என் பெயரின் பொருட்டு எல்லாரும் உங்களை வெறுப்பார்கள். இருப்பினும் உங்கள் தலைமுடி ஒன்றுகூட விழவே விழாது.
லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 21: 12-19
அக்காலத்தில் இயேசு தம் சீடர்களுக்குக் கூறியது: “அனைத்தும் நடந்தேறுமுன் அவர்கள் உங்களைப் பிடித்துத் துன்புறுத்துவார்கள்; தொழுகைக் கூடங்களுக்குக் கொண்டு செல்வார்கள்; சிறையில் அடைப்பார்கள்; என் பெயரின் பொருட்டு அரசரிடமும் ஆளுநரிடமும் இழுத்துச் செல்வார்கள். எனக்குச் சான்று பகர இவை உங்களுக்கு வாய்ப்பளிக்கும். அப்போது என்ன பதில் அளிப்பது என முன்னதாகவே நீங்கள் கவலைப்பட வேண்டாம். இதை உங்கள் மனத்தில் வைத்துக்கொள்ளுங்கள்.
ஏனெனில் நானே உங்களுக்கு நாவன்மையையும் ஞானத்தையும் கொடுப்பேன்; உங்கள் எதிரிகள் எவராலும் உங்களை எதிர்த்து நிற்கவும் எதிர்த்துப் பேசவும் முடியாது.
ஆனால் உங்கள் பெற்றோரும் சகோதரர் சகோதரிகளும் உறவினர்களும் நண்பர்களும் உங்களைக் காட்டிக்கொடுப்பார்கள்; உங்களுள் சிலரைக் கொல்வார்கள். என் பெயரின் பொருட்டு எல்லாரும் உங்களை வெறுப்பார்கள். இருப்பினும் உங்கள் தலைமுடி ஒன்றுகூட விழவே விழாது. நீங்கள் மன உறுதியோடு இருந்து உங்கள் வாழ்வைக் காத்துக்கொள்ளுங்கள்.”
ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு
மறையுரைச் சிந்தனை :
மனவுறுதியோடு இருந்து உங்கள் வாழ்வைக் காத்துக்கொள்ளுங்கள்
பதினைந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த மிகப்பெரிய புனிதர், போஹேமியன் சீர்திருத்தவாதி என்று அழைக்கப்படுபவர் ஜான் ஹஸ் (John Huss) என்பவர். இவர் பவேரியா இடத்தில் மறைபோதகப் பணியைச் செய்ததற்காக 1415 ஆம் ஆண்டு உயிரோடு தீயிலிட்டுக் கொழுத்தப்பட்டவர்.
அவ்வாறு அவர் கொல்லப்படுவதற்கு முன்பாக கயவர்கள் சிலர், சாத்தான்களின் உருவப்படம் பொறித்த கிரீடத்தை அவருடைய தலையில் பொருத்தி அவரை ஏளனம் செய்தனர். அதற்கு அவர், “என் ஆண்டவராகிய இயேசுவே தனக்குப் பொருத்தப்பட்ட முன்கிரீடத்தைத் துணிவோடு ஏற்றுக்கொண்டார். அவரே அவ்வாறு ஏற்றுக்கொள்ளும்போது நான் இந்த கிரீடத்தை ஏற்றுக்கொள்வதில் என்ன தடங்கல் இருக்கிறது” என்று அந்த கிரீடத்தை ஏற்றுக்கொண்டார்.
அதன்பின்னர் அந்த கயவர்கள் ஜான் ஹசின் கழுத்தில் ஒரு பாரமான மரத்தைக் கட்டி, “நீ மட்டும் இயேசுவைப் பற்றிய நற்செய்தியை அறிவிப்பதை விட்டுவிட்டால், உன்னைக்கொல்லாமல் விட்டுவிடுவோம்” என்று பயமுறுத்திப் பார்த்தனர். அப்போது அவர், “என்னை நீங்கள் கொன்றாலும் சரி, என்ன செய்தாலும் சரி, நான் என்னுடைய ஆண்டவர் இயேசுவை ஒருநாளும் மறுதலிக்க மாட்டேன். அவரைப் பற்றிய நற்செய்தியை அறிவிக்காமல் இருக்கமாட்டேன்” என்று தன்னுடைய முடிவில் மிக உறுதியாக இருந்தார்.
இறுதியல் அவர்கள் ஜான் ஹசை தீயிலிட்டு கொன்றுபோட்டார்கள். அவரோ, “ஆண்டவர் இயேசுதான் உண்மையான இறைவன்” என்று பாடிக்கொண்டே உயிர்துறந்தார்.
எத்தனை அச்சுறுத்தல், துன்பங்கள் வந்தாலும் கிறிஸ்துவின்மீது கொண்ட விசுவாசத்தில் மிக உறுதியாக இருந்த ஹான் ஹசின் சாட்சிய வாழ்வு உண்மையிலே நமக்கு மிகப்பெரிய மடமாக இருக்கின்றது.
நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு இறுதி நாட்களில் என்னவெல்லாம் நடக்கும் என்று சொல்கிறபோது தன்னைப் பின்பற்றி நடப்பவர்களுக்கு எப்படிப்பட்ட துன்பம் வரும் என்பதை இவ்வாறு எடுத்துக்கூறுகிறார், “அனைத்தும் நடந்தேறுமுன் அவர்கள் உங்களைப் பிடித்துத் துன்புறுத்துவார்கள்; தொழுகைக்கூடங்களுக்குக் கொண்டு செல்வார்கள்; சிறையில் அடைப்பார்கள். என் பெயரின் பொருட்டு அரசர்களிடமும், ஆளுநரிடமும் இழுத்துச் செல்வார்கள்… நீங்கள் மனவுறுதியோடு உங்கள் வாழ்வைக் காத்துக்கொள்ளுங்கள்”.
இயேசுவின் சீடர்கள் யாவரும் நற்செய்தி அறிவிப்பில் வரும் துன்பங்களையும், சவால்களையும் துணிவோடு தாங்கிக்கொள்ளவேண்டும் என்பதுதான் அவருடைய அறிவுரையாக இருக்கின்றது. எனக்கு துன்பங்கள் வேண்டாம், சிலுவைகள் வேண்டாம், பாடுகள் வேண்டாம் என்று சொல்லும் எவரும் இயேசுவின் சீடராக இருக்கமுடியாது.
நற்செய்தி அறிவிப்பில் வரும் துன்பங்களை எடுத்துச் சொன்ன இயேசு, அதில் இருக்கும் கடவுளின் பராமரிப்பையும், பாதுகாப்பையும் நமக்குச் சுட்டிக்காட்டத் தவறவில்லை. “உங்கள் பெற்றோரும் சகோதரர் சகோதரிகளும் உறவினர்களும் நண்பர்களும் உங்களைக் காட்டிக் கொடுப்பார்கள். உங்களுள் சிலரைக் கொள்வார்கள். என் பெயரின் பொருட்டு எல்லாரும் உங்களை வெறுப்பார்கள்” என்று சொல்லும் இயேசு, “இருப்பினும் உங்கள் தலைமுடி ஒன்றுகூட விழவே விழாது” என்கிறார். இதுதான் கடவுள் தன்னுடைய அடியார்களுக்குத் தரும் பாதுகாப்பும், நம்பிக்கையுமாக இருக்கின்றது.
விவிலியத்தில் பல இடங்களில் இதுபோன்ற ஆறுதலான வார்த்தையையும், பாதுகாப்பையும் இறைவன் தன்னுடைய அடியார்களுக்குத் தருவதை வாசிக்க முடிகிறது. ஆண்டவராகிய கடவுள் மோசேயை இஸ்ரயேல் மக்களை வழிநடத்த அழைத்தபோது அவரோ, “ஐயோ! ஆண்டவரே! நீர் உமது அடியானிடம் பேசுவதற்கு முன்போ, பேசிய பின்போ, நாவன்மை அற்றவன் நான்! ஏனெனில் எனக்கு வாய் திக்கும்; நாவும் குழறும்” என்கிறார். அதற்கு ஆண்டவர் அவரிடம், “இப்போதே போ! நானே உன் நாவில் இருப்பேன்; நீ பேசவேண்டியதை உனக்குக் கற்பிப்பேன்” என்று சொல்லி அவரைத் திடப்படுத்தி அனுப்பி வைக்கிறார். (விப 4: 10-12)
ஆண்டவர் எரேமியா இறைவாக்கினரை தன்னுடைய பணிக்காக அழைக்கும்போது அவர், என் தலைவராகிய ஆண்டவரே, எனக்குப் பேசத் தெரியாதே, சிறுபிள்ளைதானே” என்று சொல்கிறார். உடனே கடவுள் அவரைப் பார்த்து, “சிறுபிள்ளை நான்” என்று சொல்லாதே, யாரிடமெல்லாம் உன்னை அனுப்புகிறேனோ அவர்களிடம் சொல்; எவற்றை எல்லாம் சொல்லக் கட்டளை இடுகிறேனோ அவற்றை சொல். அவர்கள் முன் அஞ்சாதே. ஏனெனில் உன்னை விடுவிக்க நான் உன்னோடு இருக்கிறேன்” ( எரே 1: 6-9) என்கிறார்.
எனவே, கடவுள் தன்னுடைய அடியார்களுக்குச் செய்யும் நன்மை அளப்பெரியது. ஆதலால், கடவுளின் பராமரிப்பை உணர்ந்தவர்களாய் துணிவுடன் நற்செய்தி அறிவிப்போம். எதிர்வரும் சவால்களை எதிர்த்து நிற்போம். இறைவன் அளிக்கும் முடிவில்லா வாழ்வைக் கொடையாகப் பெறுவோம்
Source: New feed