மறைமாவட்ட அளவில் பலநாள்கள் நடைபெற்ற தயாரிப்புக்களுக்குப் பின்னர், 34வது உலக இளையோர் நாள், சனவரி 22, இச்செவ்வாயன்று, பானமா நேரம் மாலை ஐந்து மணிக்கு, திருப்பலியுடன் அதிகாரப்பூர்வமாக ஆரம்பிக்கின்றது. இதில் 155 நாடுகளிலிருந்து ஏராளமான இளையோர் கலந்துகொள்கின்றனர்.
இந்த நிகழ்வுக்குத் தயாரிப்பாக, சனவரி 16 முதல் 20 வரை, “மறைமாவட்டங்களில் நாள்கள்” என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கில், பானமாவின் அனைத்து மறைமாவட்டங்கள் மற்றும், கோஸ்டா ரிக்காவின் பல மறைமாவட்டங்களிலிருந்து, 14 ஆயிரத்திற்கு அதிகமான இளையோர் பங்குபெற்றனர்.
34வது உலக இளையோர் நாள் நிகழ்வுகளை முன்னிட்டு, பானமாவில், சனவரி 17, கடந்த வியாழனன்று தொடங்கிய, பூர்வீக இன இளையோர் மாநாடு, சனவரி 21, இத்திங்களன்று நிறைவடைந்தது.
பானமா கர்தினால் José Luis Lacunza Maestrojuán அவர்கள் திருப்பலி நிறைவேற்றி, பூர்வீக இன இளையோர் மாநாட்டை நிறைவு செய்தார்.
ஏறக்குறைய முப்பது அமெரிக்க பூர்வீக இன இளையோர் பிரதிநிதிகளும், பெருமளவில் பானமா பூர்வீக இன இளையோரும், இந்த மாநாட்டில் கலந்துகொண்டனர். மேலும், உலகின் பல பகுதிகளிலிருந்து பூர்வீக இன இளையோர் பிரதிநிதிகள், இளையோர் நாள் நிகழ்வுகளில், முதன்முறையாக கலந்துகொள்கின்றனர்.
Source: New feed