
காது கேளாதோர் கேட்கவும், பேச்சற்றோர் பேசவும், ஆண்டவர் செய்கிறார்.
மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 7: 31-37
இயேசு தீர் பகுதியை விட்டு, சீதோன் வழியாகச் சென்று தெக்கப்பொலி பகுதி நடுவே வந்து, கலிலேயக் கடலை அடைந்தார். காது கேளாதவரும் திக்கிப் பேசுபவருமான ஒருவரைச் சிலர் அவரிடம் கொண்டு வந்து, அவர்மீது கை வைத்துக் குணமாக்குமாறு அவரை வேண்டிக்கொண்டனர். இயேசு அவரைக் கூட்டத்திலிருந்து தனியே அழைத்துச் சென்று, தம் விரல்களை அவர் காதுகளில் இட்டு, உமிழ் நீரால் அவர் நாவைத் தொட்டார்; பிறகு வானத்தை அண்ணாந்து பார்த்து, பெருமூச்சு விட்டு, அவரை நோக்கி, “எப்பத்தா” அதாவது `திறக்கப்படு’ என்றார்.
உடனே அவருடைய காதுகள் திறக்கப்பட்டன; நாவும் கட்டவிழ்ந்தது. அவர் தெளிவாகப் பேசினார். இதை எவருக்கும் சொல்ல வேண்டாமென்று அவர்களுக்கு அவர் கட்டளையிட்டார். அவரது கட்டளைக்கு நேர்மாறாக இன்னும் மிகுதியாய் அவர்கள் அதை அறிவித்து வந்தார்கள். அவர்கள் அளவு கடந்த வியப்பில் ஆழ்ந்தவர்களாய், “இவர் எத்துணை நன்றாக யாவற்றையும் செய்து வருகிறார்! காது கேளாதோர் கேட்கவும் பேச்சற்றோர் பேசவும் செய்கிறாரே!” என்று பேசிக்கொண்டார்கள்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
மைய சிந்தனை .
மாற்றுத்திறனாளிகளை மாண்போடு நடத்துவோம் (மாற்கு 7: 31-37)
மறையுரை .
ஒரு நகரில் ஸ்பெஷல் சில்ட்ரன் எனப்படும் மாற்றுத் திறனாளிகளை வைத்து பள்ளிக்கூடம் நடத்தி வந்தார் ஒரு பெண். ஒருநாள் அவர் தன்னுடைய பள்ளிக்கூடத்தில் இருந்த குழந்தைகளையெல்லாம் சர்க்கஸ் நிகழ்ச்சிக்குக் கூட்டிக்கொண்டு போனார். குழந்தைகளும் நிகழ்ச்சியை ஆனந்தமாய் பார்த்து ரசித்தார்கள்.
நிகழ்ச்சி முடிந்ததும் அவர்களைப் பத்திரமாக அழைத்துக்கொண்டு வந்த அவர், “சர்க்கஸ் எப்படி இருந்தது?” என்று அவர்களிடம் கேட்டார். அப்பொழுது அன்பு என்ற ஒரு பார்வையற்ற சிறுவன் எழுந்து, “சர்க்கஸ் மிகவும் அற்புதமாக இருந்தது… அங்கு வாசிக்கப்பட்ட பேன்ட் இசையும் யானையின் பிளிறல் சத்தமும் சிங்கத்தின் உறுமல் சத்தமும் கேட்பதற்கு மிகவும் புதுமையாக இருந்தது. ஆனால், இந்த புதுமையான சத்தங்களை எல்லாம் எனக்குப் பக்கத்திலிருந்த என் நண்பன் பிரபாகரனால் கேட்க முடியவில்லையே என்பதுதான் எனக்கு மிகவும் வருத்தத்தைத் தந்தது” என்றான் (இந்த பிரபாகரன் ஒரு காதுகேளாத சிறுவன்)
இதைக் கேட்டு அந்தப் பெண், தன்னால் சர்க்கஸ் நிகழ்ச்சியைப் பார்க்கமுடியாவிட்டாலும் அதை நினைத்து வருந்தாமல் தன் நண்பன் பிரபாகரனால் சர்க்கஸில் வந்த சத்தங்களைக் கேட்க முடியவில்லையே என்று வருந்திய சிறுவன் அன்புவின் உயர்ந்த உள்ளத்தை நினைத்து மிகவும் பெருமைப்பட்டார்.
மாற்றுத் திறனாளிகள் இழிவாகப் பார்க்கப்பட வேண்டியவர் அல்ல, அவர்கள் மாண்போடு நடத்தப்படவேண்டியவர்கள். அவர்களிடம் நாம் கரிசனையோடும் அன்போடும் இருந்தால், அவர்களுடைய வாழ்க்கை என்றும் பிரகாசமாக இருக்கும் என்பதில் எந்தவித ஐயமுமில்லை.
காதுகேளாதவரும் திக்கப்பேசுபவருமான ஒருவரை இயேசுவிடம் அழைத்து வந்த மனிதர்கள்
நற்செய்தியில் ஆண்டவர் இயேசு, புறவினத்தார் வாழும் பகுதியான தெக்கப்பொலி வழியாக வருகின்றார். அப்பொழுது ஒருசிலர் காதுகேளாதவரும் திக்கிப்பேசுபவருமான ஒருவரை இயேசுவிடம் அழைத்து வருகின்றார்கள். இம்மனிதர்கள் காதுகேளாதவரும் திக்கிப்பேசுபவருமானவரிடம் கொண்டிருந்த அன்பையும் கரிசனையையும் குறித்துச் சொல்லியாக வேண்டும். ஒருவர் காதுகேளாதவராகவோ அல்லது திக்கிப் பேசுபவராகவோ இருந்தால் அவரை இந்தச் சமூகம் எப்படிப் பார்க்கும் என்று நாம் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. இவ்வளவு வளர்ந்திருக்கின்ற (!) நாமே மாற்றுத் திறனாளிகளை மிகவும் இழிவாகப் பார்க்கின்றோம், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக அவர்கள் எப்படியெல்லாம் பார்க்கப்பட்டிருப்பார்கள், எவ்வளவு இழிவாக நடத்தப்பட்டிருப்பார்கள் என்று நாம் யோசித்துப் பார்த்துக் கொள்ளலாம். ஆனால், நற்செய்தியில் வருகின்ற மனிதர்கள் இதற்கு முற்றிலும் விதிவிலக்காக காதுகேளாதவரும் திக்கிப்பேசுபவருமான மனிதரை அன்போடு இயேசுவிடம் அழைத்துக்கொண்டு வருகின்றார்கள், அவர்கள் அவர் குணம்பெறுவதற்குக் காரணமாக இருக்கின்றார்கள்.
இவர்களுடைய இச்செயல் நம்மை நம்மோடு வாழக்கூடிய மாற்றுத் திறனாளிகள்மீது கரிசனையோடும் அன்போடும் நடந்துகொள்ளவேண்டும் என்ற ஓர் அழைப்பினைத் தருகின்றது
காதுகேளாதவரும் திக்கிப்பேசுபவருமான மனிதரிடம் கரிசனையோடு நடந்துகொண்ட இயேசு .
காதுகேளாதவரும் திக்கிப்பேசுபவருமான மனிதர் தன்னிடம் அழைத்து வரப்பட்டதும் இயேசு அவரை மற்ற மனிதர்களைப் போன்று குணப்படுத்தவில்லை. மாறாக, இயேசு அவரைத் தனியாக அழைத்துக்கொண்டு போய் அவருடைய காதுகளில் விரலையிட்டு, உமிழ்நீரால் அவர் நாவினைத் தொட்டு, வானத்தை அண்ணார்ந்து பார்த்து ‘எப்பத்தா’ என்று சொல்லி அவரைக் குணப்படுத்துகின்றார்.
இயேசு அம்மனிதரைத் தனியாக அழைத்துக்கொண்டு போனதற்கு மிகவும் முக்கியமான காரணம், சூழ்ந்துநின்றவர்கள் அவரை ஏளனமாகப் பார்த்துவிடக் கூடாது என்பதற்குத்தான். மேலும் இயேசு வானத்தை அண்ணார்ந்து பார்த்து ‘எப்பத்தா’ என்று சொன்னதை, அவர் காதுகேளாதவரும் திக்கிப்பேசுபவருமான மனிதருக்காக தந்தைக் கடவுளிடம் வேண்டினார் என்று சொல்லலாம். இவ்வாறு இயேசு அம்மனிதர் தெளிவாய்ப் பேசுவதற்கும் கேட்பதற்கும் வழிவகை செய்கின்றார். இயேசு செய்த இந்த அருமடையாளத்தைப் பார்த்துவிட்டு மக்கள், “இவர் எத்துணை நன்றாக யாவற்றையும் செய்து வருகின்றார்! காது கேளாதவர் கேட்கவும் பேச்சற்றவர் பேசவும் செய்கிறாரே!” என்று பேசிக்கொள்கின்றார்கள்.
மக்கள் இவ்வாறு பேசுகின்ற வார்த்தைகள், ஆண்டவராகிய கடவுள் இந்த உலகத்தைப் படைத்து முடித்துவிட்டு பார்க்கும்போது அது எப்படி நன்றாய் இருந்தன (தொநூ 1:31) என்று கண்டாரோ, அதை ஒத்ததாக இருக்கின்றன. இயேசுவால் யாவற்றையும் நன்றாய், சிறப்பாய் செய்யவல்லவர் என்பதைத் தான் இந்நிகழ்வு நமக்கு எடுத்துக் கூறுகின்றது.
சிந்தனை .
இயேசு யாரையும் இவர் புறவினத்தார், உடல் ஊனமுற்றவர் என்று ஒதுக்கித் தள்ளிவிடவில்லை. மாறாக, அவர்களிடம் அவர் கரிசனையோடும் அன்பும் நடந்துகொண்டார். இயேசுவிடமிருந்த அந்த கரிசனையையும் அன்பையும் நமதாக்கிக் கொள்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.
Source: New feed