
இன்று புனித வியாழன். பாஸ்கா விழாவின் முப்பெரும் நாள்களின் முதல் நாள். இப்புனித நாளில் இயேசு தம் திருத்தூதர்களின் பாதங்களைக் கழுவியது, திருநற்கருணையை ஏற்படுத்தியது, மற்றும் அன்புக்கட்டளை அளித்தது என, எல்லாவற்றிலும் இயேசுவின் பேரன்பு மையப்படுத்தப்பட்டுள்ளன. இவையனைத்தும் இயேசுவின் வழி செல்ல நம்மைத் தூண்டுகின்றன. இச்சிந்தனையுடன் இப்புனித முப்பெரும் மூன்று நாள்களைத் தொடங்குவோம்
புனித வியாழன்
புனித வியாழக்கிழமை என்றவுடனேயே நம் அனைவருக்கும் நினைவில் வருவது, இயேசு தம் சீடர்களுடைய பாதங்களைக் கழுவிய அந்தச் சடங்கும், அவர் தம் சீடர்களோடு தமது இறுதி இரவு உணவை உண்டபொழுது அவர் கூறிய “எனது நினைவாக இவ்வாறு செய்யுங்கள்” (லூக்.22,19) என்ற வார்த்தைகளுமாகும்.
புனித வியாழக்கிழமை நடைபெறும் மாலைத் திருப்பலி வழிபாடும் நற்கருணைப் பவனியும் திருஅவையினுடைய திருவழிபாட்டில் தவக்காலம் நிறைவுற்று இயேசுவினுடைய உயிர்ப்பைக் கொண்டாட நம்மையே நாம் தயாரிக்கின்ற விதமாக பாஸ்காவுக்கான மூன்று நாள் தயாரிப்புக்கான ஒரு வழிபாடாக அமைகிறது. இந்த மாலைப்பொழுது மனுக்குல வரலாற்றில் மிக முக்கியமானதொன்றாகும். ஏனெனில், இது இஸ்ரயேல் மக்களுடைய விடுதலைக்கானதொரு பயணத்தின் தொடக்கமாகவும், இயேசு தம் பாடுகளை நினைத்து, தம் தந்தையிடமும், தம் அன்புச் சீடர்களிடமும் தனிமையில் மனம்விட்டு உரையாடிய நேரம், அவருடைய விடுதலைப் பணியைத் தொடர்வதற்காக அன்பின் சின்னமாக, அமைதியின் சின்னமாக, தியாகத்தின் சின்னமாக, பகிர்வின் சின்னமாக, ஒன்றிப்பின் சின்னமாக, மற்றும் ஒற்றுமையின் சின்னமாக இருக்கின்ற நற்கருணையை ஏற்படுத்திய நாள். தம்முடைய பணியைத் தொடரவிருக்கின்ற அந்தச் சீடர்களிடம் “நீங்களும் ஒருவர் மற்றவருடைய காலடிகளைக் கழுவ கடமைப்பட்டிருக்கிறீர்கள்” (யோவா 13,14) என்று சொல்லி தமது பணியின் அடித்தளமாக இருக்கின்ற பணிக்குருத்துவத்தை ஏற்படுத்திய நாளாகும்.
பல மொழிகளில் பெரிய வியாழன்
இந்த நாளை நாம் தமிழில் பெரிய வியாழன் என்றும், புனித வியாழன் என்றும் கூறுகின்றோம். இலத்தீன் மொழியில் Feria quinta in Coena Domini அதாவது ஆண்டவரின் இரவு உணவின் வியாழன் என்றும் ஆங்கிலத்தில் Holy Thursday அல்லது Maundy Thursday என்றும் அழைப்பார்கள். இந்த in Coena Domini மற்றும் Maundy Thursday ஆகிய சொல்லாடல்கள் ஆழமானதொரு அர்த்தத்தைக் கொண்டுள்ளன. இதை நாம் புறிந்து கொள்கின்றபோது இந்த நாளை நாம் அர்த்தமுள்ள வகையில் கொண்டாடலாம்.
Maundy Thursday என்ற சொல்லாடலானது இரு வேறு அர்த்தங்களில் ஆனால் ஒரே கருத்தைக் குறிக்கும் வகையில் மிகவும் ஆழமானதொரு அர்த்தத்தில் பயன்படுத்தப்பட்டது.
முதல் அர்த்தம், Maundy என்ற ஆங்கில வார்த்தையானது Maundatum என்கின்ற இலத்தீன் வார்த்தையிலிருந்து வந்ததாகும். இதனை நாம் ஆங்கிலத்தில் commandment என்றும் தமிழில் கட்டளை என்றும் பொருள் கொள்ளலாம். அதாவது, யோவான் நற்செய்தியில் இயேசு தம் சீடர்களுடைய பாதங்களைக் கழுவியபின், அவர்களோடு தம் இறுதி இரவு உணவை உண்ணுகையில், “புதிய கட்டளையை நான் உங்களுக்குக் கொடுக்கிறேன். நான் உங்களிடம் அன்பு செலுத்தியது போல நீங்களும் ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள்” (லூக்.13,34) என்று கூறி அன்பினால் கட்டப்பட்ட ஒரு புதிய இறைச் சமூகத்தைக் கட்டியெழுப்ப அழைக்கின்றார்.
மேலும், Maundy என்கின்ற ஆங்கில வார்த்தையானது maundsor baskets என்கின்ற சொல்லாடலிலிருந்து வந்ததாகும். அதாவது இந்த நாளில் இங்கிலாந்து அரசர்கள் சில ஏழைகளுக்கு உணவு, உடை மற்றும் சிறு நிதி உதவியை இந்த maundsor basket பரிசுப் பையில் வைத்து வழங்குவது வழக்கமாக இருந்துவந்தது. இந்த வார்த்தையானது mendier என்ற பிரெஞ்சு வார்த்தையைக் குறிக்கிறது. அதாவது, Mendicare என்ற இலத்தீன் மொழியிலிருந்து வரும் இந்த வார்த்தையின் அர்த்தம் “பிச்சை கேட்டல்” என்பதாகும். கிறித்தவ பாரம்பரியத்தில் இந்த நாளில் ஏழைகளுக்கு உதவுவது வழக்கத்தில் இருந்து வந்துள்ளது. கி.பி. 597-ல் புனித அகுஸ்தினார் இந்நாளில் ஏழைகளுக்கு பொருளுதவி வழங்கினார் என்ற குறிப்புகளும் நமக்குக் கிடைத்திருக்கிறது. இன்றும்கூட நமது சமூகத்தில் பல இடங்களில் குறிப்பாக கிராமங்களில் இந்த நாளில் ஏழைகளுக்கும் அநாதைகளுக்கும் அன்னதானமிடுவதையும் இந்த தவக்காலத்தில் தாங்கள் தங்களுடைய ஒறுத்தல் முயற்சிகளால் சேமித்த பணத்தை வைத்து ஏழைகளுக்கு உதவுவதையும் நாம் காண முடியும்.
பாதம் கழுவுதல் சடங்கு
பாதம் கழுவுதல் சடங்கு மற்றும் இயேசு நற்கருணையை ஏற்படுத்தும் அந்த இறுதி இராவுணவுக் கொண்டாட்டம் இந்த இரண்டு நிகழ்வுகளையும் வெவ்வேறாகப் பிரித்துப் பார்க்காமல் ஒன்றை மற்றதோடு தொடர்புபடுத்தியும் ஒப்பிட்டும் பார்க்கின்றபொழுது இந்தக் கொண்டாட்டங்களுடைய முழுமையான அர்த்தங்களை நாம் நன்கு புரிந்துகொள் முடியும் மற்றும் அந்தப் புரிதல், இந்த வழிபாட்டுக் கொண்டாட்டங்களை நம் வாழ்வாக்க உதவும்.
பாதம் கழுவுதல் சடங்கானது காலணி அணிகின்ற வழக்கத்தைக் கொண்டிருந்த கிட்டத்தட்ட எல்லா நாகரீகங்களிலுமே விருந்தோம்பலுக்கானதொரு வழக்கமாக இருந்து வந்துள்ளது. யூதச் சமூகத்தில் ஒரு விருந்தினர் வருகின்றபொழுது அவரை வரவேற்கின்ற விதமாக அடிமைவேலை செய்கின்ற ஒரு வேலையாள் அந்த விருந்தினருடைய பாதங்களைக் கழுவுவதும் விருந்தளிப்பவர் விருந்தினருக்கு பருக நீர் தருவதும் வழக்கத்தில் இருந்தது. இதை நாம் பழைய ஏற்பாட்டிலும் புதிய ஏற்பாட்டிலும் பல இடங்களில் வாசிக்கலாம். இன்றும்கூட ஒருசில பண்டைய சமூகங்களில் இது வழக்கத்தில் இருக்கலாம். நம் தழிழ் சமூகத்தில் ஒரு விருந்தினர் வந்தவுடன் அவர் முகம் கழுவ தண்ணீர் தந்து அவருடைய களைப்பைப் போக்கும் விதமாக முதலில் ஒரு குவளைத் தண்ணீரையோ அல்லது குளிர் பானங்களையோ தருவதை நாம் இன்றும் கவனிக்கலாம்.
இயேசு, சீடர்களுடைய பாதங்களை ஏன் கழுவினார்?
இன்று நாம் செய்கின்ற பாதம் கழுவுதல் நிகழ்வானது ஒரு சடங்காக மட்டுமே பார்க்கப்படுகின்றது. இயேசு எந்த நோக்கத்திற்காக அதைச் செய்தாரோ அந்த நோக்கம் பல நேரங்களில், பல இடங்களில் கவனத்தில் கொள்ளப்படுவதில்லை. எனவே, இயேசு ஏன் தம் சீடர்களுடைய பாதங்களைக் கழுவினார் என்பதைப் பற்றி இந்நாளில் சிந்திப்போம்.
Source: New feed