ஐ.நா.அவையுடன் தொடர்புள்ள அலுவலகங்களிலும், இன்னும், உலக அரசுகள், நிறுவனங்கள் அனைத்திலும், பாலியல் வழியில் நிகழும் தவறுகளைத் தடுக்க, உலகத் தலைவர்கள், செப்டம்பர் 27, இவ்வியாழனன்று, ஐ.நா.அவை கூட்டத்தில், மீண்டும் உறுதியளித்தனர் என்று, ஐ.நா. அறிக்கையொன்று கூறுகிறது.
ஐ.நா. அவையின் அலுவலகங்களில் பாலியல் தொல்லைகள் நிகழ்ந்துள்ளன என்ற குற்றச்சாட்டையடுத்து, ஐ.நா. பொதுச்செயலர், அந்தோனியோ கூட்டேரஸ் அவர்கள் 2017ம் ஆண்டு, “தலைவர்களின் வட்டம்” என்ற அமைப்பை உருவாக்கினார்.
உலக அரசுகளிலும், பன்னாட்டு நிறுவனங்களிலும் மிக உயர்ந்த நிலையில் இருப்போர், தங்கள் கண்காணிப்பில் உள்ள அனைத்து அமைப்புக்களிலும், பாலியல் வழியில் நிகழும் தவறுகளைத் தடுக்க உறுதி பூண்டதன் ஒரு வெளிப்பாடாக, “தலைவர்களின் வட்டம்” அமைப்பில் இணைந்தனர்.
பாலியல் தொல்லைகளை தடுக்க தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்ற ஓர் ஒப்பந்தத்தில், நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகள் கையொப்பமிட்டுள்ளன என்று ஐ.நா. அறிக்கை கூறுகிறது.
அரசுத் துறைகளிலும், பன்னாட்டு நிறுவனங்களிலும் பணியில் சேர விழைவோரின் பின்னணி தீர்க்கமாக ஆய்வு செய்யப்படுதல், அவர்கள் பணியாற்றும் இடங்களில், பாலின சமத்துவம், நீதி ஆகியவை குறித்த விழிப்புணர்வு கல்வி வழங்குதல் ஆகியவை இந்த ஒப்பந்தத்தில் இடம்பெற்றுள்ளன.
செப்டம்பர் 27, இவ்வியாழனன்று, 49 நாடுகளும், ஐ.நா. அவையைச் சேர்ந்த 21 துறைகளும் பாலின தொல்லைகளை முற்றிலும் அகற்ற இன்னும் தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்படவேண்டும் என்ற ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளன