அக்காலத்தில் சவுல் சீறியெழுந்து ஆண்டவருடைய சீடர்களை கொன்றுவிடுவதாக அச்சுறுத்தி வந்தார். ஆண் பெண்களை கொன்றுவிட அனுமதிபெற்று தமஸ்கு நோக்கி வரும்வழியில், திடீரென வானத்தில் ஓர் ஒளி அவரை ஆட்கொண்டது. அவர் தரையில் விழ “சவுலே, சவுலே ஏன் என்னை துன்புறுத்துகின்றாய்?” என்று ஒர் குரல் தொடர்ந்து கேட்டது. அதற்கு அவர் “ஆண்டவரே நீர் யார்?” எனக் கேட்டார். இயேசு மறுமொழியாக “நீ துன்புறுத்தும் இயேசு, நானே!, உடனே நீ நகருக்குள் செல்! நீ என்ன செய்ய வேண்டும் என்று உனக்கு அறிவிக்கப்படும்” என்று கூறினார். அக்குரலை உடனிருந்தவர்களும் கேட்டனர். ஆனால் வியப்பில் ஆழ்ந்தனர். சவுல் எழுந்தபோது கண்கள் திறந்திருந்தும் எதனையும் காணும் திறனை இழந்திருந்தார். உடனிருந்தவர்கள் அவரது கைகளை பிடித்து தமஸ்கு நகருக்கு அழைத்து சென்றார்கள். அங்கே மூன்று நாள் பார்வையற்று இருந்தார். எதுவும் உண்ணவும் குடிக்கவுமில்லை.
அந்நகரில் அனனியா என்ற சீடர் இருந்தார். ஆண்டவர் அவரிடம், “நீ எழுந்து நேர்த்தெரு என்னும் சந்துக்குப் போய் அங்கே தர்சு நகர சவுல் தேடு. அவர் ஒரு காட்சியை கண்டுள்ளார். அக்காட்சியில் அனனியா என்பவர் வந்து சவுல் பார்வையடைய வேண்டுமென்று தமது கைகளை அவர் மீது வைப்பதாக காட்சி கண்டுள்ளார்” என்று கூறினார். அதற்கு அனனியா “அவன் கிறிஸ்துவர்களை அழிக்க கங்கனம் கட்டித்திரிபவன் ஆயிற்றே” என்று கூற, ஆண்டவர் “நீ அங்கு செல், என் மீட்பு பணியை உலகெங்கும் பறைசாற்றிட தேர்ந்து கொண்டவரே அவர்! எனது கருவியாக செயல்படுவார். பிற இனத்தாருக்கும் அரசர்களுக்கும், இஸ்ரயேல் மக்களுக்கும் இயேசுவின் பெயரை எடுத்துரைக்கும் கருவியே! என்றார். என் பொருட்டு அவர் எத்துன்பம் அடைய வேண்டும் என்பதும் அவருக்கு காட்டுவேன்” என்றார்.
உடனே அனனியா நகருக்குச் சென்று தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டு, ஆண்டவர் பெயரால் அவர் மீது கைகளை வைக்க தூய ஆவியின் ஒளி கீற்றுக்கள் அவரது விழிகளை திறக்கச் செய்து அதிலிருந்து செதில்கள் விழுந்தன. மீண்டும் சவுல் பார்வை பெற்றவராய் ஆண்டவரின் ஒளியை பெற்று கிறிஸ்துவின் கருவியாக மாறினார்.
Source: New feed