
புனித வெள்ளி’
‘புனித வெள்ளி’ என்பது இயேசு என்பவரது பாடுகளையும் மரணத்தையும் நினைவு கூரும் ஏதோ ஒரு சாதாரண நாளல்ல – மாறாக, உலகின் மீட்புக்காக தன்னையே பரிகாரப் பலியாக கையளித்த எமது மீட்பரான ஆண்டவர் இயேசுவின் வலியும், வேதனையும் நிறைந்த துயரம் நிறைந்த திருப்பாடுகளாக நினைவுகூரப்பட வேண்டியது என்பது எனது தாழ்மையான கருத்தாகும்.
திருத்தந்தை பிரான்சிஸ் தமது 10-02-2014 திகதிய ருவிட்டர் செய்தியில் ‘ஆண்டவர் இயேசுவின் சிலுவைப்பாதை ஒரு நிகழ்வின் மறுசாயல் அல்ல …. மாறாக உண்மைப் பிரசன்னம்….இறைவனின் மறையுண்மைக்குள் நுழையும் விருப்பத்தை உள்ளடக்கியதாக உள்ளது’ என்று கூறியுள்ளதால் உலக இரட்சகரின் பார்வைகள் எமது உள்ளார்ந்த மனிதனை தவக்கலத்தில் மட்டுமல்ல எக்காலத்திலும் ஊடறுக்க வேண்டும்.
2000வருடங்களுக்கு முன்னர் இந்நாளில் மேற்கொள்ள ப்பட்ட புனிதமான திருச் சிலுவைப் பயணம் அனுதினமும் எம்மில் தொடரப்படட்டும். உபவாசம் சுத்த போசனத்தோ டு கறுப்பு அல்லது வெள்ளை உடுத்தி (இன்று மாத்திரம் ஆலயம் சென்று) ‘ஆணி கொண்ட காயங்களை அன்புடன் முத்தி செய்கின்றேன்’ என்பதோடு எமது புனித வெள்ளிக் (கத்தோலிக்கக்) கடமைகள் முடிந்து விடுகின்றதா?
வாரந்தோறும் வெள்ளிக்கிழமை வந்து போகிறதே – இன்று மட்டும் எதற்காக ‘புனித வெள்ளி’?. எமது சிந்தனை ‘புனித சிலுவை மரத்தை’ நோக்கியதாக இருக்கவேண்டும் என்பதனாலா? ஆண்டவர் இயேசு சிலுவையில் அறை யப்பட்டுக் கொலைசெய்யப்பட்டது ஏதோ தற்செயலாக நடைபெற்ற சம்பவமல்ல.
கல்வாரியில் குருவும் பலிப் பொருளுமாக ஆண்டவர் இயேசு நிறைவேற்றிய தன்னிகரற்ற தலை சிறந்த தியாகப்பலியே புனித வெள்ளியில் கல்வாரியில், கழுமரத்தில், கள்வர்கள் நடுவில் நிறைவேற்றப்பட்டது. இத் தலைசிறந்த பலியே கத்தோலிக்க ஆலயங்களில் அனுதினமும் புதுப்பிக்கப்படுகின்றது.
காலத்தாலும், இடத்தாலும் மட்டுமல்ல, பலி நிறை வேற்றும் அருட்பணியாளராலும் வேறுபட்டாலும் ‘ஆண்டவர் இயேசுவின் நினைவாக’ நிறைவேற்றப்படும் புனிதத்திருப்பலிக்கு நாம் எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கின்றோம்? எனவும் வேறுவிதமாகச் சிந்திக்கவும் இப்புனித வெள்ளியில் நாம் அழைக்கப்பட்டுள்ளோம்.
வாழைமரம் அழிக்கப்படுவதும் மெழுகுதிரி உருக்கப்ப டுவதும் தியாகத்தின் வடிவமாயின், எமது பாவங்களுக்கா கத் தன்னையே கழுவாயாக்கியவருக்காக ‘எதை நான் தருவேன் இறைவா’ என்று நாம் மனதுருகப் பாடுவது மட்டுமல்ல, உபவாசமும், தவமுயற்சிகளும் மேற்கொண்டு புனித வெள்ளியில் கறுப்பு வெள்ளை உடுத்துவதால் ஆண்டவர் இயேசுவின் பரிவு கிடைத்துவிடுமா?
ஏதேனில் உருவான ஒருமரத்தால் மனிதம் பாவத்தில் தொங்கியது. மனிதப் பாவத்திற்காக புனிதம் ‘தனிமரமாக’ கல்வாரியில் தொங்குவதற்காக பச்சைமரமாக இவ்வுலகிற்கு வந்து, அவமானத்தின் சின்னமான சிலுவை மரத்தைச் சுமந்து சென்றது. மனித விடுதலையின் புனித வராலாறு எழுதப்பட மனித இனத்தின் பாவக்கறைகள் கழையப்பட மாபெரும் மகிமையைப் பெற்றுக்கொடுத்த திருச்சிலுவை மரத்தை நாம் எந்த அளவில் மதிக்கின்றோம்?.
பாலை நிலத்தில் பாம்பு உயர்த்தப்பட்டதுபோல் மானிட மகனும் எமது பாவங்களுக்காக சிலுவை மரத்தில் ஏற்றப்பட்டதால் திருச்சிலுவை மரத்தை பக்திப்பொ ருளாகப் பார்க்காது எமது பாவங்களுக்காகக் கழுவா யாக்கப்பட்ட விடுதலையின் சின்னமாக பார்க்க முடிகின்றதா?. அடிமைபோல அடித்து நொறுக்கப்பட்ட தேவ ஆட்டுக்குட்டியை எமது சிந்தனைகளுக்குள் நிறுத்திவைக்க தகுதியான முறையில் நாம் அனுதினமும் வாழுகின்றோமா?.
எமது பாவப் பழக்க வழக்கங்கள் பெலவீனங்கள் குற்றங் குறைகள் அனைத்துமே சிலுவையில் அறையப்பட்டு அவற்றினின்று எம்மை விடுவித்து இறைமகன் இயேசு வெற்றி கொண்டுவிட்டார் என நம்பி விசுவசிப்போம். பாலைநிலத்தில் மோசேயால் உயர்த்தப்பட்ட பாம்பினை உற்று நோக்கிய இஸ்ராயேல் மக்கள் குணமாகியது போல நாமும் சிலுவையில் அறையப்பட்ட இறைமகனை உற்று நோக்குவோம்.
எமது பாவ வாழ்விலிருந்து விடுதலை பெறுவோம். எமது இவ்வுலக வாழ்வில் மீண்டும் ஒருமுறை புனித வெள்ளி வருமோவென நாமறியோம். எமக்கெனக் கொடுக்கப்பட்ட இவ்வரிய சந்தர்ப்பத்தை பயன்படுத்துவோம். வெற்றி என்னும் பரிசுத்த வாழ்வை நோக்கி வீறு நடைபோடுவோம்
Source: New feed