உங்கள் தந்தை இரக்கம் உள்ளவராய் இருப்பதுபோல, நீங்களும் இரக்கம் உள்ளவர்களாய் இருங்கள்.
லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 27-38
அக்காலத்தில் இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: “நான் சொல்வதைக் கேட்டுக்கொண்டிருக்கும் உங்களுக்குக் கூறுகிறேன்: உங்கள் பகைவரிடம் அன்புகூருங்கள்; உங்களை வெறுப்போருக்கு நன்மை செய்யுங்கள். உங்களைச் சபிப்போருக்கு ஆசி கூறுங்கள்; உங்களை இகழ்ந்து பேசுவோருக்காக இறைவனிடம் வேண்டுங்கள்.
உங்களை ஒரு கன்னத்தில் அறைபவருக்கு மறு கன்னத்தையும் திருப்பிக் காட்டுங்கள்.
உங்கள் மேலுடையை எடுத்துக் கொள்பவர் உங்கள் அங்கியையும் எடுத்துக்கொள்ளப் பார்த்தால் அவரைத் தடுக்காதீர்கள்; உங்களிடம் கேட்கும் எவருக்கும் கொடுங்கள். உங்களுடைய பொருள்களை எடுத்துக்கொள்வோரிடமிருந்து அவற்றைத் திருப்பிக் கேட்காதீர்கள்.
பிறர் உங்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்று விரும்புகிறீர்களோ, அதையே நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள்.
உங்களிடம் அன்பு செலுத்துவோரிடமே நீங்கள் அன்பு செலுத்தினால் உங்களுக்கு வரும் நன்மை என்ன? பாவிகளும் தங்களிடம் அன்பு செலுத்துவோரிடம் அன்பு செலுத்துகிறார்களே.
உங்களுக்கு நன்மை செய்பவர்களுக்கே நீங்கள் நன்மை செய்தால் உங்களுக்கு வரும் நன்மை என்ன? பாவிகளும் அவ்வாறு செய்கிறார்களே.
திரும்பப் பெற்றுக் கொள்ளலாம் என எதிர்பார்த்து நீங்கள் கடன் கொடுத்தால் உங்களுக்கு வரும் நன்மை என்ன? ஏனெனில், முழுவதையும் திரும்பப் பெற்றுக் கொள்ளலாம் என்னும் நோக்குடன் பாவிகளும் பாவிகளுக்குக் கடன் கொடுக்கிறார்களே.
நீங்கள் உங்கள் பகைவரிடமும் அன்பு செலுத்துங்கள்; அவர்களுக்கு நன்மை செய்யுங்கள்; திரும்பக் கிடைக்கும் என எதிர்பார்க்காமல் கடன் கொடுங்கள். அப்போது உங்கள் கைம்மாறு மிகுதியாய் இருக்கும். நீங்கள் உன்னத கடவுளின் மக்களாய் இருப்பீர்கள்.
ஏனெனில் அவர் நன்றிகெட்டோருக்கும் பொல்லாதோருக்கும் நன்மை செய்கிறார். உங்கள் தந்தை இரக்கம் உள்ளவராய் இருப்பதுபோல நீங்களும் இரக்கம் உள்ளவர்களாய் இருங்கள்.
பிறர் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளிக்காதீர்கள்; அப்போதுதான் நீங்களும் தீர்ப்புக்கு உள்ளாகமாட்டீர்கள்.
மற்றவர்களைக் கண்டனம் செய்யாதீர்கள்; அப்போதுதான் நீங்களும் கண்டனத்துக்கு ஆளாக மாட்டீர்கள்.
மன்னியுங்கள்; மன்னிப்புப் பெறுவீர்கள். கொடுங்கள்; உங்களுக்குக் கொடுக்கப்படும்; அமுக்கிக் குலுக்கிச் சரிந்து விழும்படி நன்றாய் அளந்து உங்கள் மடியில் போடுவார்கள். நீங்கள் எந்த அளவையால் அளக்கிறீர்களோ அதே அளவையால் உங்களுக்கும் அளக்கப்படும்.”
ஆண்டவரின் அருள்வாக்கு.
——————————————–
பொதுக்காலம் ஏழாம் ஞாயிறு
(1சாமுவேல் 26:2,7-9, 12-13, 22-23; 1கொரிந்தியர் 15:45-49; லூக்கா 6:27-38)
உன்னதக் கடவுளின் மக்கள் யார்?
நிகழ்வு
முன்பொரு காலத்தில் ப்ரோகுளுஸ் என்றொரு செல்வந்தர் இருந்தார். அவரிடத்தில் ஏராளமான அடிமைகள் இருந்தார்கள். அந்த அடிமைகளில் பாலுஸ் என்ற அடிமையை அவருக்கு மிகவும் பிடிக்கும். பாலுஸ் தன்னுடைய கடமைகளில் மிகவும் பொறுப்புள்ளவனாகவும் நம்பிக்கைக்குரியவனாகவும் இருந்தான். அதனாலேயே அவனை ப்ரோகுளுஸிக்கு மிகவும் பிடித்துப் போனது.
ஒருநாள் ப்ரோகுளுஸ் தன்னோடு பாலூசையும் கூட்டிக்கொண்டு, புதிதாக அடிமைகளை விலைக்கு வாங்க அடிமைச்சந்தைக்குச் சென்றார். அடிமைகளை ஏலத்திற்கு விடுவதற்கு முன்பு இருவரும் எந்தெந்த அடிமைகளையெல்லாம் விலைக்கு வாங்கலாம் என்று ஒரு பார்வை பார்க்க அடிமைச் சந்தைக்குள்ளே சென்றனர். அப்படிச் செல்லும்போது மெலிந்த தேகத்துடன் வயதான ஒருவர் காணப்பட்டார். அவரைப் பார்த்ததும் பாலுஸ் தன் எஜமானரிடம், “ஐயா! இந்த அடிமையை நாம் விலைக்கு வாங்குவோம்… இவர் இரண்டாள் வேலையைச் செய்வார்” என்றார். “பாலுஸ்! நீ சுயநினைவோடுதான் பேசுகிறாயா… இந்த ஆளைப் பார்ப்பதற்கே மிகவும் பரிதாபமாக இருக்கின்றது… அப்படியிருக்கும்போது இவர் இரண்டாள் வேலையைச் செய்திடுவார் என்று சொல்கிறாயே… எது எப்படி” என்று இழுத்தார் ப்ரோகுளுஸ்.
“ஐயா! இவரைப் பார்ப்பதற்குத்தான் அப்படியிருக்கின்றது. ஆனால், இவர் இரண்டாள் வேலையைச் செய்யக்கூடியவர் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது” என்று உறுதியாகச் சொன்னான் பாலுஸ். “சரி, நீ சொல்லிவிட்டாய் என்பதற்காக வாங்குகிறேன்” என்று அடிமைகள் ஏலம் விடப்பட்ட நேரத்த்தில் ப்ரோகுளுஸ், மெலிந்த தேகத்தோடு இருந்த அந்த வயதான அடிமையை விலைக்கு வாங்கிக்கொண்டு போனார்.
நாட்கள் மெல்ல நகர்ந்தன. பாலுஸ் தன் எஜமானர் ப்ரோகுளுஸிடம் சொன்னதுபோன்றே அந்த அடிமை வந்தபிறகு இருமடங்கு வேலைகள் நடந்தன. இது ப்ரோகுளுஸிற்கு ஆச்சரியமாக இருந்தன. ‘வயதான, அதுவும் மெலிந்த தேகத்தோடு இருக்கும் அந்த மனிதரால் எப்படி இருமடங்கு வேலைகள் நடைபெறுகின்றன?… அது எப்படி என்று பார்த்துவிடுவோம்’ என்று ப்ரோகுளுஸ் அந்த மனிதரைக் கூர்ந்து கவனிக்கத் தொடங்கினார். அப்போதுதான் தெரிந்தது, நடந்த வேலைகள் அனைத்தும் அந்தப் பெரியவர் செய்யவில்லை…. பாலுஸ்தான் செய்கிறான் என்று. அது மட்டுமல்லாமல், பாலுஸ் மற்ற எல்லா அடிமைகளை விடவும் வயதான அந்த அடிமையை அதிக அக்கறையோடு கவனிப்பதும் தெரியவந்தது.
உடனே ப்ரோகுளுஸ் பாலுசை அழைத்து, “இந்தப் பெரியவர்மீது இவ்வளவு அக்கறை காட்டுகிறாயே! இவரென்ன உன்னுடைய தந்தையா?… உறவுக்காரரா?… இல்லை தெரிந்தவரா?” என்றார். அதற்கு பாலுஸ், “இவர் என்னுடைய தந்தையோ, உறவுக்காரோ, தெரிந்தவரோ இல்லை. இவர் எனக்கு எதிரி!… சிறுவயதில் நானும் என்னோடு பிறந்தவர்களும் என் தந்தையோடு மகிழ்ச்சியாக வாழ்ந்துகொண்டிருந்தபோது, இவர் எங்களுடைய தந்தையைக் கொன்றுவிட்டு, எங்கள் அனைவரையும் அடிமைகளாக விற்றுவிட்டார்… ஆனாலும் கிறிஸ்தவராகிய எனக்கு இவரை அடிமைச் சந்தையில் பார்த்தபோது பழிவாங்கத் தோன்றவில்லை. மாறாக, இவருக்கு நல்லது செய்யத் தோன்றியது. அதனால்தான் இவரை இங்கு அழைத்துக்கொண்டு வந்து, இவர்மீது தனிப்பட்ட அன்பு கட்டி வருகிறேன்” என்றான்.
பாலுஸ் இவ்வாறு பேசுவதைக் கேட்ட அவனுடைய எஜமானன் ப்ரோகுளுஸ், ‘இப்படியெல்லாம் பகைவர்களை மன்னித்து அன்புசெய்யும் மனிதர்கள் இருப்பார்களா?’ என்று பாலுசைப் பார்த்து வியந்து நின்றார்.
பொதுக்காலத்தின் ஏழாம் ஞாயிற்றுகிழமையில் இருக்கும் நமக்கு, இன்றைய நாளில் நாம் படிக்கக்கேட்ட நற்செய்தி வாசகம், நம்மை உன்னதக் கடவுளின் மக்களாக வாழவதற்கு அழைப்புத் தருகின்றது. அதற்கு நாம் என்ன செய்வது என்று இப்போது சிந்தித்துப் பார்ப்போம்.
வன்முறைசெய்வோர் கடவுளின் மக்களாக முடியாது
இந்த உலகத்தில் மூன்று விதமான மனிதர்கள் இருக்கிறார்கள். அதில் முதலாவது வகையினர், வன்முறையாளர்கள். இப்படிப்பட்டவர்கள் ‘அடித்தால் திரும்பி அடிக்கவேண்டும்’, ‘ஒரு கண்ணை எடுத்தால் பதிலுக்கு ஒரு கண்ணை எடுக்கவேண்டும்’ என்ற மனநிலையோடு செயல்படக்கூடியவர்கள். இவர்களுடைய எண்ணமெல்லாம் வன்முறையால்தான் விடிவு வரும் என்பதாகும். இயேசுவின் காலத்தில் வாழ்ந்த தீவிரவாதக் குப்பலை இதற்கு எடுத்துக்காட்டாகச் சொல்லலாம்.
இவர்களுடைய எண்ணத்தின்படி, வன்முறைக்கு வன்முறைதான் தீர்வு என்றால், இந்த உலகத்தில் யாரும் இருக்க முடியாது அல்லது முள்ளை முள்ளால்தான் எடுக்கவேண்டும் என்றால், கண்ணில் விழுந்த முள்ளை முள்ளால் எடுக்குமா?. சாத்தியமில்லைதானே, அதுபோலத்தான் இந்த உலகத்தில் அமைதி பிறக்க வன்முறை ஒருபோதும் தீர்வாக இருக்காது; வன்முறையாளர்கள் உன்னதக் கடவுளின் மக்களாகவும் முடியாது.
எதையும் எதிர்பார்த்து அன்பு செய்பவர்கள் கடவுளின் மக்களாக முடியாது
Source: New feed