இஸ்பானிய தேசத்திலுள்ள கொர்டோவா பட்டணத்தில் இரண்டு நண்பர்களுக்கிடையே மிகுந்த பகை உண்டாயிருந்தது . அவர்கள் பகையை விட்டுச் சமாதானமாய்ப் போவதற்குக் குருக்கள் மற்றும் பெரியோர்களும் எத்தனை புத்தி சொன்னாலும் அவர்கள் கேட்கவில்லை . இந்த இரண்டு பேர்களுள் அதிக பகையோடு உள்ளவன் கடின வியாதியில் விழுந்து அவஸ்தையாயிருந்தான் . அச்சமயத்திலே ஒரு சேசு சபை குருவை அழைப்பித்து அவரிடத்தில் தான் பாவசங்கீர்த்தனம் செய்யவேண்டுமென்றான் .
அந்த குருவானவர் அவனைப் பார்த்து உன்னிடத்திலுள்ள பகையை விட்டு விரோதியோடு நீ சமாதானமாய்ப் போன பிறகு பாவசங்கீர்த்தனம் செய்யலாம் . அதற்குச் சம்மதியாதிருந்தால் பாவசங்கீர்த்தனம் செய்யாமல் சாவது தவிர உன் சரீரத்தை மந்திரித்த கல்லறையில் வைக்கவும் கூடாது என்றார் . வியாதிக்காரன் ” என் எதிராளி இங்கே இருந்தால் சமாதானமாய்ப் போவதற்கு தயாராயிருக்கிறேன்” . என்றான் .
குருவானவர் மடத்துக்குப் போன அன்றிரவே இரு வாலிபர்கள் அந்தக் குருவிடம் போய் அவரைப் பார்த்து ” நீர் தேவநற்கருணைப் பாத்திரத்தை எடுத்துக் கொண்டு சர்வேசுரனுக்கு ஒரு ஊழியம் செய்ய எங்களோடு கூட வாரும் ” என்று மன்றாடினார்கள் . அப்படியே உடனே வந்த குருவானவரை முன் சொல்லப்பட்டவனுடைய உடல் இருந்த கல்லறைக்கு அழைத்துக் கொண்டு போனார்கள் . அங்கே சேர்ந்தவுடன் அவர்கள் ” நேற்று இறந்தவன் தன் விரோதியைப் பார்த்து எனக்கும் உனக்கும் பகையில்லை நீ செய்த குற்றமெல்லாம் பொறுத்தேனென்று வாயினால் மாத்திரம் சொன்னானேயல்லாமல் மனதால் பொறுக்கவில்லை . அந்த பகையோடு பொய்யான பாவசங்கீர்த்தனம் செய்து சாவான பாவத்தோடு நன்மை வாங்கினான் .
ஆனால் தேவநற்கருணை உள்ளே போகாமல் இந்த மட்டும் அவன் நாக்கின் மேல் இருக்கிறது . அதைத் தேவரீர் இப்போது எடுத்துக்கொண்டு போக வேண்டும் ” என்று சொன்னார்கள். உடனே அவர்கள் கட்டளைப்படியே கல்லறை தானே திறந்தது . இறந்தவனுக்கு உயிர் வந்து எழுந்திருந்து நாவை நீட்டினான் . அதன்மேல் இருந்த தேவநற்கருணையைக் குருவானவர் பயத்துடன் கை நடுங்க எடுத்துப் பாத்திரத்துக்குள்ளே வைத்தார் . பிறகு அந்த இரண்டு பேரும் பூமியைக் காலால் உதைத்தவுடன் பூமி பிளந்து இறந்து போனவனுடைய உடல் அதில் விழுந்து மறைந்து போயிற்று . அந்த இரண்டுபேரும் எரியும் மெழுகுத் திரியைக் கையில் பிடித்துக் கொண்டு மகா தாழ்ச்சியோடு குருவானவரோடு கூடக் கோவில் மட்டும் போன பிறகு திடீரெனக் காணாமல் மறைந்து போனதைக் குருவானவர் கண்டு அவர்கள் வானதூதர்கள் என்று அறிந்து கொண்டார்.
கிறிஸ்தவர்களே ! சாவானபாவத்தோடு தேவநற்கருணை வாங்குவது மாபெரும் பாதகமாகும் . உங்களிடத்தில் பகை உண்டானால் மட்டுமல்ல, மனதாலும் சமாதானமாய்ப் போனபிறகு மாத்திரம் நல்ல பாவசங்கீர்த்தனம் செய்து நன்மை வாங்க வேண்டும் . விரோதி பொல்லாதவன் நான் அவனோடு சமாதானமாய்ப் போவதற்கு அவன் தகுதியுடையவன் அல்ல என்று சொல்லிச் சில பேர்கள் சமாதானமாய்ப் போகமாட்டார்கள் . சமாதானமாய்ப் போக மனமில்லாமல் பாவசங்கீர்த்தனம் செய்பவன் பாவ மன்னிப்பு அடைவதில்லை.
Source: New feed