ஓர் அருளாளர், இரு இறையடியார் ஆகியோரின் பரிந்துரைகளால் நிகழ்ந்த புதுமைகளையும், இறையடியார் நால்வரின் சாட்சிய மரணங்களையும், இரு இறையடியாரின் புண்ணியத்துவ வாழ்வையும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ஏற்றுக்கொண்டு, அவர்களை, புனிதர்களாகவும், அருளாளர்களாகவும் உயர்த்தும் வழிமுறைகளுக்கு ஒப்புதல் அளித்துள்ளார்.
புனிதர் மற்றும் அருளாளர்களாக உயர்த்தப்படும் வழிமுறைகளை ஒருங்கிணைக்கும் பேராயத்தின் தலைவரும், அண்மையில் கர்தினாலாக அறிவிக்கப்பட்டவர்களில் ஒருவருமான, பேராயர், மார்செல்லோ செமெராரோ (Marcello Semeraro) அவர்கள், அக்டோபர் 27, இச்செவ்வாய் பிற்பகலில், திருத்தந்தையைச் சந்தித்து, ஒன்பது பேரின் வாழ்வைக் குறித்த சிறப்பு விவரங்களை சமர்ப்பித்தார்.
இத்தாலியின் நேபிள்ஸ் நகரில் 1891ம் ஆண்டு பிறந்து, ‘தெய்வீக அழைப்புகள்’ என்ற பெயரில் இருபால் துறவியர் சபைகளை உருவாக்கிய, அருளாளர் Giustino Maria Russolillo என்ற அருள்பணியாளரின் பரிந்துரையால் நிகழ்ந்த புதுமையை ஏற்றுக்கொண்ட திருத்தந்தை, அவர் புனிதராக உயர்த்தப்படுவதற்கு ஒப்புதல் வழங்கினார்.
அதேவண்ணம், 15ம் நூற்றாண்டில் வாழ்ந்து, குணமாக்கமுடியாத நோயுற்றோருக்கு, நேபிள்ஸ் நகரில் மருத்துவமனையொன்றை உருவாக்கிய Maria Lorenza Requenses என்ற இறையடியாரின் பரிந்துரையால் நிகழ்ந்த புதுமையையும் ஏற்றுக்கொண்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவர், அருளாளராக உயர்த்தப்படுவதற்கு ஒப்புதல் வழங்கினார்.
இறையடியாளர்களான Leonardo Melki, Thomas Saleh, Luigi Lenzini என்ற மூன்று அருள்பணியாளர்களும், பொதுநிலையினரான இறையடியார், Isabella Cristina Mrad Campos என்ற பெண்மணியும், கொல்லப்பட்ட நிகழ்வுகள், மறைசாட்சிய மரணங்கள் என்று ஏற்றுக்கொண்ட திருத்தந்தை, இவர்கள் அருளாளர்களாக அறிவிக்கப்படுவதற்கு ஒப்புதல் வழங்கினார்.
மேலும், ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் திருக்காயங்கள் சபையைச் சேர்ந்த இறையடியார் Roberto Giovanni என்ற சகோதரர், இயேசுவின் திரு இருதயத்தின் பணிப்பெண்கள் என்ற துறவு சபையை நிறுவியவர்களில் ஒருவரான இறையடியார் Maria Teresa என்ற அருள் சகோதரி ஆகியோரின், புண்ணியமிக்க வாழ்வையும் திருத்தந்தை ஏற்றுக்கொண்டு, இவர்கள் அருளாளர்களாக அறிவிக்கப்படுவதற்கு ஒப்புதல் வழங்கினார்.
Source: New feed