பிலிப்பைன்ஸ் நாட்டில் 2019ம் ஆண்டை இளையோர் ஆண்டாகச் சிறப்பிக்கத் தீர்மானித்துள்ளது, அந்நாட்டு கத்தோலிக்க ஆயர் பேரவை.
பிலிப்பைன்ஸ் நாட்டில் கிறிஸ்தவம் விதைக்கப்பட்டதன் 500ம் ஆண்டை முன்னிட்டு சிறப்பிக்கப்பட்டுவரும் ஒன்பது சிறப்பு ஆண்டுகளின் வரிசையில், ஏழாவது சிறப்பு ஆண்டாகிய, 2019ம் ஆண்டை இளையோர் ஆண்டாகச் சிறப்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர், அந்நாட்டு ஆயர்கள்.
இந்த இளையோர் ஆண்டு, திருவருகை காலத்தின் முதல் ஞாயிறாகிய வருகிற டிசம்பர் 2ம் தேதி ஆரம்பமாகி, 2019ம் ஆண்டு நவம்பர் 24ம் தேதி கிறிஸ்து அரசர் பெருவிழாவன்று நிறைவடையும் என்றும், ஆயர்கள் அறிவித்துள்ளனர்.
மேலும், “மறைப்பணியில் பிலிப்பைன்ஸ் இளையோர் : அன்புடையோர், திறமையுடையோர், வலுவுடையோர்” என்ற தலைப்பில், இந்த இளையோர் ஆண்டு சிறப்பிக்கப்படும் எனவும் ஆயர்களின் அறிக்கை கூறுகின்றது.
பிலிப்பைன்ஸ் ஆயர் பேரவை, 2013ம் ஆண்டில் இந்த ஒன்பது சிறப்பு ஆண்டு கொண்டாட்டத்தைத் தொடங்கினர். ஒவ்வோர் ஆண்டும் ஒரு தலைப்பில் சிறப்பிக்கப்பட்டுவரும் இந்தக் கொண்டாட்டங்கள் 2021ம் ஆண்டு நிறைவடையும். (UCAN)
Source: New feed