மனிதரின் உள்ளத்திலிருந்து வருவதே அவரைத் தீட்டுப்படுத்தும்.
மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 7: 14-23
அக்காலத்தில் இயேசு மக்கள் கூட்டத்தை மீண்டும் தம்மிடம் வரவழைத்து, அவர்களை நோக்கி, “நான் சொல்வதை அனைவரும் கேட்டுப் புரிந்துகொள்ளுங்கள். வெளியேயிருந்து மனிதருக்குள்ளே சென்று அவர்களைத் தீட்டுப்படுத்தக் கூடியது ஒன்றுமில்லை. மனிதருக்கு உள்ளேயிருந்து வெளியே வருபவையே அவர்களைத் தீட்டுப்படுத்தும். கேட்கச் செவியுள்ளோர் கேட்கட்டும்” என்று கூறினார்.
அவர் மக்கள் கூட்டத்தை விட்டு வீட்டிற்குள் வந்தபோது அவருடைய சீடர் அவரிடம் இந்த உவமையைப் பற்றிக் கேட்க, அவர் அவர்களிடம், “நீங்களுமா இந்த அளவுக்குப் புரிந்துகொள்ளாமல் இருக்கிறீர்கள்? வெளியேயிருந்து மனிதருக்குள்ளே செல்லும் எதுவும் அவர்களைத் தீட்டுப்படுத்த முடியாது என உங்களுக்குத் தெரியாதா? ஏனென்றால், அது அவர்களுடைய உள்ளத்தில் நுழையாமல் வயிற்றுக்குச் சென்று கழிப்பிடத்திற்குப் போய்விடுகிறது” என்றார்.
இவ்வாறு அவர் எல்லா உணவுப் பொருள்களும் தூயன என்று குறிப்பிட்டார். மேலும், “மனிதருக்கு உள்ளேயிருந்து வருவதே அவர்களைத் தீட்டுப்படுத்தும். ஏனெனில் மனித உள்ளத்திலிருந்தே பரத்தைமை, களவு, கொலை, விபசாரம், பேராசை, தீச்செயல், வஞ்சகம், காமவெறி, பொறாமை, பழிப்புரை, செருக்கு, மதிகேடு ஆகியவற்றைச் செய்யத் தூண்டும் தீய எண்ணங்கள் வெளிவருகின்றன. தீயனவாகிய இவை அனைத்தும் உள்ளத்திலிருந்து வந்து மனிதரைத் தீட்டுப்படுத்துகின்றன” என்றார்.
Source: New feed