மேரி தெரேசா – வத்திக்கான்
ஒரு முறை, இளம்பெண் ஆக்னசின் நண்பர் கூட்டத்தில் தீய சிந்தனைகொண்ட ஒருவர் இருப்பதை, அவரின் அன்னை கண்டார். அதை தன் மகளுக்கு, பக்குவமாய்ப் புரியவைக்க, அன்னை ஒரு நடைமுறை விளக்கம் கொடுத்தார். ஒரு நாள் ஒரு கூடை நிறைய ஆப்பிள் பழங்களையும், தனது கையில் ஓர் அழுகிய பழத்தையும் வைத்துக்கொண்டு மகளை அழைத்தார் அன்னை. மகள் வந்தவுடன், அந்த அழுகிய பழத்தை, நல்ல பழங்களுக்கு நடுவே கூடையில் வைத்தார் அன்னை. மகள் ஆக்னஸ் குழம்பினார். கெட்டதைக் கீழே விட்டுவிடலாமே என்றார் ஆக்னஸ். பரவாயில்லை. இதை உன் அறையில் பாதுகாத்து வை. நான் பார்க்கச் சொல்லும்வரை திறந்து பார்க்காதே என்றார் அன்னை. அன்னை சொல் தட்டிராத ஆக்னஸ், இதையும் தட்டவில்லை. சில நாட்களுக்குப்பின், மகளிடம், அந்தக் கூடையை எடுத்து வரச் சொன்னார் அன்னை. ஆக்னஸ் எடுத்துவந்த கூடையில், ஆப்பிள்கள் எல்லாம் அழுகிப் போயிருந்தன. சில நாள்களுக்கு முன்னால் ஒரு பழம் அழுகியிருந்தது. இப்போது எல்லாப் பழங்களும் அழுகியிருந்தன. அதைப் பார்த்த அன்னை, எல்லாப் பழங்களையும் வெளியே கொட்டு என்றார். ஆக்னசும் கொட்டினார். பின்னர் அன்னை மெதுவாகப் பேச ஆரம்பித்தார். மகளே, ஒரு கெட்டுப்போன ஆப்பிள், ஒரு கூடை ஆப்பிள்களையும் கெட்டுப்போக வைத்துவிட்டது. ஒரு கூடை ஆப்பிள்கள் சேர்ந்து, ஒரு ஆப்பிளை நல்ல ஆப்பிளாக்க முடியவில்லை. இப்படித்தான் நட்பும். தீய நட்பு, தூய உள்ளங்களையும் துருப்பிடிக்க வைக்கும். பணிவுள்ள மனங்களையும், கீழ்த்தரமானதைச் செய்ய வைக்கும். எனவே நட்பைத் தெரிந்தெடுப்பதில் கவனம் தேவை. அன்று அன்னை சொன்ன பாடம், மகள் ஆக்னசின் மனதில் ஆழமாய்ப் பதிந்தது. அதேபோல், ஒரு முறை வீட்டில் அமர்ந்து, நண்பர்களோடு பேசிக் கொண்டிருந்தார் ஆக்னஸ். அவர்களுள் ஒருவர், அங்கு இல்லாத ஒருவரைப் பற்றி அவதூறை அவிழ்த்து விட்டுக்கொண்டிருந்தார். இதைக் கேட்ட அன்னை, அறையில் எரிந்துகொண்டிருந்த விளக்கை அணைத்தார். உடனே ஆக்னஸ் ஏனம்மா? என்றார். புறணி பேசும் இடத்தில் வெளிச்சம் எதற்கு? இச்செயல்களுக்கு இருட்டே வெளிச்சம் என்றார் அன்னை. இத்தகைய அன்னையால் வளர்க்கப்பட்ட மற்றும் அன்னை சொல் தட்டாமல் வளர்ந்த இளம்பெண் ஆக்னஸ்தான், புனித அன்னை தெரேசா.