அயர்லாந்தில் கடந்த வாரம் இடம்பெற்ற உலக குடும்பங்கள் மாநாட்டையொட்டி,சனி, ஞாயிறு தினங்களில் அந்நாட்டில் திருத்தூதுப்பயணம் மேற்கொண்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவரகள், இப்புதன் மறைக்கல்வி உரையில், அத்திருத்தூதுப்பயணம் குறித்தே பகிர்ந்துகொண்டார்.
அன்பு சகோதரர், சகோதரிகளே, கடந்த வாரம் நான் அயர்லாந்தில் உலக குடும்பங்களின் ஒன்பதாவது மாநாட்டில் கலந்துகொண்டேன். இம்மாநாட்டின் தலைப்பாக, ‘குடும்பங்களின் நற்செய்தி, உலகிற்கு மகிழ்வு’ என்பது இருந்தது. உலகம் முழுவதும் இருந்து கணவர்கள், மனைவிகள், குழந்தைகள் என, பலர் ஒன்றிணைந்து வந்து, திருமணம் மற்றும் குடும்ப வாழ்வு குறித்த இறைவனின் அன்புத் திட்டத்திற்கு சாட்சிகளாக இருந்தனர். ஒன்றுக்கொன்று வேறுபட்ட பல்வேறு சூழல்களில் வாழும் குடும்பங்கள் முன்வந்து ஒருமைப்பாடு, ஒப்புரவு, அன்பு, விசுவாசம் போன்றவைகளுக்கு சாட்சியம் பகர்ந்ததைக் கண்டு வெகுவாக ஈர்க்கப்பட்டேன். அரசு அதிகாரிகளுடனான என் சந்திப்பின்போது, குடும்பங்களுக்கு ஆதரவு வழங்கப்பட வேண்டிய தேவை குறித்து வலியுறுத்தினேன். அதேவேளை, பேராலயத்திலும், ஃபீனிக்ஸ் பூங்காவிலும் இடம்பெற்ற சந்திப்புக்களின்போது, கடவுளின் அன்பெனும் கொடையை நம்முள் வளர்க்க வேண்டியது குறித்தும், விசுவாசத்தை தலைமுறை தலைமுறையாக எடுத்துச் செல்ல வேண்டிய குடும்பங்களின் பங்கு குறித்தும் எடுத்துரைத்தேன். இந்த பங்களிப்பு, குடும்ப சந்திப்புகளில் தாத்தா, பாட்டிகள், பெற்றோர் மற்றும் குழந்தைகள் இடையேயான தினசரி கலந்துரையாடல்களில் இடம்பெறவேண்டும் என்றேன். Knock திருத்தலத்தில், அனைத்துக் குடும்பங்களையும் அன்னை மரியாவின் கரங்களில் அர்ப்பணித்ததோடு, வட அயர்லாந்து மக்களுக்கு இன்முக வாழ்த்துக்களையும் வெளியிட்டேன். திருஅவையில் சில அருள்பணியாளர்களால், சிறாரும் இளையோரும் பாலியல் வகையில் தவறாகப் பயன்படுத்தப்பட்டது என்பது, என் திருப்பயண மகிழ்வைச் சோகத்தால் திரையிட்டது. இந்த பெரும் தவறுகளுக்காக நான் மன்னிப்பைக் கேட்டதோடு, இத்தகைய தவறுகள் மீண்டும் இடம்பெறாதிருக்கும் வகையான முயற்சிகளுக்கு என் ஆதரவையும் வழங்கினேன். 2021ம் ஆண்டு உரோம் நகரில் இடம்பெற உள்ள அடுத்த உலக குடும்பங்கள் மாநாட்டை நோக்கி நம் பார்வைகளை திரும்பியுள்ள நிலையில், உலகமனைத்திலுமுள்ள குடும்பங்கள், விசுவாசத்திலும், அன்பிலும், மறைப்பணி ஆர்வத்திலும் சிறந்து விளங்கி, உண்மையிலேயே தங்கள் நோக்கமான, ‘உலகிற்கான மகிழ்வு’ என்பதை அடைய வேண்டும் என செபிப்போம்.
தன் மறைக்கல்வி உரையின் இறுதியில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வரும் முதல் தேதி, அதாவது, இச்சனிக்கிழமையன்று சிறப்பிக்கப்பட உள்ள, ‘படைப்பின் மீதான அக்கறைக்கான நான்காவது உலக செப நாள்’ குறித்தும் எடுத்துரைத்தார். ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவ சபை சகோதரர்களுடனும், ஏனைய கிறிஸ்தவ சபைகளின் ஆதரவுடனும் சிறப்பிக்கப்படும் இந்நாளில் தண்ணீர் பாதுகாப்பு குறித்தும், அது அனைவருக்கும் கிடைக்க வழி செய்ய வேண்டும் எனவும் சிறப்பான விதத்தில் செபிக்குமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன் என விண்ணப்பித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
பின் அனைவருக்கும் தன் அப்போதலிக்க ஆசீரையும் அளித்தார்.