ஃபிரான்ஸ் அரசர் :
(King of France)
பிறப்பு : ஏப்ரல் 25, 1214
பொய்ஸ்ஸி, ஃபிரான்ஸ்
(Poissy, France)
இறப்பு : ஆகஸ்ட் 25, 1270 (வயது 56)
டுனிஸ், வட ஆபிரிக்கா
(Tunis, North Africa)
புனிதர் பட்டம் : 1297
திருத்தந்தை எட்டாம் போனிபாஸ்
புனிதர் லூயிஸ் என பொதுவாக அறியப்படும் ஒன்பதாம் லூயிஸ், ஒரு பிரெஞ்ச் நாட்டு மன்னரும், கிறிஸ்தவ புனிதரும் ஆவார். தமது தந்தையான “எட்டாம் லூயிஸின்” (Louis VIII the Lion) மரணம் காரணமாக பன்னிரண்டு வயதிலேயே முடிசூடிக்கொண்டார். இருப்பினும், இவருக்கு வயது வரும்வரை, இவரது தாயாரான “ப்லான்ச்” (Blanche of Castile) நாட்டை ஆண்டார். “ப்லான்ச்” கலகக்கார குடிமக்களின் எதிர்ப்பை கையாண்டார்.
ஒன்பதாம் லூயிஸின் தாயார் இளவரசி “ப்லான்ச்”, தமது மகனை தலைமைக் குணங்களுடைய ஒரு நல்ல கிறிஸ்தவராக வளர்த்தார். அவர் தமது மகனிடம், “மகனே, நான் உன்னை மிகவும் அன்பு செய்கிறேன். ஒரு தாய் தமது மகனை எவ்வளவு அன்பு செய்ய இயலுமோ, அவ்வளவு அன்பு செய்கிறேன். ஆனால், ஒரு சாவான பாவமதைச் செய்வதைக்காட்டிலும், நீ என் காலடிகளிலேயே செத்துவிடுவது நல்லது” (I love you, my dear son, as much as a mother can love her child; but I would rather see you dead at my feet than that you should ever commit a mortal sin) என்று அடிக்கடி கூறுவார்.
லூயிஸ், “ப்ரோவென்ஸ்” (Provence) பிரபுவின் மகளான “மார்கரெட்டை” (Margaret of Provence) 1234ம் ஆண்டு, மே மாதம், 27ம் தேதி திருமணம் செய்தார். இருவரும் இனிமையாக வாழ்க்கை நடத்தினர்.
லூயிசுக்கு 15 வயது நடக்கையில், இருபது வருடங்களாக நடைபெற்று வந்த “அல்பிஜென்சியன் சிலுவைப்போரை” (Albigensian crusade), “பிரபு ஏழாம் ரேமண்ட்” (Count Raymond VII) என்பவருடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில், அவரது தாயார் முடிவுக்கு கொண்டு வந்தார்.
லூயிஸ், இரண்டு சிலுவைப்போர்களில் பங்கேற்றார். 1248ம் ஆண்டு, 30 வயதில், “ஏழாவது சிலுவைப்போருக்கு” (Seventh Crusade) சென்றார். மீண்டும், 1270ம் ஆண்டு, 50 வயது நடக்கையில் “எட்டாம் சிலுவைப்போருக்கு” (Eighth Crusade) சென்றார்.
ஆட்சிப்பொறுப்பேற்ற ஒன்பதாம் லூயிஸ், “ஹக்” (Hugh X of Lusignan) மற்றும் “பீட்டர்” (Peter of Dreux) போன்ற மிகச் சக்தி வாய்ந்த அரசர்கள் மற்றும் பிரபுக்கள் சிலருடன் தொடர்ச்சியான மோதல்களை எதிர்கொண்டார். அதே நேரத்தில், இங்கிலாந்து மன்னனான மூன்றாம் ஹென்றியும் (Henry III of England) தமது கண்டம் சார்ந்த சொத்துக்களை தக்கவைத்துக்கொள்வதற்காக முயற்சித்தான். ஆனால், (Battle of Taillebourg) போரில் தோல்வி கண்டான். ஒன்பதாம் லூயிஸின் ஆட்சி, “நார்மண்டி” (Normandy), “மைன்” (Maine), மற்றும் “புரோவென்ஸ்” (Provence) போன்ற பல மாகாணங்களை இணைத்துக்கொண்டது.
ஒன்பதாம் லூயிஸ், ஒரு சிறந்த சீர்திருத்தவாதியாவார்; மற்றும் பிரெஞ்சு அரசியலமைப்பையும் நீதித்துறையையும் அபிவிருத்தி செய்தார். இதில், அரசனே உச்ச நீதியரசராவார். நாட்டின் எந்தவொரு பிரஜையும் எந்த தீர்ப்பையும் மாற்றியமைக்க விண்ணப்பிக்கும் உரிமையையும் கொடுத்தார். புராதன நடைமுறையான கடும் சோதனைகள் மூலம் வழக்கு விசாரணைகல் செய்வதை தடை செய்தார். குடும்பங்கள், வாரிசுகள், இனங்கள், சமூக குழுக்கள் ஆகியவற்றினிடையே காலம் காலமாக இருந்துவந்த சண்டைகளை தடை செய்ய முயற்சிகள் செய்தார். இந்த புதிய சட்ட முறையின் சரியான பயன்பாட்டை செயல்படுத்துவதற்கு, ஒன்பதாம் லூயிஸ் ஸ்தாபகர்களையும், உயர்நீதிமன்றங்களையும் உருவாக்கினார்.
ஒரு கடுமையான நோய்க்கு பிறகு எடுத்துக்கொண்ட உறுதிமொழியின்படி, அற்புதமாக குணமானார். சிகிச்சையின் பின்னர் உறுதிபடுத்தப்பட்ட ஒன்பதாம் லூயிஸ், ஏழாவது மற்றும் எட்டாவது சிலுவைப்போர்களில் பங்கு பெற்றார், இதில் அவர் வயிற்ருக்கடுப்பு மற்றும் வயிற்றுப்போக்கினால் மரித்தார். அவருக்குப்பின்னர், அவரது மகனான “மூன்றாம் பிலிப்” (Philip III) ஆட்சிப் பொறுப்பேற்றார்.
ஒன்பதாம் லூயிஸின் செயல்பாடுகளும் நடவடிக்கைகளும் கிறிஸ்தவ மதிப்பு மற்றும் கத்தோலிக்க பக்தியால் ஊக்கமளிக்கப்பட்டன. தெய்வ நிந்தனை, சூதாட்டம், வட்டி ஈட்டும் கடன்கள் மற்றும் விபச்சாரம் ஆகியவற்றை தடை செய்ததுடன், அவற்றில் ஈடுபடுபவர்களை தண்டிக்கவும் செய்தார். அவர் விசாரணைகளின் நோக்கங்களை விரிவுபடுத்தினார்.