வத்திக்கான் புனித பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் விசுவாசிகள் குழுமியிருக்க, அவர்களுக்கு இஞ்ஞாயிறு நற்செய்தி வாசகம் எடுத்துரைக்கும், அப்பம் பலுகுதல் புதுமை குறித்து நண்பகல் மூவேளை செப உரை வழங்கினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
தன் போதனைகளைக் கேட்க வந்திருந்து, மாலை வரை செவிமடுத்து, பசியுற்றிருந்த கூட்டத்தினரை ஊர்களுக்கு அனுப்பிவிடுமாறு சீடர்கள் இயேசுவிடம் வேண்ட, அவர்களுக்கு நீங்களே உணவு கொடுங்கள் என இயேசு கூறியதைக் குறிப்பிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இறைவன் நமக்கு வழங்கியுள்ளதை நாம் பிறருடன் பகிர்ந்துகொள்ளக் கடமைப்பட்டுள்ளோம் என்பதை, இந்தப் புதுமை கற்றுத் தருகிறது என்றார்.
மக்கள் பசியுற்றிருந்த இந்நிகழ்வில், இயேசு தன் நண்பர்களுக்கு, அன்றும் இன்றும் கற்றுத்தர விரும்பும் பாடம் என்னவெனில், பகிர்வு மற்றும் ஒருமைப்பாடு குறித்த இறைவனின் சிந்தனையோட்டம் என்றார் திருத்தந்தை.
இங்கு இறைவனின் சிந்தனையோட்டம் என்பது, நாம் பிறருக்காகப் பொறுப்பேற்க வேண்டும் என்பதேயாகும் என சுட்டிக்காட்டினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
மற்றவர்கள் குறித்து நாம் நம் கைகளைக் கழுவி விடவேண்டும் என்பதோ, அவர்கள் குறித்து அக்கறையற்றிருக்க வேண்டும் என்பதோ இறைவனின் சிந்தனையோட்டம் அல்ல, மாறாக, அவர்களை காப்பாற்றுவதற்குரிய பொறுப்பை நாம் ஏற்கவேண்டும் என்பதே இறைவன் நம்மிடம் விரும்புவது என்று கூறியத் திருத்தந்தை, நம்மை சுற்றியிருக்கும் ஏழை மக்களின் அடிப்படைத் தேவைகளைப் புறந்தள்ளிவிட்டு, அருளடையாளங்களை நாம் பெறுவது, முரண்பாடாக மாறுகிறது என்றார்.
தன் போதனைகளைக் கேட்க வந்து மாலை வரை பசியோடு காத்திருந்த மக்களுக்கு இயேசு காட்டிய கருணை, இயேசு அவர்கள்மீது காட்டிய அன்பின் உறுதியான வெளிப்பாடு என்பதையும் சுட்டிக்காட்டினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
நம் ஆன்மீக உணவாக வரும் திருநற்கருணையை நாம் அணுகும்போது, இயேசு இக்கூட்டத்தின்மீது கொண்டிருந்த அதே மனநிலையோடு அணுகவேண்டும் என்ற அழைப்பையும் முன்வைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பசி, போன்றவை குறித்த செய்திகள் அதிகம் அதிகமாக வந்துகொண்டிருக்கும் இன்றையக் காலகட்டத்தில், இறைவனின் தந்தைக்குரிய அணைப்பில் நம்பிக்கைக் கொண்டு, துணிவுடன் பிறரோடு பகிர்வதற்கு நாம் முன்வரவேண்டும் என அழைப்புவிடுத்தார்.
கருணை என்பது, ஒரு பொருள் சார்ந்த உணர்வல்ல, மாறாக, மற்றவர் மீது கொண்டுள்ள ஆர்வத்துடன் பகிர்வதாகும், அதுவும், போர், பசி என்ற செய்திகள் வந்துகொண்டிருக்கும் காலகட்டத்தில், நமக்குள்ளதைப் பிறருடன் பகிரக் காத்திருக்கிறோமா என்ற கேள்வியை கேட்கவேண்டும் எனக் கேட்டுக்கொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ்
Source: New feed