
எந்த மிருகமும் தன் உயிருக்கு ஆபத்து வருவதை அறிந்து, அவசரமாகத் தப்பித்துக் கொள்ளப் பார்க்கின்றது. மனுஷன் மாத்திரம் தன் ஆத்துமத்துக்குக் கேடாயிருக்கிற பாவத்தைத் தள்ளவும், நன்மையாயிருக்கிற புண்ணியத்தைத் தேடவும், அறிந்தும் அறியாதவனாய்த் திரிகிறான். சாலமோன் என்கிற ஞானி எறும்பைப் பார்த்துப் புத்தி கற்றுக் கொள் என்றார். எறும்பு மழைக்காலத்தில் தின்ன வேண்டியதைக் கோடை காலத்திலே சுறுசுறுப்பாய்த் தேடி தன் வளையிலே களஞ்சியம் கட்டி வைக்குமே. அந்தப் புத்தி மனுஷர்களில் அநேகருக்கு இல்லாமல் பல அபத்த நினைவுகளை நினைக்கிறார்கள். சில பேர் பாவத்தை விடுகிறதற்கு இன்னும் நாள் இருக்கின்றது, புண்ணியத்தை மெள்ளச் சம்பாதித்துக் கொள்ளலாம் என்று நினைத்திருக்கிறார்கள். அப்படிப்பட்ட நினைவால் எத்தனை பெரிய மோசம் வருமென்று ஒருவரும் அறியவில்லை. ஒருவன் நூறு வருஷம் சீவித்திருந்தாலும், கடந்து போன நாட்களில் ஒரு நாளாவது அவன் கையில் உண்டோ? இனிமேல் இருக்கப் போகிற வயதில் ஒரு நாழிகையாவது அவன் கையில் உண்டோ? அதுவுமில்லையே. இப்போதிருக்கிற நிகழ்காலத்திலே ஏதாகிலும் செய்கிறது தன்னுடையதாயிருக்கிறது. முன்னும் பின்னும் உண்டான நாட்களும், நாழிகையும் தன்னுடையது அல்லாமல் சர்வேசுரன் கொடுத்தால் உண்டு, கொடாவிட்டால் இல்லை என்று இருக்கையில், தன் கையில் இல்லாத நாட்களிலே பாவத்தை விட்டுப் புண்ணியத்தைச் செய்வேன் என்று இப்போது அசட்டை செய்கிறது எதை ஒத்திருக்கிறதெனில், அயலானின் நிலத்தில் தானியம் விதைத்துக் கோட்டை கட்டுவேன் என்றும், இனிமேல் சம்பாதித்துக் கொள்வேன் என்றும், தன் கையில் ரொக்கமாயிருக்கிற திரவியத்தை வீணிலே செலவழித்துப் போடுகிற மூடத்தனம் போல் இருக்கிறது. உன்னுடையது அல்லாமல் இருக்கிற காலத்திலே புண்ணியம் செய்யலாம் என்று, இப்போது கையிலே இருக்கிற கொஞ்ச நேரத்தை வீணிலே செலவழிக்கிறது எப்படிப்பட்ட மடமையாயிருக்கின்றது! அற்கியாஸ் என்கிறவன் தீப்ஸ் என்கிற நகரை வெகு நிஷ்டூரமாய் ஆண்டு வருகையில், அந்தப் பட்டணத்தார்சதி செய்து அவனைக் கொன்று போட நினைத்தார்கள். இந்த ஆலோசனையை அவனுடைய சிநேகிதன் ஒருவன் அறிந்து, இரகசியமாய் அவனுக்கு ஒரு கடிதம் எழுதி அனுப்பினான். அவன் அந்தக் கடிதம் வந்ததைக் கேட்டு விளையாட்டுப் பராக்காயிருந்து, நாளைக்கு வாசித்துப் பார்க்கலாம் என்று நினைத்து அங்கே போட்டு வையென்று இளைப்பாறப் போன இடத்திலே, அன்றே சதிகாரர் வந்து உடனே கொன்று போட்டார்கள். இப்படியே உயிர் போகிறதற்கு எத்தனை நேரம் சென்றது? கடிதம் வந்தவுடனே பாராமல் விளையாட்டுப் பராக்காயிருந்த படியினாலே அல்லவா செத்துப் போனான். அவனுக்கு வந்த கடிதம் உனக்கு வந்திருக்கிறதென்று நினைத்துக் கொள். பாவம் என்கிற சதிகாரன் வந்து உன் மென்னியைப் பிடித்திருக்கிறான். கொல்ல நேரம் செல்லாது. இப்போதே வாசித்துப் பார். நாளை, பின்பு என்று இராதே. உன் ஆத்துமத்தைக் காப்பாற்ற வேண்டுமென்றால், நாளை, பிறகு, இந்த மாதம், பிறக்கிற வருஷம் என்று போக்குச் சொல்லாமல் இன்றே சதி உண்டு என்கிற கடிதம் வந்திருக்கிறதென்று நினைத்து அந்த மோசத்துக்குத் தப்பித்துக் கொள்ளக்கடவாய். இன்னும் சில பேர், சாகிற போது பாவக் கடன்களைத் தீர்த்துப் பரலோகத்துக்குப் போக ஆயத்தம் செய்யலாமென்று நினைக்கிறார்கள். இப்படிப்பட்ட நினைவிலே பெரிய மோசம் போகிறார்கள். ஏனென்றால் கடல் யாத்திரையாய் மறு தேசத்துக்கு வியாபாரம் கொண்டு போக இருக்கிறவன் கப்பல் பாய் எடுக்கிற வேளையிலே சரக்கெல்லாம் தேடி ஏற்றுவேன் என்று இருக்கலாமோ? அரசனுடைய கலியாணத்துக்கு அழைக்கப்பட்டவன் கலியாணம் செய்கிற அன்றே பருத்தி விதைத்து, பஞ்சை நூலாக்கி, நூலைப் புடவையாக்கி உடுத்திக் கொண்டு போவேன் என்று இருக்கலாமோ? படைக்குப் போகிற சேவகன் எதிரி வந்து எதிர்த்த நேரத்திலே சிலம்பம் படிப்பேன் என்று இருக்கலாமோ? பாவீ, இப்படிப் பட்டவர்களைப் பார்க்க புத்தி ஈனமுள்ளவன் நீயே அல்லாமல் வேறே ஒருவரும் இல்லை. புண்ணியம் என்ற சரக்கைப் பரலோகத்திற்குப் போகிற வேளையிலே தேடி ஏற்றிக் கொண்டு போவேன் என்றும், மோட்ச விருந்துக்கு அழைக்கப்பட்ட நீ, இஷ்டப்பிரசாதம் என்கிற திவ்விய உடுப்பை ஏற்கெனவே தேடாமல், அந்தச் சமயத்திலே தேடிக் கொள்வேன் என்றும், பசாசோடே கடைசி யுத்தம் செய்கிற கடின வேளையிலே படுத்துக் கொண்டு யுத்தம் – செய்வேன் என்றும் அசட்டையாயிருக்கலாமா? இடது புறம் சாய்ந்திருக்கிற மரம் வெட்டுகிற போது இடது புறமாய் விழாமல் வலது புறத்திலேவிழுகிறது உண்டா ? இல்லையே! கோலியாத் என்கிற இராட்சதன் தாவீதோடே யுத்தம் செய்ய வந்தபோது, தாவீது தன் கவணிலே வைத்து எறிந்த கல் இராட்சதன் நெற்றியிலே பட்டுக் குப்புற விழுந்தான் என்று சொல்லியிருக்கின்றது. நெற்றியிலே பட்ட கல்லினாலே மல்லாக்க விழாமல் குப்புற விழுந்தது ஏனென்றால், மல்லாக்க விழுந்தவனுடைய கண் ஆகாயத்தைப் பார்த்திருக்கும். அவன் உயிரோடு இருக்கும் போது ஒருக்காலும் வானத்தை நாடிப் பார்த்து நடந்தவனல்ல. சாகிற வேளையிலும் அவன் வானத்தைப் பார்த்த வாக்கிலே விழச் சர்வேசுரனுக்குச் சித்தமில்லை. யாதொரு பாவிக்குச் சர்வேசுரன் புதுமையாய்ச் சாகிற வேளையிலே கிருபை செய்தால், அது எல்லாருக்கும் கிடைக்குமென்றும், உனக்கும் கிடைக்குமென்றும் நினைக்கிற அபத்த நினைவை விட்டுவிடு. மேலும், சர்வேசுரனுக்கு அளவில்லாத இரக்கம் உண்டு. ஆதலால் அவர் படைத்த ஆத்துமங்களை எப்படியும் இரட்சிப்பாரேயல்லாமல் நரகத்தில் தள்ள மாட்டார் என்று தங்கள் பாவ வாழ்வை விடாமலிருக் கிறார்கள். இது எப்படிப்பட்டது என்றால், தன் தகப்பன் பணக்காரன் என்று உடுத்திக் கொள்ளாமல் நிர்வாணமாய்த் திரிகிறவனைப் போலவும், ஊற்றுகள், ஆறுகள், குளங்கள் மிகுதியாய் இருக்கின்றனவே என்று நினைத்துத் தாகத்துக்குத் தண்ணீர் குடியாதவனைப் போலவும், வாத நோயால் கைகால் முடங்கி இருக்கையில் வைத்தியர்கள் மிகுதியாய் இருக்கிறார்களே என்று கண்டு அது போதுமென்று சிகிச்சை செய்து கொள்ளாதவனைப் போலவும் மடத்தனம் செய்கிறார்கள். எப்படியென்றால், சர்வேசுரன் பேரின்பக் கடலாகிய தயையுள்ளவராயிருக்கையில், அதைச் சுகித்து அநுபவிக்க அவரை அண்டிப் போக வேண்டாமோ? அவரை விட்டு அகன்று அவரது மிகுதியான தயவைப் பற்றி அவர் மட்டில் பக்தியும், பயமும் விட்டு, அவருக்கு ஏற்காத துரோகம் செய்யலாமென்று முழு மதி கெடாத ஒருவனால் நினைக்கக் கூடுமோ? அவர் அப்படிப்பட்ட நன்றிகெட்டதனத்தை எப்போதும் பொறுக்கக் கூடுமோ? அவர் மிகுந்த இரக்கமுள்ளவராயிருந்தாலும், அளவில்லாத நீதியும் உடையவர் அல்லவா? மனந்திரும்பிப் பாவத்தை வெறுத்து நன்னெறியில் சேருகிற பாவிகளுக்குக் கிருபை செய்தருளுவார் என்கிறது சரி. ஆனால் மரணபரியந்தம் பாவத்தை விடாதவர்களை நீதிப் பிரகாரமாய்த் தீர்வையிட்டு, நித்திய நரகத்திலே தள்ளிப் போடுவார் என்பது தேவ வாக்கியத்தில் ஊன்றிய குன்றாத சத்தியமாமே. மேலும் சர்வேசுரனுடைய மிகுதியான தயை பற்றித் துணிந்து பாவத்திலே நிலைகொண்டவன், அதிக தண்டனைக்கு உள்ளாவான் என்கிறதற்குச் சந்தேகமில்லை. ஏனெனில், சர்வேசுரனுடைய மிகுதியான தயாளத்தின் நிமித்தம் அவரைச் சிநேகித்து அவர் சித்தத்தின்படி நடக்க வேண்டியிருக்கையில், அவருடைய கற்பனையை மிதித்து, அவரையும் நிந்தித்துப் புறக்கணித்துத் துரோகம் செய்வது எத்தனையோ அக்கிரமமான பாதகமாயிருக்கும். ஆகவே அப்படிப்பட்ட துரோகத்துக்கு எந்தெந்த நித்திய கடின ஆக்கினையும் போதாதென்று நியாயத்தின்படி நினைக்க வேண்டிய தொழிய மற்றப்படியல்ல. மேலும் இதிலே இருக்கிற பொல்லாப்பு எம்மாத்திரமென்று பார். ஆண்டவர் இரக்கமுள்ளவர் என்று பாவம் செய்கிறது அவர் பேரிலே கல்லை விட்டெறிகிறது போலவும், அவரைப் பயமுறுத்தி ஆக்கினை செய்ய நினைக்கிறது போலவும், ஆண்டவர் கற்றூணில் கட்டுண்டு அடிபடப் பொறுமை யோடு இருந்ததைக் கண்டு இன்னுமதிகமாய் அடிக்க வேண்டுமென்று சொல்வது போலவும் கொடிய நிஷ்டூரமா யிருக்கின்றது. ஐயையோ பாவீ! இப்படிப்பட்ட துரோகத்தைச் செய்யலாமோ? சர்வேசுரனுடைய நன்மைத்தனத்தைக் கண்டு நீ அதிக நல்லவனாயிருக்க வேண்டியிருக்கையில் அதிக துஷ்டனாய்ப் போவாயோ? மழை அதிகமதிகமாய்ப் பெய்கிறதினாலே தரை அதிகமாய் நனைந்து இளகிப் போகின்றது. அவருடைய கிருபை மழை எத்தனைதான் பெய்தாலும் உன் மனது காய்ந்து வெடித்துப் போகின்றது. நாலுமுறை, பத்து முறை தண்டிக்காமல் மன்னித்ததினாலே எப்போதும் மன்னிப்பார் என்று பயமில்லாமல் இருக்கிறாயோ? தகப்பனின் புத்தி கேளாத பிள்ளையை அவன் பராமரியாமல் கைவிட்டிருக்கிறது அவன் அதிக கோபம் கொண்டிருக்கிறான் என்பதன் அறிகுறி அல்லவா? தூண்டில் கயிற்றிலே அகப்பட்ட மீனை பின்புறமாய் இழுக்காமல் இன்னும் விட்டுக் கொண்டிருக்கிறது அதற்கு விளையாட்டு என்றும் நன்மை என்றும் நினைக்கிறதோ? நீ செய்கிற பாவத்துக்கு உடனே தண்டிக்காமல் சுவாமி சில நாள் பொறுக்கிறதினாலே நீ பயமில்லாமலிருக்கலாமோ? இதனாலே வருகிற கொடிய தண்டனையைப் பார். வலரியா என்கிற தேசத்திலே ஒரு மனிதன் கர்த்தர் உயிர்த்தெழுந்தருளின திருநாள் சமீபத்திலே ஒரு பெண்பிள்ளைக்கு ஞானத் தகப்பனாய் இருந்தான். அவள் ஞானஸ்நானம் பெற்ற பின்பு, அவளுக்குப் படிப்புச் சொல்லிக் கொடுக்க தன் வீட்டுக்குக் கூட்டிப் போனதில், பசாசின் சோதனைக்கு இடங்கொடுத்து பாவத்திலே விழுந்தான். அதனாலே ஞாயிற்றுக்கிழமை கோவிலுக்குப் போனால் சர்வேசுரன் தண்டிப்பார் என்று பயப்பட்டிருந் தாலும், அன்று தனக்கு ஒரு பொல்லாப்பும் சம்பவிக்க வில்லை என்று கண்டு மறுநாள் கோயிலுக்குப் போனான். கோயிலுக்குப் போனாலும் பாவசங்கீர்த்தனம் செய்ய வில்லை. இப்படியே ஐந்தாறு நாள் செல்லுமட்டும் பார்த் தான். தனக்கு ஒரு தண்டனையும் வராததைக் கண்டு, பாவத் தின்மேல் ஒரு கவலையும் இல்லாமலிருக்கிறபோது, ஏழாம் நாள் திடீரென்று இடி விழுந்து செத்தான். சர்வேசுரன் அவன் படுகிற வேதனையை எல்லோரும் அறிய வேண்டு மென்று காண்பித்த அதிசயமாவது : அவனைப் புதைத்த குழி வெடித்து அதிலிருந்து தீச்சுவாலை எழுந்தது. எல்லோரும் இதைக் கண்டு மிகவும் பயந்து நடுங்கினார்கள். அநேக நாள் தூறிக் கொண்டிருந்த மழை, பின்பு கனமாயும், தாரை தாரையாயும் பெய்கிறது போலே, சர்வேசுரன் பாவிகளை உடனே தண்டிக்காமல் பொறுத்துக் கொண்டிருந்தாலும், பின்பு அத்தனைக்கும் கனமான நெருப்பு மழை பெய்விப்பார் என்று காண்பித்தது போலாயிற்று. ஐயையோ பாவீ! நீ இதைக் கண்டு இன்னும் பாவத்துக்கு அஞ்சாமலிருப்பாயோ? சர்வேசுரனுக்கு இரக்கம் உண்டென்பதை நினைத்து நீ துணிவு கொண்டு பாவம் செய்வாயோ? நீ இப்படிப்பட்ட மதி கெட்டதனம் செய்யாதே. புத்தி என்கிற வெளிச்சம் உன் உள்ளங்கையிலே இருக்க, நரக பாதாளத்தில் போய் விழ வேண்டாம். பாவ மயக்கத்தை விட்டு, செய்த பாவத்துக்காக துயரப்பட்டுப் பிரார்த்தித்துக் கொள்.
© https://www.catholictamil.com/p/blog-page_64.html
Source: New feed