
வலைகளை விட்டுவிட்டு இயேசுவைப் பின்பற்றினார்கள்.
✠ மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 4: 18-22
அக்காலத்தில்
இயேசு கலிலேயக் கடலோரமாய் நடக்கும்போது, சகோதரர் இருவரைக் கண்டார். ஒருவர் பேதுரு எனப்படும் சீமோன், மற்றவர் அவர் சகோதரரான அந்திரேயா. மீனவரான அவ்விருவரும் கடலில் வலை வீசிக் கொண்டிருந்தனர்.
இயேசு அவர்களைப் பார்த்து, “என் பின்னே வாருங்கள்; நான் உங்களை மனிதரைப் பிடிப்பவர் ஆக்குவேன்” என்றார்.
உடனே அவர்கள் வலைகளை விட்டுவிட்டு அவரைப் பின்பற்றினார்கள். அங்கிருந்து அப்பால் சென்றபோது வேறு இரு சகோதரர்களைக் கண்டார். அவர்கள் செபதேயுவின் மகன் யாக்கோபும் அவர் சகோதரரான யோவானும் ஆவர். அவர்கள் தங்கள் தந்தை செபதேயுவுடன் படகில் வலைகளைப் பழுது பார்த்துக் கொண்டிருந்தார்கள். இயேசு அவர்களையும் அழைத்தார்.
உடனே அவர்கள் தங்கள் படகையும் தந்தையையும் விட்டுவிட்டு அவரைப் பின்பற்றினார்கள்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
—————————————————————–
திருத்தூதர் அந்திரேயாவின் திருநாள்.
இவர் சீமோன் பேதுருவின் சகோதரர். அண்ணனா? தம்பியா? என்று தெரியவில்லை.
‘நம்பிக்கை கொள்ளாமல் எப்படி மன்றாடுவார்கள்?
கேள்வியுறாமல் எப்படி நம்புவார்கள்?
அறிவிக்கப்படாமல் எப்படி கேள்வியுறுவார்கள்?
அனுப்பப்படாமல் எப்படி அறிவிப்பார்கள்?’
(காண் உரோ 10:9-18)
முதல் வாசகத்தில் பவுல் பயன்படுத்தும் இலக்கிய நடையின் பெயர் ‘படிக்கட்டு’ (Staircase Rhetoric). அதாவது, முதல் வாக்கியத்தின் முதல் வார்த்தை அடுத்த வாக்கியத்தின் இறுதி வாக்கியமாக இருக்கும். இது ஒரு வகையான பேச்சு நடை. இந்த நடையில் ஒருவர் பேசும்போது, பேசுபவரும் தான் பேச வேண்டியதை மறந்துவிடாமல் பேசுவார். கேட்பவரும் எளிதில் நினைவில் கொள்வார்.
நாங்கள் திருத்தொண்டராகும்போது நடைபெற்ற சடங்கிலும், ஆயர் எங்கள் கையில் விவிலியத்தைக் கொடுத்து இதே போல ஒரு படிக்கட்டு நடை வாக்கியத்தைச் சொல்வார்:
‘வாசிப்பதை நம்பு.
நம்புவதை போதி.
போதிப்பதை வாழ்ந்துகாட்டு’
இதில் நடை ‘கண்ணாடியின் பிம்பம்போல’ திரும்பி நிற்கிறது. ஒரு வாக்கியத்தின் கடைசி வார்த்தை அடுத்த வாக்கியத்தின் முதல் வார்த்தையாக இருக்கிறது.
இவ்வகை நடையில் உள்ள ஆபத்து என்னவென்றால், ஒரு வார்த்தை புரண்டாலும் அர்த்தம் கிடைக்காமல் போய்விடும்.
திருத்தூது பணி இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் இருந்த சீடர்களின் பணி மட்டுமல்ல.
ஒவ்வொருவரும் படிக்கட்டு போல வரும் இந்தப் பணியில் நமக்கு உரிய அளவில் திருத்தூது பணி செய்வது அவசியம்.
‘தீமைகளை விலக்கி, நன்மைகளைக் கற்றக்கொள்வது’ என தனிநபர் வாழ்வு சார்ந்ததும் திருத்தூதுப்பணியே.
Source: New feed