருத்தந்தை பிரான்சிஸ்.
Source: New feed