ஒளியின் மக்களைவிட இவ்வுலகின் மக்கள் முன்மதியுள்ளவர்களாய் நடந்து கொள்ளுகிறார்கள்.
லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 16: 1-8
அக்காலத்தில்
இயேசு தம் சீடருக்குக் கூறியது: “செல்வர் ஒருவருக்கு வீட்டுப் பொறுப்பாளர் ஒருவர் இருந்தார். அவர் தம் தலைவரின் உடைமைகளைப் பாழாக்கியதாக அவர்மீது பழி சுமத்தப்பட்டது.
தலைவர் அவரைக் கூப்பிட்டு, ‘உம்மைப் பற்றி நான் கேள்விப்படுவது என்ன? உம் பொறுப்பிலுள்ள கணக்கை ஒப்படையும். நீர் இனி வீட்டுப் பொறுப்பாளராய் இருக்க முடியாது’ என்று அவரிடம் கூறினார்.
அந்த வீட்டுப் பொறுப்பாளர், ‘நான் என்ன செய்வேன்? வீட்டுப் பொறுப்பிலிருந்து என் தலைவர் என்னை நீக்கிவிடப்போகிறாரே! மண் வெட்டவோ என்னால் இயலாது; இரந்து உண்ணவும் வெட்கமாய் இருக்கிறது. வீட்டுப் பொறுப்பிலிருந்து என்னை நீக்கிவிடும்போது பிறர் என்னைத் தங்கள் வீடுகளில் ஏற்றுக்கொள்ளும்படி நான் என்ன செய்ய வேண்டும் என எனக்குத் தெரியும்’ என்று அவர் தமக்குள்ளே சொல்லிக் கொண்டார்.
பின்பு அவர் தம் தலைவரிடம் கடன்பட்டவர்களை ஒவ்வொருவராக வரவழைத்தார். முதலாவது வந்தவரிடம், ‘நீர் என் தலைவரிடம் எவ்வளவு கடன்பட்டிருக்கிறீர்?’ என்று கேட்டார். அதற்கு அவர், ‘நூறு குடம் எண்ணெய்’ என்றார். வீட்டுப் பொறுப்பாளர் அவரிடம், ‘இதோ உம் கடன் சீட்டு; உட்கார்ந்து ஐம்பது என்று உடனே எழுதும்’ என்றார். பின்பு அடுத்தவரிடம், ‘நீர் எவ்வளவு கடன்பட்டிருக்கிறீர்?’ என்று கேட்டார். அதற்கு அவர், ‘நூறு மூடை கோதுமை’ என்றார். அவர், ‘இதோ, உம் கடன் சீட்டு; எண்பது என்று எழுதும்’ என்றார்.
நேர்மையற்ற அந்த வீட்டுப் பொறுப்பாளர் முன்மதியோடு செயல் பட்டதால், தலைவர் அவரைப் பாராட்டினார். ஏனெனில், ஒளியின் மக்களை விட இவ்வுலகின் மக்கள் தங்கள் தலைமுறையினரிடத்தில் மிக்க முன்மதியுள்ளவர்களாய் நடந்து கொள்ளுகிறார்கள்.”
ஆண்டவரின் அருள்வாக்கு.
——————————————————
லூக்கா 16: 1-8
“முன்மதியோடு செயல்வோம்”
நிகழ்வு
புத்தியுள்ளவன் எப்படியும் பிழைத்துக் கொள்வான் என்பதற்குக் கிராமப்புறங்களில் சொல்லப்படுகின்ற கதை.
ஒரு கிராமத்தில் திருடச் சென்ற கைதேர்ந்த திருடன் ஒருவன், அங்கிருந்தவர்களிடம் எப்படியோ வகையாய் மாட்டிக்கொண்டான். இதனால் அந்தக் கிராமத்தில் இருந்தவர்கள் அவனை ஊருக்கு வெளியே இருந்த ஒரு மரத்தில் கட்டிவைத்து அடிக்க முயன்றார்கள். அப்பொழுது அந்தக் கிராமத்தில் இருந்த பெரியவர் ஒருவர், “நாம் காட்டு வேலைக்குச் செல்லவேண்டிய நேரம் வந்துவிட்டது. அதனால் இவன் இந்த மரத்தில் கட்டப்பட்டவாறே இருக்கட்டும். நாம் காட்டு வேலைக்குப் போய்விட்டு, மாலை நேரத்தில் வந்து, இவனை ஒரு சாக்கு மூட்டையில் கட்டிக் கடலில் வீசிவிடுவோம். இந்தச் செய்தியைக் கேள்விப்படும் எந்தத் திருடனும் இனிமேல் நம்முடைய ஊருக்குள் திருட வரமாட்டான்” என்றார். பெரியவர் சொன்ன யோசனை எல்லாருக்கும் சரியெனப்படவே, அவர்கள் அந்தத் திருடனை மரத்தில் நன்றாகக் கட்டி வைத்துவிட்டுக் காட்டு வேலையைப் பார்க்கக் கிளம்பிப் போனார்கள்.
நேரம் நடந்தது. திருடன் கட்டிவைக்கப்பட்டிருந்த இடத்தின் வழியாகத் தன்னுடைய ஆடுகளை ஓட்டிக்கொண்டு ஒருவன் வந்தான். அவன் திருடனிடம், “உன்னை ஏன் இந்த மரத்தில் கட்டி வைத்திருக்கின்றார்கள்?” என்று கேட்க, அவன் அந்த இடையனிடம், “இங்குள்ளவர்கள் எனக்கு மிகுதியாகப் பணம் தந்தார்கள். நான் அதை வாங்கவில்லை. அதனால்தான் இங்குள்ளவர்கள் என்னை இந்த மரத்தில் கட்டி வைத்துவிட்டார்கள்” என்றான் திருடன். “எதற்காக இங்குள்ளவர்கள் உனக்கு மிகுதியாகப் பணம் தரவேண்டும்…? எதற்காக நீ அந்தப் பணத்தை வாங்கவில்லை?” என்று இடையன் அடுத்த கேள்வியைக் கேட்டதும், திருடன் அவனிடம், “இங்குள்ளவர்கள் புதிதாக யார் இந்த ஊருக்குள் வந்தாலும், அவருக்கு மிகுதியாகப் பணம் தருவார்கள். நான் தன்மானம் உடையவன். யாரிடமும் கைநீட்டிப் பணம் வாங்காதவன். நான் இவர்களிடம் பணம் வாங்கவில்லை. அதனாலேயே இவர்கள் என்னை இந்த மரத்தில் கட்டிவைத்துவிட்டார்கள்” என்றான்.
திருடன் சொன்னதெல்லாம் உண்மை என நம்பிய இடையன், “இவர்கள் கொடுக்கும் பணத்தை வேண்டுமானால், நான் வாங்கிக்கொள்கின்றேன். நீ என்னுடைய ஆடுகளை ஓட்டிக்கொண்டு இங்கிருந்து போய்விடு” என்று சொல்லிக்கொண்டே திருடனை மரத்திலிருந்து விடுவித்தான். பின்னர் திருடன் அந்த இடையனை மரத்தில் கட்டிவைத்துவிட்டு, அவனுடைய ஆடுகளை ஓட்டிக்கொண்டு அங்கிருந்து நகர்ந்தான்.
மாலைநேரத்தில் காட்டு வேலைகளையெல்லாம் முடித்துகொண்டு கிராமத்தினர் ஊருக்கு வெளியே இருந்த அந்த மரத்திற்கு வந்தார்கள். அப்பொழுது பொழுது நன்றாக இருட்டியிருந்தது. ஆகவே, அவர்கள் வேறு எதையும் யோசிக்காமல், திருடனுக்குப் பதிலாக இருந்த இடையனை ஒரு சாக்கு மூட்டையில் வைத்துக் கட்டி, கடலில் வீசி எறிந்தார்கள்; ‘இத்தோடு திருடனின் தொந்தரவு ஓய்ந்தது’ என்று பேசிக்கொண்டு நிம்மதியாக வீட்டுக்குத் திரும்பி வந்தார்கள்.
மறுநாள் விடிந்தது. திருடன் இடையனிடமிருந்து கவர்ந்த ஆடுகளை ஓட்டிக்கொண்டு அந்தக் கிராமத்திற்குள் நுழைந்தான். அவனை அந்நிலையில் பார்த்த கிராமத்து மக்கள், “நீ எப்படி உயிரோடு வந்தாய்…? உனக்கு எப்படி இவ்வளவு ஆடுகள் கிடைத்தன…?” என்று கேட்க, அவன் அவனிடம், “கடலன்னை மிகவும் இரக்கமுள்ளவன். அவள் யாரெல்லாம் தனக்குள் மூழ்கி எழுகின்றார்களோ, அவர்களுக்கு இந்த மாதிரியான ஆசிகளை வழங்குவார்” என்றான். இதைக் கேட்டு அவர்களுக்குத் தங்களுக்கும் அந்த மாதிரியான ஆசிகளைப் பெற ஆசை வந்தது. இதனால் அந்தக் கிராமத்தில் இருந்தவர்கள் யாவரும் கடலுக்குள் போய் மூழ்கினார்கள். மூழ்கியவர்கள் மூழ்கியவர்கள்தான். திரும்பி எழவே இல்லை. இவ்வாறு புத்தியுள்ள அந்தத் திருடனுக்குக் அந்தக் கிராமமே சொந்தமானது.
வேடிக்கையான ஒரு கதையாக இருந்தாலும், அறிவுத் தெளிவோடும் முன்மதியோடும் செயல்பட்டால் எப்படிப்பட்ட ஆபத்திலிருந்தும் நாம் வெளியே வந்துவிடலாம் என்ற செய்தியைக் கதையானது நமக்கு உணர்த்துகின்றது. இன்றைய நற்செய்தியில் இயேசு, நாம் முன்மதியோடு செயல்படவேண்டும் என்ற செய்தியை எடுத்துச் சொல்கின்றார். அது குறித்து நாம் சிந்தித்துப் பார்ப்போம்.
முன்மதியோடு செயல்பட்டதால், வீட்டுத் தலைவரால் பாராட்டப்பட்ட வீட்டுப் பொறுப்பாளர்
நற்செய்தியில் ஆண்டவர் முன்மதியோடு செயல்பட்ட வீட்டுப் பொறுப்பாளர் உவமையைப் பற்றிப் பேசுகின்றார். இந்த வீட்டுப் பொறுப்பாளர் தன்னிடம் கொடுக்கப்பட்ட பொறுப்புகளுக்கு உண்மையாய் இல்லை என்பது இவருடைய தலைவருக்குத் தெரிய வருகின்றது. அதனால் இவர், தன்னுடைய தலைவர் எப்படியும் தன்னை வேலையிலிருந்து தூக்கிவிடுவார் என்று அஞ்சி, தன்னுடைய தலைவரிடம் கடன்பட்டவர்களை எல்லாம் அழைத்து, கடன் பட்ட அளவைக் குறைத்து எழுதச் சொல்கின்றார். இதனால் தன் தலைவர் தன்னை வேலையிலிருந்து நீக்கினாலும், தன்னால் இரக்கம் காட்டப்பட்ட இவர்கள் எதிர்காலத்தில் தன்னைத் தங்களுடைய வீடுகளில் ஏற்றுக்கொள்வர் என்ற எண்ணத்தோடு செயல்படுகின்றார். இதனால் இவருடைய தலைவர் இவரைப் பாராட்டுகின்றார்.
ஆண்டவர் இயேசு இந்த உவமையைச் சொல்லக் காரணம், நாம் நேர்மையற்றவர்களாய் நடக்கவேண்டும் என்பதல்ல, மாறாக, முன்மதியோடு நடக்கவேண்டும் என்பதற்குத்தான். நாம் நம்முடைய வாழ்வில் முன்மதியோடு நடந்துகொள்ளவேண்டும் என்பதை இயேசு நற்செய்தியில் ஒருசில இடங்களில் பதிவுசெய்கின்றார் (மத் 10: 16, 25: 1-13). ஆகையால், நாம் நம்முடைய அன்றாட வாழ்க்கையில் முன்மதியோடு வாழக் கற்றுக்கொள்வோம்
சிந்தனை
‘முன்மதி கொண்டோர் பெரியார்களை மகிழ்விக்கின்றனர்’ (சீஞா 20: 27) என்கிறது சீராக்கின் ஞான நூல். ஆகையால், நாம் முன்மதியுடவர்களாய், இறைவனுக்கு உகந்த வழியில் நடப்போம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
Source: New feed