1644 ஆம் ஆண்டு பிரான்ஸ் நாட்டில் நிமோர்ஸ் என்றொரு நிலபிரபு இருந்தான். அவனுக்கும் இன்னொரு நிலபிரபுவுக்குமிடையே அடிக்கடி சண்டை நடந்தது. ஒருநாள் நிமோர்ஸ் எதிரியின்மீது படையெடுத்துச் சென்றான். இருவருக்குமான சண்டை நீண்டநேரம் நீடித்தது. இறுதியில் நிமோர்ஸ் தலைவெட்டப்பட்டுக் கொல்லப்பட்டான்.
இதனைக் கேள்விப்பட்ட மக்கள், நிமோர்ஸ் ஒப்புரவு அருளடையாளம் பெறாமல் இறந்ததால் அவன் கட்டாயம் நரகத்திற்குத்தான் போவான் என்று பேசிக்கொண்டார்கள்.
அந்நேரத்தில் இறை ஏவுதலால் அங்கு வந்த மேரி மார்டிக்னேட் என்ற அருள்சகோதரி, “இறப்பதற்கு முன்பாக நிமோர்ஸ் தன்னுடைய தவற்றை உணர்ந்து மன்னிப்புக் கேட்டதாலும், மக்கள் அவனுக்காக இறைவனிடம் வேண்டியதாலும் அவன் நரகம் செல்வதிலிருந்து காப்பாற்றப்பட்டான்” என்றார். தொடர்ந்து அந்த அருள்சகோதரி அவர்களிடம், “உங்கள் ஒவ்வொருவரின் இறைவேண்டலால்தான் நிமோர்ஸ் நரகத் தண்டனையிலிருந்து மீட்கப்பட்டு, உத்தரிக்கிற தலத்தில் ஆன்மத் தூய்மைக்காக வைக்கப்பட்டிருக்கிறான்” என்றார்.
இதைக்கேட்ட மக்கள் அனைவரும் மிகவும் மகிழ்ச்சியடைந்து, இறைவனைப் போற்றிப் புகழ்ந்தனர்.
இறந்த ஒருவருக்காக நாம் இறைவனிடம் வேண்டுகின்றபோது அவருடைய பாவங்கள் மன்னிக்கப்பட்டு, அவர் இறைவனின் பேரின்ப வீட்டிற்குள் ஏற்றுக்கொள்ளப்படுவார் என்பதை இந்த நிகழ்வானது நமக்கு எடுத்துக்கூறுகின்றது.
இறந்த நம்பிக்கையாளர் நினைவு நாள்:
இன்று திருஅவையானது இறந்த நம்பிக்கையாளர் அனைவர் நினைவுநாளைக் கொண்டாடுகின்றது. இந்த நல்ல நாளில் நம்முடைய குடும்பங்களில், சமுதாயத்தில் வாழ்ந்து இறந்த நம்பிக்கையாளர் அனைவருக்கும், அதிலும் சிறப்பாக உத்தரிக்கிற தலத்தில் இருக்கக்கூடிய ஆன்மாக்களுக்காக இறைவனிடம் வேண்ட அழைக்கப்படுகின்றோம்.
மூன்றுவித திருஅவை:
நமது கத்தோலிக்கத் திருஅவை மூன்றுவிதமான திருச்சபை இருப்பதாக சொல்கிறது. முதலாவது திருஅவை, வெற்றிபெற்ற திருஅவை (Triumphant Church), இரண்டாவது திருஅவை, பயணமாகும் திருஅவை (Pilgrim Church), மூன்றாவது திருஅவை, போராடும் திருஅவை ( Suffering Church). வெற்றிபெற்ற திருஅவை என்பது விண்ணகத்தையும், பயணமாகும் திருஅவை என்பது மண்ணகத்தையும், துன்புறும் திருஅவை என்பது உத்தரிக்கும் தலத்தில் இருக்கும் ஆன்மாக்களையும குறிக்கின்றன. இதில் பயணமாகும் திருஅவையில் இருக்கும் நாம், துன்புறும் திருஅவையில் இருக்கும் உத்தரிக்கும் ஆன்மாக்களுக்காக இறைவனிடம் வேண்ட அழைக்கப்படுகின்றோம். ஏனெனில் அவர்கள் நம்முடைய இறைவேண்டலை நாடி நிற்கின்றார்கள். நாம் அவர்களுக்காக இறைவனிடம் வேண்டுகிறபோது இறைவன் அவர்களது குற்றங்களை மன்னித்து, அவர்களை விண்ணகத்தில் ஏற்றுக்கொள்வார்.
வரலாற்றுப் பின்னணி:
இன்று நாம் கொண்டாடும் இறந்த நம்பிக்கையாளர் அனைவர் நினைவு நாளானது கி.பி. 962 ஆம் குளூனி என்ற இடத்தில் வாழ்ந்த ஒடில்லோ என்ற துறவியால், நவம்பர் திங்கள் இரண்டாம் நாளானது நினைவுகூர்ந்து கொண்டாடப்பட்டு, பின்னர் அது எல்லாத் துறவற சபைகளுக்கும் பரவியது. பதினான்காம் நூற்றாண்டிலிருந்துதான் இவ்விழா உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகின்றது; ஆனால் திருவிவிலியத்தில் மக்கபேயர் காலத்திலிருந்தே இறந்தவர்களுக்காகப் பாவப்பரிகாரப் பலிகள் ஒப்புக்கொடுக்கும் வழக்கம் இருந்து வந்ததைக் குறித்து வாசிக்கின்றோம் (2 மக் 12:42-46).
இவ்விழா நாளில் இன்று நாம் படிக்கக்கேட்ட வாசகங்கள் நமக்கு என்ன செய்தியைத் தருகின்றன என்று சிந்தித்துப் பார்ப்போம்.
1. சாவின்மீது வெற்றிகொண்ட இயேசு:
இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகத்தில், கடவுள் இஸ்ரயேல் மக்கள்மீது கிடந்த துயரத்தின் முக்காட்டை, துன்பத்தை, சாவை, கண்ணீரை, நிந்தனையைத் துடைத்துவிட்டு, புதுவாழ்வு தருவதாக வாக்களிக்கின்றார். இதனை இயேசு நற்செய்தி வாசகத்தில் நயின் நகர்க் கைம்பெண்ணின் இறந்த மகனை உயிர் பெற்றெழச் செய்வதன் வழியாக நிரூபித்துக் காட்டுகின்றார். ஆம், ஆண்டவராகிய இயேசு தன்னுடைய பாடுகள், சிலுவைச்சாவின் வழியாகச் சாவை வென்று நமக்குப் புதுவாழ்வு தருகின்றார். அதனால்தான் புனித பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகம் 15:55 ல் இவ்வாறு கூறுகின்றார்: “சாவே உன் வெற்றி எங்கே? சாவே உன் கொடுக்கு எங்கே?”
ஆதலால் இயேசு தன்னுடைய பாடுகளின் வழியாக இறப்பை வென்றதால் நாம் இறப்பைக் குறித்து கவலைப்படத் தேவையில்லை. இதுவே இறைவார்த்தை நமக்குத் தரும் முதன்மையான செய்தி.
2. ஒருவர் மற்றவருக்காக வாழ வேண்டும்:
இயேசு கிறிஸ்து நாம் பாவிகளாக இருந்தபோதும் நம்மீதுகொண்ட அன்பினால் நமக்காகத் தன்னுயிரைத் தந்தார். எனவே நாமும் அன்பினால் உந்தப்பட்டு, ஒருவர் மற்றவருக்காக வாழவேண்டும்; அவர்களுக்காக உயிரையும் தர வேண்டும். இது இன்றைய விழா நமக்குச் சொல்லும் இரண்டாவது செய்தி.
இப்படி நாம் ஒருவர் மற்றவருக்காக வாழும்போது இறைவன் தரும் விண்ணரசைப் பெறமுடியும் என்பது உறுதி.
கவிஞர் சிற்பி பாலசுப்ரமணியம் ஒருமுறை இவ்வாறு கூறினார்: “விண்ணகமும் நரகமும் நம் வாழ்க்கையில் தான் இருக்கின்றன. எப்போது நம் மனம் நிறைவு அடைகின்றதோ அப்போது நாம் முக்தியை அடைந்துவிட்டோம் என்று பொருள். இந்த முக்தியை, மனநிறைவை மக்களுக்குச் சேவை செய்வதில்தான் காணமுடியும்.”
ஆம், நாம் பிறருக்குச் சேவை செய்கிறபோதுதான் விண்ணகத்தை அடையமுடியும். இதில் எந்தவொரு மாற்றுக் கருத்தும் கிடையாது.
ஒரு கிராமத்தில் தச்சர் ஒருவர் வாழ்ந்து வந்தார். ஒருநாள் அவரிடம் வந்த வானதூதர், “உன் வாழ்நாள்கள் முடிந்துவிட்டன. விண்ணகம் செல்வதற்கு நேரம் வந்துவிட்டது” என்றார். அதற்கு அந்தத் தச்சர், “ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு இப்போதுதான் ஊரில் மழை பெய்திருக்கிறது. அதனால் நான் நிலத்தை உழத் தொடங்கியிருக்கும் விவசாயிகளுக்குக் கலப்பை செய்து தந்துவிட்டு, பின்னர் வருகிறேன்” என்றார். உடனே வானதூதர் அவ்விடத்திலிருந்து அகன்றார்.
மூன்று மாதங்களுக்குப் பிறகு மீண்டுமாக அந்த வானதூதர் அவரிடம் வந்து, அவரை விண்ணகத்திற்கு அழைத்தார்; ஆனால் அவர், “இப்போதுதான் உழவர்கள் வயலில் உழத் தொடங்கி இருக்கிறார்கள். அதலால் நான் அவர்களுக்கு மாட்டுவண்டி செய்து தந்துவிட்டு வருகிறேன்” என்றார். இதைக்கேட்டதும் வானதூதர் அங்கிருந்து அகன்றார். மீண்டுமாக மூன்றுமாதம் கழித்து வானதூதர் அவரை விண்ணகத்திற்கு அழைத்துப் போக வந்தார். அதற்கு அந்தத் தச்சர், “இன்னும் மண்வெட்டி மட்டும் செய்துகொடுத்துவிட்டால் என்னுடைய வேலை முடிந்துவிடும். அப்புறம் நானே வந்துவிடுகிறேன்” என்று கெஞ்சிக்கொண்டார். அவரது வேண்டுதலைக் கேட்டு வானதூதர் அங்கே இருந்து அகன்றார்.
அடுத்த மூன்று மாதம் கழித்து மீண்டுமாக வானதூதர் அவரிடம் வந்தார். அப்போது தச்சர், “நான் விவசாயிகளுக்குத் தேவையான கலப்பை, மாட்டுவண்டி, மண்வெட்டி எல்லாவற்றையும் செய்து தந்துவிட்டேன். இப்போது என்னை நீங்கள் விண்ணகத்திற்கு அழைத்துக்கொண்டு போகலாம்” என்றார். அப்பொழுது வானதூதர் அவரிடம், “வேண்டாம்” என்றார். “ஏன்?” என்று தச்சர் வானதூதரிடம் கேட்டதற்கு, “நீ எல்லாருக்கும் உதவிசெய்து வாழ்வதால் இந்த மண்ணுலகமே உனக்கு விண்ணகம், அதனால் எதற்கு உனக்கு இன்னொரு விண்ணகம்” என்று சொல்லிவிட்டு, அவ்விடத்திலிருந்து அகன்றார்.
ஆம். உண்மையான அன்போடு எல்லாருக்கும் உதவிசெய்து வாழ்ந்தால் நாம் வாழும் இடமே விண்ணகம்தான்.
ஆகவே இறந்த நம்பிக்கையாளர் அனைவர் நினைவுநாளைக் கொண்டாடும் இவ்வேளையில், நாம் இறந்த நம்பிக்கையாளர்களுக்காக இறைவனிடம் வேண்டுவோம். அத்தோடு நாம் வாழும் இந்த மண்ணுலக வாழ்வை அர்த்தமுள்ளதாக்குவோம். அதன் வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
Source: New feed