இந்த ஏழைக் கைம்பெண், எல்லாரையும்விட மிகுதியாகப் போட்டிருக்கிறார்.
மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 12: 38-44
அக்காலத்தில் இயேசு கற்பித்துக் கொண்டிருந்தபோது, “மறைநூல் அறிஞர்களைக் குறித்துக் கவனமாய் இருங்கள். அவர்கள் தொங்கல் ஆடை அணிந்து நடமாடுவதையும் சந்தை வெளிகளில் மக்கள் தங்களுக்கு வணக்கம் செலுத்துவதையும் விரும்புகிறார்கள்; தொழுகைக்கூடங்களில் முதன்மையான இருக்கைகளையும் விருந்துகளில் முதன்மையான இடங்களையும் பெற விரும்புகிறார்கள்; கைம்பெண்களின் வீடுகளைப் பிடுங்கிக்கொள்கிறார்கள்; நீண்ட நேரம் இறைவனிடம் வேண்டுவதாக நடிக்கிறார்கள். கடுந்தண்டனைத் தீர்ப்புக்கு ஆளாக இருப்பவர்கள் இவர்களே” என்று கூறினார்.
இயேசு காணிக்கைப் பெட்டிக்கு எதிராக அமர்ந்து கொண்டு மக்கள் அதில் செப்புக் காசு போடுவதை உற்று நோக்கிக்கொண்டிருந்தார். செல்வர் பலர் அதில் மிகுதியாகப் போட்டனர். அங்கு வந்த ஓர் ஏழைக் கைம்பெண் ஒரு கொதிராந்துக்கு இணையான இரண்டு காசுகளைப் போட்டார்.
அப்பொழுது, அவர் தம் சீடரை வரவழைத்து, “இந்த ஏழைக் கைம்பெண், காணிக்கைப் பெட்டியில் காசு போட்ட மற்ற எல்லாரையும் விட மிகுதியாகப் போட்டிருக்கிறார் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். ஏனெனில் அவர்கள் அனைவரும் தங்களுக்கு இருந்த மிகுதியான செல்வத்திலிருந்து போட்டனர். இவரோ தமக்குப் பற்றாக்குறை இருந்தும் தம்மிடம் இருந்த அனைத்தையுமே, ஏன் தம் பிழைப்புக்காக வைத்திருந்த எல்லாவற்றையுமே போட்டுவிட்டார்” என்று அவர்களிடம் கூறினார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
——————————————
11 நவம்பர் 2018: ஆண்டின் பொதுக்காலம் 32ஆம் ஞாயிறு
I. 1 அரசர்கள் 17:10-16 II. எபிரேயர் 9:24-28 III. மாற்கு 12:38-44
வெறுங்கை முழம் போடுமா?
கைம்பெண்கள் – நாம் எதிர்கொள்ளும் கேள்விக்குறிகள், ஆச்சர்யக்குறிகள்!
இன்றைய இறைவாக்கு வழிபாட்டில் இரண்டு கைம்பெண்களை (சாரிபாத்து, எருசலேம் நகர்) பார்க்கின்றோம். இவ்விரண்டு கைம்பெண்களையும் இரண்டு இறைவாக்கினர்கள் (எலியா, இயேசு) சந்திக்கின்றனர்.
இன்றைய முதல் வாசகத்தை கொஞ்சம் முன்னும் (1 அர 17:1-9), பின்னும் (1 அர 18) நீட்டிப் பார்த்தால்தான் இந்த வாசகத்தில் குறிப்பிடப்படும் நிகழ்வை முழுவதும் புரிந்து கொள்ள முடியும். சாரிபாத்து நகரில் எலியா இறைவாக்கினர் கைம்பெண் ஒருவரால் பசியாறப்பெறுகின்றார். இதுதான் ஒற்றைவரியில் முதல் வாசகம். ஆனால் இதன் பின்புலம் பாகால் வழிபாடு. சாலமோனுக்குப் பின் ஒருங்கிணைந்த அரசு வடக்கு, தெற்கு என பிரிந்து போக, எலியா வடக்கே, அதாவது இஸ்ராயேலில் (‘தெற்கு’, யூதா என அழைக்கப்பட்டது) இறைவாக்குரைத்தார். வடக்கே ஆட்சி செய்த ஆகாபு தன் நாட்டில் இருந்த பாகால் வழிபாட்டைத் தடுக்க முடியவில்லை. மக்கள் தங்கள் இறைவனாம் யாவேயை மறந்துவிட்டு இந்தப் புதிய கடவுள்பின் செல்கின்றனர். யாவே இறைவன் இதனால் கோபம் கொண்டு மழையை நிறுத்திவிடுகின்றார். மூன்றரை ஆண்டுகள் கடும் பஞ்சம். தண்ணீர்நிலைகள் வற்றிக்கொண்டிருக்கின்றன. காகங்கள் வழியாக எலியாவுக்கு உணவளித்து வந்த இறைவன் இப்போது சாரிபாத்து நகர் ஏழைக்கைம்பெண்ணிடம் அனுப்புகின்றார். அப்படி சாரிபாத்துக்கு வந்த எலியா, ஏழைக்கைம்பெண்ணைச் சந்திக்கும் நிகழ்வே இன்றைய முதல் வாசகம்.
எலியா நகரின் நுழைவாயிலை அடையும்போது கடைசிக் கள்ளிகளைப் பொறுக்கிக்கொண்டிருக்கிறாள் கைம்பெண். ‘பாத்திரத்தில் தண்ணீர் கொடு’ என்கிறார் எலியா. அந்தக் கைம்பெண்ணின் வீட்டில் ஒருவேளை ஒரேயொரு பாத்திரம் மட்டும்தான் இருந்திருக்க வேண்டும். கைம்பெண்கள் வீட்டில் யாரும் தண்ணீர் கேட்டு வருவதில்லை. ஆகவே, அவர்கள் தனி சொம்பு அல்லது டம்ளர் வைத்திருக்க வாய்ப்பில்லை. இப்போது எலியாவுக்கு தண்ணீர் கொண்டு வர வேண்டுமென்றால் மாவு இருக்கும் பாத்திரத்தைக் காலி செய்து அதிலிருந்துதான் கொண்டு வர முடியும். முதலில் தண்ணீர் கேட்டவர், கூடவே அப்பமும் கேட்கிறார். ஒன்றுமில்லா கைம்பெண் தனக்கென்று வைத்திருந்த எல்லாவற்றையும் இந்த எலியா கேட்டுவிடுகிறார். இறைவன் கேட்டால் நம்மிடம் அப்படித்தான் கேட்கிறார். கொடுத்தால் எல்லாவற்றையும் கொடு. அல்லது ஒன்றையும் எனக்குக் கொடுக்காதே. ‘எனக்கு கொஞ்சம், உனக்கு கொஞ்சம்’ என இறைவனிடத்தில் நான் பேச முடியுமா? முடியாது. கொடுத்தால் அப்படியே முழுமையாகக் கொடுக்க வேண்டும்.
‘அதன் பின் சாகத்தான் வேண்டும்’. கைம்பெண்ணின் இந்தச் சொல் நம் உள்ளத்தையும் பிசைந்து விடுகிறது. எல்லா இடத்திலும் பஞ்சம் அதிகரித்து மக்கள் செத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை கதாசிரியர் இந்த ஒற்றை வரியில் பதிவு செய்கிறார். ‘என்னையும், என் மகனையும் சுவாசிக்க வைத்திருப்பது இந்த அப்பம்தான். இதன்பின் பசியும், இறப்பும்தான்’ என முன்பின் தெரியாத ஒருவரிடம் தன் நிலை பற்றி சொல்கின்றார் கைம்பெண். வாழ்வில் இதற்குமேல் ஒன்றுமில்லை என்ற கட்டத்திற்கு வந்துவிட்டால் நாமும் முன்பின் தெரியாதவரிடம்கூட நம் மனதை அப்படியே திறந்து காட்டுவிடுவோம்தானே. மற்றொன்றையும் கவனிக்க வேண்டும். ஒரு விளக்கு அணையப்போகிறது என்று நினைத்தவுடன் கடவுள் அங்கே சரியான நேரத்தில் தன் இறைவாக்கினரை அனுப்புகின்றார். ஏற்கனவே அவளின் வாழ்வில் கணவன் என்ற விளக்கு அணைந்து போய்விட்டது. இன்னும் இருக்கும் நம்பிக்கை மகனில் எரிந்து கொண்டிருக்கிறது. மகன் ஒருவேளை சிறு பையனாக இருக்கலாம். ஆகையால்தான் இன்னும் தாயே அவனுக்கு உணவு தந்து கொண்டிருக்கிறாள். இவளின் வாழ்வு என்னும் விளக்கு அணையும்போது, ‘இனி உன் வீட்டில் விளக்கே அணையாது’ என்று அவளின் அடுப்பை என்றென்றும் எரிய வைக்கின்றார்.
சாரிபாத்து நகரப் பெண் எலியாவின் இறைவனாம் யாவே கடவுளை அறிந்திருக்க வாய்ப்பில்லை. இருந்தாலும், ‘வாழும் உம் கடவுளாகிய ஆண்டவர்மேல் ஆணை!’ என எலியாவின் கடவுளை ‘வாழும் கடவுளாக’ ஏற்றுக்கொள்கிறார். இந்த நம்பிக்கைதான் அவரைச் செயலாற்ற, தன்னிடம் உள்ளதை இழக்கத் துணிவைத் தருகிறது. ‘வாழும் கடவுள்’ என்னை வாழ வைப்பார் என்ற நம்பிக்கை அவரிடம் முதலில் எழுந்தது. ‘பின் சாகத்தான் வேண்டும்’ என்று விரக்தியில் இருந்த பெண்ணிடம், ‘போய் நீ சொன்னபடி செய். ஆனால் அதற்கு முன் அப்பம் கொண்டு வா’ என்று சொல்வது சிறிது புன்னகையை வரச் செய்தாலும், ‘நீ சொன்னபடி நடக்காது’ என்று எலியா அவரிடம் சொல்லி அனுப்புவது போலத்தான் இருக்கிறது. தன்னிடமிருந்த கையளவு மாவையும், கலயத்தின் எண்ணெயையும் கொடுக்கத் துணிந்த கைம்பெண்ணின் பாத்திரம் நிரம்பி வழிகிறது.
இந்த அற்புதம் நிகழக் காரணங்கள் மூன்று:
அ. எலியாவின் ஆண்டவரை வாழும் கடவுளாக ஏற்றுக்கொண்டார்.
ஆ. ‘அந்த ஆண்டவர் பார்த்துக்கொள்வார்’ என்று நம்பினார்.
இ. ‘அவர் பார்த்துக்கொள்ளாவிட்டாலும் பரவாயில்லை. பசித்தவருக்கு உணவு கொடுப்பேன்’ தன்னை அடுத்தவருக்காக நொறுக்கினார்.
இன்றைய நற்செய்தி வாசகம் (காண். மாற்கு 12:38-44), ‘கைம்பெண்களைக் கொள்ளையடிப்பவர் பற்றியும்,’ ‘முழுவதையும் கொடுத்த கைம்பெண் ஒருவர் பற்றியும்’ என இரண்டு பகுதிகளாக உள்ளது.
முதல் பகுதியில், இயேசு மறைநூல் அறிஞர்களைக் குறித்து எச்சரிக்கை விடுக்கின்றார். அந்த எச்சரிக்கையின் ஒரு பகுதியாக, ‘இவர்கள் கைம்பெண்களின் வீடுகளைப் பிடுங்கிக்கொள்கிறார்கள்’ என்கிறார். இதன் பொருள் என்ன? யூத சமூகத்தில் கைம்பெண்கள் மிகவும் நொறுங்குநிலையில் இருந்தவர்கள். ஆகையால்தான் பத்திலொருபாகம் கொடுப்பதற்கான சட்டம் பற்றிய பகுதியின் இறுதியில் மோசே, ‘உன் நகரில் வாழும் அந்நியரும், அநாதைகளும், கைம்பெண்களும் உண்டு நிறைவு பெறுமாறு பத்திலொரு பாகத்தை நகரின் வாயிலருகே வை’ (இச 14:19) என்கிறார். ‘அந்நியருக்கு’ தங்க இடம் கிடையாது. அவர்களுக்கு மொழி உட்பட எல்லாம் புதிதாக இருக்கும். அநாதைகள் பெற்றோர்கள் இல்லாததால் செல்லும் இடம் அறியாதவர்கள். கைம்பெண்கள் தங்கள் வாழ்க்கைத் துணையை, வருமானத்தை இழந்தவர்கள். கையறுநிலையின் உச்சக்கட்டத்தை உணர்ந்தவர்கள் இம்மூவர். மறைநூல் அறிஞர்கள் என்ன செய்வார்கள் தெரியுமா? இம்மாதிரி கைம்பெண்ணைக் கவரும் விதமாக நீண்ட செபம் செய்வார்கள். வாழ்வில் ஏற்கனவே நொந்துபோய் இருப்பவர்கள் செபம் செய்பவர்களை எளிதாகப் பிடித்துக்கொள்வார்கள். இப்படியாக, கைம்பெண்ணின் ஆவலைக் கவர்ந்து, கொஞ்சம் கொஞ்சமாக அவர்களிடமிருந்து பணம் பெறுவார்கள். இறுதியில், உனக்காக வாதாடுகிறேன், உன் உரிமைச் சொத்தை மீட்கிறேன், உன் கணவனின் சொத்தில் உனக்கு பங்கைப் பெற்றுத் தருகிறேன் என வாதாடுவதாகச் சொல்லி அவரின் ஒட்டுமொத்த வீடு மற்றும் உடைமைகளையும் பறித்துக்கொள்வார்கள். இந்த நிலையைத்தான் சாடுகின்றார் இயேசு. ‘எரிகிற வீட்டில் பிடுங்கின மட்டும் லாபம்’ என்பதுதான் இவர்களின் லாஜிக்காக இருக்கிறது.
இரண்டாம் பகுதியில், இயேசு காணிக்கை பெட்டி முன் அமர்ந்திருக்கிறார். எருசலேம் ஆலயத்தில் நிறையக் காணிக்கைப் பெட்டிகள் உண்டு. இயேசு அமர்ந்த இடம் அவற்றில் ஏதாவது ஒன்றின் முன் இருக்கலாம். வரிசையாக வந்தவர்களில் இரண்டு வகை கொடுப்பவர்கள் இருக்கிறார்கள்: (அ) செல்வர் வகை – தங்களிடம் இருந்த மிகுதியான செல்வத்திலிருந்து போடுகின்றனர். (ஆ) கைம்பெண் வகை – தன்னிடம் உள்ளது எல்லாவற்றையும் போட்டுவிடுகின்றார்.இந்த இரண்டு வகை கொடுத்தலை ‘உள்ளதிலிருந்து கொடுப்பது’, ‘உள்ளத்திலிருந்து கொடுப்பது’ எனவும் சொல்லலாம். ஒவ்வொரு யூதரும் ஆலயத்தின் மேலாண்மைக்காகவும், பராமரிப்புக்காவும், ஆலயத்தின் குருக்களின் பராமரிப்புக்காகவும் ஆண்டுக்கு இரண்டு செக்கேல்கள் கொடுக்க வேண்டும் என்பது முறைமையாக இருந்தது. இப்பெண் போட்ட காசு – ஒரு கொதிராந்துக்கு இணையான இரண்டு காசுகள் – அதாவது, எவ்வளவு போட வேண்டுமோ அதில் 60ல் 1 பங்கு மட்டுமே. ஆனால், இவரிடம் இருந்தது இவ்வளவுதான்.
இயேசுவின் கணக்கு வித்தியாசமாக இருக்கிறது. ‘எவ்வளவு’ போட்டோம் என்று பார்ப்பதைவிட, ‘எந்த மனநிலையில்’ போட்டோம் என்று பார்க்கின்றார். அதாவது, 100 கோடி கொண்டுள்ள நான் 1 கோடியை ஆலயத்திற்கு கொடுக்கிறேன் என வைத்துக்கொள்வோம். எனக்கு அருகில் இருப்பவர் தன் ஒரு மாத சம்பளம் 5000 ரூபாயை அப்படியே கொடுத்துவிடுகின்றார். 1 கோடி என்பது 5000 ரூபாயைவிட பெரியதுதான். ஆனால், என்னிடம் இந்த மாதம் செலவுக்கு இன்னும் 99 கோடிகள் இருக்கின்றன. ஆனால் என் அருகில் இருப்பவரிடம் ஒன்றும் இல்லை கையில். எனக்கு அருகில் இருப்பவர்தான் அதிகம் போட்டார் என்கிறார் இயேசு.
Source: New feed