புதன் மறைக்கல்வியுரை: குரலெழுப்பிச் சொல்லும் செபம்

கொரோனா பெருந்தொற்றின் இரண்டாவது அலை, முதல் அலையைவிட வீரியம் கொண்டிருக்கும் இக்காலக்கட்டத்தில், இத்தாலிய அரசின் இப்பெருந்தொற்று கட்டுப்பாட்டு விதிமுறைகளுக்கு உட்பட்டு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஏப்ரல் 21, இப்புதன் மறைக்கல்வியுரையையும், வத்திக்கானில் தன் நூலக அறையிலிருந்தே வழங்கினார். இந்த உரை, வத்திக்கானின் ஊடகத் துறையினால் நேரடி ஒலி, ஒளிபரப்பு செய்யப்பட்டது. கடந்த பல வாரங்களாக, இறைவேண்டலை மையப்படுத்தி, தன் புதன் மறைக்கல்வியுரைகளை வழங்கிவரும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இப்புதனன்று குரலெழுப்பிச் சொல்லும் இறைவேண்டல் பற்றி எடுத்துரைத்தார். ஆண்டவரே! ஆழ்ந்த துயரத்தில் இருக்கும் நான் உம்மை நோக்கி மன்றாடுகிறேன் என்று துவங்கும் திருப்பாடல் 130லிருந்து, முதல் ஐந்து வரிகள், அராபிய மொழி உட்பட ஐரோப்பிய மொழிகளில் முதலில் வாசிக்கப்பட்டன.

  • ஆண்டவரே! ஆழ்ந்த துயரத்தில் இருக்கும் நான் உம்மை நோக்கி மன்றாடுகிறேன்;
  • ஆண்டவரே! என் மன்றாட்டுக்குச் செவிசாய்த்தருளும்; என் விண்ணப்பக் குரலை உம்முடைய செவிகள் கவனத்துடன் கேட்கட்டும்.
  • ஆண்டவரே! நீர் எம் குற்றங்களை மனத்தில் கொண்டிருந்தால், யார்தான் நிலைத்து நிற்க முடியும்?
  • நீரோ மன்னிப்பு அளிப்பவர்; மனிதரும் உமக்கு அஞ்சி நடப்பர்.
  • ஆண்டவருக்காக ஆவலுடன் நான் காத்திருக்கின்றேன்; என் நெஞ்சம் காத்திருக்கின்றது; அவரது சொற்களுக்காக ஆவலுடன் காத்திருக்கின்றேன். (தி.பா.130,1-5)

பின்னர், திருத்தந்தை, இப்புதன் மறைக்கல்வியுரையைத் தொடங்கினார்.

திருத்தந்தையின் புதன் மறைக்கல்வியுரை

அன்பு சகோதரர்களே, சகோதரிகளே, கிறிஸ்தவ இறைவேண்டல் பற்றிய நமது மறைக்கல்வித் தொடரில், குரலெழுப்பிச் சொல்லும் இறைவேண்டலின் முக்கியத்துவம் குறித்து, இன்று சிந்திப்போம். கடவுள் நம்மோடு மேற்கொள்ளும் உரையாடலில், முதலில், இறைவார்த்தையான, மனிதஉரு எடுத்த, தம் சொந்த மகன் இயேசு வழியாகவே பேசினார். நம்மையும், நமது உள்ளார்ந்த எண்ணங்கள், உணர்ச்சிகள், மற்றும், அனுபவங்கள் ஆகியவற்றைக் குறிக்கும் வார்த்தைகளால், அவரோடு பேசுவதற்கு அழைக்கிறார். வார்த்தைகள், நம் கருத்துக்களை வெளிப்படுத்துவது மட்டுமல்லாமல், பலநேரங்களில், அவை நம்மை வடிவமைக்கின்றன, மற்றும், நம்மையே நமக்கு உணர்த்துகின்றன. நல்தூண்டுதல் வார்த்தைகளைக் கொண்டிருக்கும்  திருப்பாடல்கள் நூலில், குரலெழுப்பிச் சொல்லும் செபத்திற்கு எடுத்துக்காட்டை நாம் காண்கிறோம். நம் மகிழ்வுகள், அச்சங்கள், நம்பிக்கைகள், தேவைகள் ஆகிய அனைத்தையும் கடவுளிடம் எடுத்துச்செல்லும் வார்த்தைகளையும், நம் வாழ்வின் அனைத்து அம்சங்களையும் அவரோடு பகிர்ந்துகொள்ளும் வார்த்தைகளையும், திருப்பாடல் ஆசிரியர் நமக்குக் கொடுத்திருக்கிறார். இதயத்தின் இறைவேண்டலும், நம் இதழ்களால் எழுப்பும் இறைவேண்டலும், ஒருபோதும் பிரிக்கமுடியாதவை. கத்தோலிக்க மறைக்கல்வி ஏடு சொல்வதுபோல, “குரலெழுப்பிச் சொல்லும் இறைவேண்டல், கிறிஸ்தவ வாழ்வுக்கு ஒரு முக்கியமான அம்சமாகும்” (எண்.2701). தனியாகவோ அல்லது, பொதுவிலோ, நம் குரல்களை எழுப்பி, அல்லது, பாடி இறைவனை வேண்டுவது வழியாக, கடவுளோடு  உள்ள நம் உறவில், ஒவ்வொரு நாளும், நாம் வளர்வதற்குரிய வார்த்தைகளைக் கண்டுகொள்கிறோம். எனவே, நாம் மூச்சு விடுவதற்கு அவசியமான காற்று போன்று, இறைவேண்டலும், நம் வாழ்வின் இன்றியமையாத ஒரு பகுதியாக, சப்தமின்றி மாறுகிறது. சீடர்கள், இயேசுவிடம், எவ்வாறு இறைவேண்டல் செய்வது என்று கேட்டபோது, அவரும், நம் வானகத்தந்தையே என்ற வார்த்தைகளால் இறைவேண்டல் எழுப்புமாறு பதில் அளித்தார். இயேசு நமக்கும் அவ்வாறே பதில் அளிக்கிறார்.

இவ்வாறு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், குரலெழுப்பிச் சொல்லும் இறைவேண்டல் பற்றிய, தன் இப்புதன் மறைக்கல்வியுரையை நிறைவுசெய்தார். பின்னர், நம் வானகத்தந்தையாம் கடவுளின் அன்பிரக்கம் நம் ஒவ்வொருவர் மீதும், நம் குடும்பங்கள் மீதும் பொழியப்படுமாறு செபித்து, அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

Source: New feed