இன்றைய உலகில் பசியால் வாடும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது, அனைத்துலக ஒருமைப்பாட்டுணர்வு குறைந்து வருவதன் அடையாளமாக உள்ளது என கவலையை வெளியிட்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இச்செவ்வாய்க்கிழமையன்று சிறப்பிக்கப்பட்ட உலக உணவு தினத்தையொட்டி, FAO எனப்படும் உலக உணவு மற்றும் வேளாண் நிறுவனத் தலைவர் José Graziano da Silva அவர்களுக்கு செய்தி ஒன்றை அனுப்பிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வாண்டு உலக உணவு தின தலைப்பான, ‘நம் நடவடிக்கைகளே நம் வருங்காலம்: 2030ம் ஆண்டிற்குள் பசியற்ற உலகைப் படைத்தல்’ என்பது, நாம் ஒவ்வொருவரும் விழித்தெழுவதற்கு விடப்படும் அழைப்பாக உள்ளது என அதில் குறிப்பிட்டுள்ளார்.
ஒவ்வொரு மனிதருக்கும் போதிய அளவு தரமான உணவு கிடைப்பதற்குரிய வழிவகைகள் செய்யப்பட வேண்டும் என்பதை தன் செய்தியில் வலியுறுத்தியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வெறும் வாக்குறுதிகளையல்ல, மாறாக, உறுதியான நடவடிக்கைகளை, ஏழை மக்கள், இந்த சமுதாயத்திடமிருந்து எதிர்பார்க்கின்றனர் என கூறியுள்ளார்.
தொழில்நுட்பத் துறையிலும், அறிவியலிலும், தகவல் தொடர்புத்துறை மற்றும் கட்டுமானத் துறையிலும், முன்னேற்றம் கண்டுள்ள இந்த 21ம் நூற்றாண்டிலும், மக்களின் உணவுத் தேவைகளை நிறைவு செய்யும் வகையில், மனிதாபிமானத்திலும், ஒருமைப்பாட்டுணர்விலும், நாம் வளர்ச்சியடையவில்லை என்பது, வெட்கத்துக்குரியதாகவே உள்ளது என, தன் செய்தியில், கவலையை வெளியிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
ஏழைகளின் தேவைகளை மனதில்கொண்டு, ஒருமைப்பாட்டுடன் கூடிய உறுதியான நடவடிக்கைகள் செயல்படுத்தப்பட வேண்டும் எனவும், அதற்கு, தாராள நிதி உதவிகள், வியாபாரத் தடைநீக்கம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பொருளாதர நெருக்கடியையும் போரையும் அகற்றுதல் போன்ற வழிமுறைகளையும் தன் செய்தியில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் பரிந்துரைத்துள்ளார்.
மனிதாபிமான உணர்வுகளுடன் செயல்பட வேண்டிய அவசியம், ஒன்றிணைந்த முயற்சிகளின் தேவை, பலன் தரும் திட்டமிடல், போன்றவை உலகிலிருந்து பசியை அகற்ற பேருதவியாக இருக்கும் என தன் செய்தியில் மேலும் கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.