கடவுளைப் போற்றிப் புகழ அன்னியராகிய உம்மைத் தவிர வேறு எவரும் திரும்பிவரக் காணோமே.
லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 17: 11-19
அக்காலத்தில் இயேசு எருசலேமுக்குப் போய்க்கொண்டிருந்தபோது கலிலேய, சமாரியப் பகுதிகள் வழியாகச் சென்றார்.
ஓர் ஊருக்குள் வந்தபொழுது, பத்துத் தொழுநோயாளர்கள் அவருக்கு எதிர்கொண்டு வந்து, தூரத்தில் நின்றுகொண்டே, “ஐயா! இயேசுவே, எங்களுக்கு இரங்கும்” என்று உரக்கக் குரலெழுப்பி வேண்டினார்கள்.
அவர் அவர்களைப் பார்த்து, “நீங்கள் போய் உங்களைக் குருக்களிடம் காண்பியுங்கள்” என்றார். அவ்வாறே அவர்கள் புறப்பட்டுப் போகும் போது அவர்கள் நோய் நீங்கிற்று.
அவர்களுள் ஒருவர் தம் பிணி தீர்ந்திருப்பதைக் கண்டு உரத்த குரலில் கடவுளைப் போற்றிப் புகழ்ந்துகொண்டே இயேசுவிடம் திரும்பி வந்தார்; அவருடைய காலில் முகங்குப்புற விழுந்து அவருக்கு நன்றி செலுத்தினார்.
அவரோ ஒரு சமாரியர்.
இயேசு அவரைப் பார்த்து, “பத்துப் பேர்களின் நோயும் நீங்கவில்லையா? மற்ற ஒன்பது பேர் எங்கே? கடவுளைப் போற்றிப் புகழ அன்னியராகிய உம்மைத் தவிர வேறு எவரும் திரும்பிவரக் காணோமே!” என்றார்.
பின்பு அவரிடம், “எழுந்து செல்லும், உமது நம்பிக்கை உமக்கு நலமளித்தது” என்றார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
மறையுரைச் சிந்தனை :
நன்றி நிறைந்த உள்ளத்தினராய் வாழ்வோம்
அது ஒரு பழமையான பங்குத்தளம். அதில் பணிசெய்துவந்த பங்குத்தந்தை ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் தன்னுடைய வழிபாட்டை ஆரம்பிக்கும் முன்பு இறைவனுக்கு நன்றி சொல்லிவிட்டுத்தான் ஆரம்பிப்பார். “இந்நாளை இறைவன் கொடுத்ததற்காக இறைவனுக்கு நன்றி சொல்லுவோம்” என ஆரம்பித்து, இறைவன் செய்த பல்வேறு நன்மைகளையும் நினைவுகூர்ந்து நன்றி கூறுவதுதான் அவருடைய முதல் வேலையாக இருக்கும்.
இப்படியே நாட்கள் போய்க்கொண்டிருக்க, அந்த ஆண்டு மழைக்காலம் வந்தது. குறிப்பிட்ட ஒரு ஞாயிற்றுக்கிழமையில் கடுமையாக மழை பெய்துகொண்டிருந்தது. மழையாக இருந்தாலும் மக்கள் ஆலயத்தில் வந்து கூடினர். ஆலயத்தின் ஒரு பகுதியில் இருந்த கூரையின் வழியாக மழைத்தண்ணீர் ஒழுகிக் கொண்டிருந்தது. அதனால் அங்கிருந்த பொருட்கள் நனையத் தொடங்கின. எனவே அந்தப் பகுதியில் யாரும் அமர முடியாமல் நிற்க வேண்டியதாயிற்று.
மழை தொடர்ந்து அதிகமாகப் பேய்ந்துகொண்டிருக்க, மழை எப்போது விடும் என்று காத்துக் கொண்டிருந்தார்கள். அன்று ஆலயத்திற்கு வந்த மக்களில் சிலர் இவ்வாறு பேசிக்கொண்டார்கள். “வழக்கமாக நமது பங்குத்தந்தை நன்றி சொல்லித்தான் வழிபாட்டைத் தொடங்குவார். இன்று மழைபெய்து கடவுள் வழிபடவிடாமல் தடுக்கிறாரே, குருவானார் எப்படி நன்றி சொல்லப் போகிறார்? பார்ப்போம்” என்று அங்கலாய்த்துக் கொண்டிருந்தார்கள்.
வழிபாடு ஆரம்பிக்கும் நேரம் வந்தது. பங்குத்தந்தையும் சரியான நேரத்திற்கு ஆலய பீடத்திற்கு வந்தார். அன்றும் மிக்க மகிழ்ச்சியோடு மக்களைப் பார்த்து புன்னகைத்து விட்டு தனது ஜெபத்தைத் தொடங்கினார். “கடவுளே! இந்த ஞாயிற்றுக்கிழமையைத் தந்ததற்காக நாங்கள் உமக்கு நன்றி கூறுகின்றோம். எல்லா ஞாயிற்றுக்கிழமையும் இதுபோன்ற கடுமையான மழையைத் தரவில்லை என்பதற்காக நன்றி கூறுகின்றோம். எல்லா ஞாயிற்றுக்கிழமைகளிலும் எங்கள் ஆலயத்தின் கூரை ஒழுகி எங்களுக்கு எந்தவித பாதிப்பினையும் தராமல் இருந்ததற்காக நன்றி கூறுகின்றோம்” என்று ஜெபித்தார்.
பங்குத்தந்தை இவ்வாறு ஜெபித்ததைக் கேட்டு, அதுவரைக்கும் அங்கலாத்துக் கொண்டிருந்தவர்கள் ‘எல்லா நாட்களும் இதுபோன்ற சிரமம் இருந்ததில்லையே! எனவே, நாம் இந்நாளை மனமுவந்து ஏற்றுக்கொள்வோம் என்ற மனநிலையோடு ஜெபத்தில் முழுமையாகப் பங்கேற்றார்கள்.
பவுலடியார் கூறுவது போல, “என்ன நேர்ந்தாலும் நன்றி கூறுங்கள். இறைவிடாது ஜெபியுங்கள்’ என்ற மனநிலையோடு தன்னுடைய பணிகளைச் செய்துவந்த இந்த பங்குத்தந்தை நமது கவனத்திற்கு உரியவராக இருக்கின்றார்.
நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு கலிலேயா, சமாரியாப் பகுதிகள் வழியாக எருசலேமிற்குப் போய்க்கொண்டிருக்கின்றார். அப்போது அவரை எதிர்கொண்டு வருகின்ற பத்துத் தொழுநோயாளர்கள், தங்களைக் குணப்படுத்தும்படி, இயேசுவிடம் கெஞ்சிக் கேட்கின்றார்கள். இயேசு அவர்களிடம், “நீங்கள் போய் உங்களைக் குருக்ககளிடம் காண்பியுங்கள்” என்று சொல்ல, அவர்களும் அவ்வாறு செல்கின்றார்கள். அப்படிச் செல்கின்றபோது அவர்களுடைய நோய் நீங்குகின்றது. இதில் சமாரியன் மட்டும் இயேசுவுக்கு நன்றி செலுத்த வருகின்றார். அவரைப் பார்த்து இயேசு, “பத்துப் பேர்களின் நோயும் நீங்கவில்லையா? மற்ற ஒன்பது பேர் எங்கே? கடவுளைப் புகழ அன்னியராகிய உம்மைத் தவிர வேறு எவரும் திரும்பி வரக்காணோமே!” என்கின்றார்.
லூக்கா நற்செய்தியில் மட்டும் இடம்பெறும் இந்த நிகழ்வு நமக்கு மூன்று முக்கியமான செய்திகளைச் சொல்கின்றது. ஒன்று, இறைவனிடத்திலிருந்து நாம் நன்மைகளைப் பெறவேண்டும் என்றால், தாழ்ச்சியான உள்ளத்தோடு அவருடைய அருளை இறைஞ்சி நிற்கவேண்டும். நற்செய்தியில் வருகின்ற பத்துத் தொழுநோயளர்களும் இயேசுவைக் கண்டவுடன், “ஐயா, இயேசுவே, எங்களுக்கு இரங்கும்” என்று சொல்லித்தான் வேண்டுகின்றார்கள். ஆகையால், நாம் ஒவ்வொருவரும் இறைவனிடம் வேண்டும்போது தாழ்ச்சியான உள்ளத்தோடு இறைஞ்ச வேண்டும்.
இரண்டு, இறைவனிடமிருந்து இறையருளைப் பெறவேண்டும் என்றால், அவருடைய கட்டளைகளைக்குக் கட்டுப்பாட்டு நடக்கவேண்டும். நற்செய்தியில் வருகின்ற பத்துத் தொழுநோயாளர்களும், இயேசு சொன்ன வார்த்தைகளுக்குக் கட்டுப்பட்டு, தங்களை ஆலயக் குருக்களிடம் காண்பிக்கப் போகிறார்கள். அவர்கள் அவர் சொன்னதன்படி நடந்ததால்தான் போகிற வழியிலே குணமடைகிறார்கள். நாமும் ஆண்டவருடைய வார்த்தைகளுக்குக் கீழ்படிந்து நடக்கின்றபோது, அவரிடமிருந்து ஏராளமான நன்மைகளைப் பெறுவது உறுதி.
மூன்று. இறைவனிடமிருந்து பெற்ற நன்மைகளுக்கு நன்றியுள்ளவர்களாக இருக்க வேண்டும். பத்துத் தொழுநோயாளர்களும் இயேசுவால் நலம்பெற்றார்கள். ஆனால், சமாரியர் ஒருவர் மட்டும்தான் அவருக்கு நன்றி செலுத்த வருகின்றார். அவர் இயேசுவுக்கு நன்றி செலுத்த வந்தது, அவர் நிறைவானவராக இருக்கிறார் என்பதை எடுத்துக் காட்டுவதாக இருக்கின்றது. அதனால்தான் இயேசு அவரிடம் உம்முடைய நம்பிக்கை உம்மைக் குணப்படுத்தியது என்று சொல்கின்றார். நாம் இறைவனிடமிருந்து பெற்ற நன்மைகளுக்குக் நன்றியுள்ளவர்களாக இருக்கின்றோமா? அப்படியிருந்தோம் என்றால், நாம் நிறைவான மனிதர்களாக இருக்கின்றோம் என்று அர்த்தம். ஏனென்றில் குறைவான மனிதர்கள்தான் ‘இறைவனிடமிருந்து என்ன பெற்றோம்?’ என்று குறைபட்டுக் கொள்வார்கள்.
ஆகவே, இறைவனிடமிருந்து பெற்ற நன்மைகளுக்கு அவருக்கு நன்றியுள்ளவராக இருப்போம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.
– மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
Source: New feed