
நாம் ஒவ்வொருவரும் புகைப்பட நகல்கள் அல்ல அசல்கள், தனித்துவமானவர்கள் என்றும், அன்பின் அரவணைப்பில் மலரும் புன்னகையால் கடவுள் அன்பை பெறுபவர்கள் என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
சனவரி 14, சனிக்கிழமையன்று, வத்திக்கானின் புனித ஆறாம் பவுல் அரங்கத்தில் திருத்தந்தை 23-ஆம் யோவான் அமைப்பினரைச் சேர்ந்த ஏறக்குறைய 700 சிறார் மற்றும் இளையோரைச் சந்தித்துப் பேசியபோது இவ்வாறு கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
கடவுளின் சாயலாகப் படைக்கப்பட்ட நாம் ஒவ்வொருவரும் நமது பெயர் மற்றும் முகத்தால் தனித்துவமானவர்களாக இருக்கின்றோம் எனவும், ஒரே மாதிரியாக இருக்கும் புகைப்பட நகல்கள் அல்ல, கடவுள் அன்பை பெறுபவர்கள் என்றும் எடுத்துரைத்தார் திருத்தந்தை.
சில குறிப்பிட்ட வரம்புகளைக் கொண்ட நம்மை கடவுள் அன்பாக, முழுமையாக, இயேசுவின் சாயலாகப் பார்க்கின்றார் எனவும், அவருடைய அன்பினால் நாம் முழுமையடைந்து, வாழ உதவுகின்றார் என்றும் எடுத்துரைத்தார் திருத்தந்தை.
கடவுளின் இத்தகைய அன்பின் முழுமை, அன்பின் அரவணைப்பில் மலரும் புன்னகையாக நம் முகத்தில் வெளிப்பட வேண்டும் எனவும், இதன் வழியாகக் கடவுள் அன்பினால் நாம் வரவேற்கப்பட்டு ஏற்றுக் கொள்ளப்படுகின்றோம் எனவும் கூறினார் திருத்தந்தை.
அருள்பணி Oreste Benzi அவர்களின் முயற்சியால் உருவான குடும்ப வீடு என அழைக்கப்படும் இவ்வமைப்பு இத்தாலியிலும் பிற நாடுகளிலும் பன்மடங்காகப் பெருகி வளர்ந்துள்ளது மகிழ்ச்சியளிக்கின்றது எனவும், ஒருவரையொருவர் கண்டுபிடிக்கும் ஒரு குடும்பமாகவும், உறவுகளின் உள்ளார்ந்த தேவைக்கான பதிலாக அனைவரையும் வரவேற்கும், கவனித்துக் கொள்ளும் இடமாக குடும்ப வீடு உள்ளது என்றும் குறிப்பிட்டார். திருத்தந்தை
மேலும் கருவிலேயே கொல்லப்படும் சிசுக்களை நினைவு கூர்ந்தமைக்கும், ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை மாலையும் இணையவழியில் சந்தித்து செபமாலை செய்யும் அச்சிறார் மற்றும் இளையோர்க்குத் தன் நன்றியினையும் திருத்தந்தை தெரிவித்தார்.
Source: New feed