
தவக்காலம் முதல் வாரம்
திங்கட்கிழமை
மத்தேயு 25: 31-46
என் தந்தையிடமிருந்து ஆசி பெற்றவர்களே, வாருங்கள்…
நிகழ்வு
“நீங்கள் நல்ல மனிதராக இருக்கும்போது இறைவனே இறங்கிவந்து, உங்களுக்கு என்ன வேண்டும் என்று கேட்பார்” என்ற பிரபல வரிகளை அடிக்கடி நினைத்துக்கொண்டு செயல்படுபவர், முன்னாள் நீலகிரி மாவட்டத்தின் ஆட்சியர் சுக்ரியா சாகு.
இவர் நீலகிரி மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியராக இருந்தபோது, அங்கிருந்த ஊனமுற்றவர்களைக் கணக்கெடுத்து, பொருளாதார ரீதியில் பின்தங்கியுள்ளவர்களை உயர்த்தினார்; மனித நேயத்துடனும் சுற்றுச்சூழல் அக்கறையோடும் செயல்பட்டு ஊட்டி ஏரியைத் தூர்வாரி அதிகமான மரக்கன்றுகளை நட்டார். இதனால் இவர் கின்னஸ் புத்தகத்தில் சாதனைப் பெண்மணியாக இடம்பெற்றார். .
‘மிகச் சிறியோராகிய என் சகோதர சகோதரிகளுள் ஒருவருக்கு நீங்கள் செய்ததையெல்லாம் எனக்கே செய்தீர்கள்’ என்ற இயேசுவின் வார்த்தைகளுக்கு அர்த்தம் கொடுக்கும் வகையில் வாழ்ந்து வரும் சுக்ரியா சாகு கின்னஸ் புத்தகத்தில் இடம் புத்தகத்தில் இடம்பிடித்தது ஆச்சரியம் ஒன்றும் இல்லை. இப்படிப்பட்டவர் ஒருநாள் விண்ணகத்தில் இடம்பிடிப்பார் என்பதில் எந்தவொரு மாற்றுக் கருத்தும் கிடையாது.
இறுதித் தீர்ப்பு பற்றிய இயேசவின் உவமை
நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு, இறுதித் தீர்ப்பு பற்றிய உவமையை எடுத்துக்கூறுகின்றார். இவ்வுவமை உலக முடிவின்போது, உலகில் உள்ள எல்லா மக்களுக்கும் அவர்களுடைய செயல்களுக்கு ஏற்றார்போல் தீர்ப்பு வழங்கப்படும் என்ற செய்தியை எடுத்துச் சொல்கின்றது. நாம் அதைக் குறித்து இப்போது சிந்தித்துப் பார்ப்போம்.
கருமமே கட்டளைக் கல்
‘பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம் கருமமே கட்டளைக் கல்’ என்பார் ஐய்யன் திருவள்ளுவர். இதனுடைய அர்த்தம்: ஒருவனுடைய பெருமைக்கும் அதாவது, உயர்வுக்கும் அவனுடைய சிறுமைக்கும் அதாவது, தாழ்வுக்கும் அவனுடைய செயல்களே உரைகல்லாக இருக்கின்றது.
நற்செய்தி வாசகத்தில் இயேசு கூறும் உவமையில் வரும், ஆயர் ஒருவர் செம்மறியாடுகளை வலப்பக்கத்திலும் வெள்ளாடுகளை இடப்பக்கத்திலும் பிரிக்கின்றார். அவ்வாறு அவர் பிரிப்பதற்கு அடிப்படைக் காரணமாக இருப்பது, அவர்களுடைய செயல்கள்தான். வலப்பக்கத்தில் இருந்தவர்கள் பசித்தோருக்கு உணவும் தங்க இடமில்லாதவருக்கு இடமும் ஆடையில்லாதவருக்கு ஆடையும் கொடுத்து, நோயுற்றவர்களைக் கவனித்தும் சிறையிலிருந்தவர்களைப் பார்த்தும் அன்னியர்களை வீடுகளில் ஏற்றுக்கொண்டும் வந்தார்கள். அதனால் அவர்கள் ஆட்சியை – விண்ணகத்தை – உரிமைப் பேறாகப் பெற்றுக்கொண்டார்கள். இடப்பக்கத்தில் இருந்தவர்களோ மேலே சொல்லப்பட்ட நற்செயல்களை செய்யாமல் போனதால், அலகைக்கும் அதன் தூதருக்கும் ஏற்பாடு செய்யப்பட்ட அணையா நெருப்புக்கள் தள்ளப்பட்டார்கள். இதன்மூலம் ஒருவருடைய செயலும் அவர் வாழ்ந்த வாழ்வும்தான் அவர் இறைவனின் ஆட்சியை உரித்தாக்கிக் கொள்வதற்கும் அல்லது அணையா நெருப்புக்குள் தள்ளப்படுவதற்கும் அடிப்படைக் காரணமாக இருக்கின்றது என்று சொன்னால் அது மிகையாகாது.
மிகச் சிறியோரில் இயேசு
நற்செய்தியில் வரும் அரசர்/இயேசு சொல்லக்கூடிய வார்த்தைகள், “மிகச் சிறியோராகிய என் சகோதரர் சகோதரிகளுள் ஒருவருக்கு நீங்கள் செய்வதையெல்லாம் எனக்கே செய்தீர்கள்” என்பதாகும். இயேசுவின் இவ்வார்த்தைகள் அவர் எல்லாரிலும் இருந்தாலும் எளியவர், சிறியோரில் இருக்கின்றார் என்ற உண்மையை மிகத் தெளிவாக எடுத்துச் சொல்கின்றது. அப்படியானால், சமுதாயத்தில் இருக்கக்கூடிய எளியோரையும் வறியோரையும் அன்பு செய்யாமல், அதன் வெளிப்பாடாக அவர்களுக்கு நல்லது செய்யாமல் ஒருவர் இறைவனின் ஆட்சியை உரித்தாக்கிக் கொள்ள முடியாது என்பது உண்மை. இங்கு தூய யோவான் தன்னுடைய முதல் திருமுகத்தில் கூறுகின்ற, “தன் கண்முன்னே உள்ள சகோதரர் சகோதரிகளிடம் அன்பு செலுத்தாதோர், கண்ணுக்குப் புலப்படாத கடவுளிடம் அன்பு செலுத்த முடியாது’ (1 யோவா 4:20) என்ற வார்த்தைகளை இணைத்துச் சிந்தித்துப் பார்த்தால், இயேசுவின் வார்த்தைகள் இன்னும் தெளிவாக விளங்கும்.
இறையாட்சியை உரிமைப்பேறாகப் பெற தந்தையின் ஆசி கட்டாயம்
உவமையில் வரும் அரசர், தன் வலப்பக்கத்தில் உள்ளோர்களைப் பார்த்து, “என் தந்தையின் ஆசி பெற்றவர்களே, வாருங்கள்” என்கின்றார். தந்தையின் ஆசி பெற்றவர்கள் யார் என்றால், அவர்மீது நம்பிக்கை வைத்தவர்கள்; அந்த நம்பிக்கையின் வெளிப்பாடாக நற்செயல்கள் புரிந்து கடவுளுக்கு ஏற்புடையவர்கள் ஆனவர்கள் (எபி 11:6). ஆகையால், கடவுளின் ஆசி பெற்றவர்களாக நாம் மாறவேண்டும் என்றால், அவர்மீது நம்பிக்கை கொள்ளவேண்டும், அந்த நம்பிக்கையின் வெளிப்பாடாக நற்செயல்கள் செய்யவேண்டும். இதைச் செய்யாமல் போனதால்தான் இடப்பக்கத்தில் இருந்தவர்கள் அணையா நெருப்புக்குள் தள்ளப்பட்டார்கள். எனவே, நமது வாழ்வில் நம்பிக்கையும் நற்செயல்களும் எவ்வளவு முக்கியம் என்பதைப் புரிந்துகொண்டு வாழவேண்டும்.
சிந்தனை
நம் விண்ணகத் தந்தையாம் இறைவன், விண்ணகத்தை உரிமைப் பேறாகத் தர இருக்கின்றார்கள். அதற்கு நாம் அவரிடம் நம்பிக்கையும் அந்த நம்பிக்கையின் வெளிப்பாடாக நற்செயல்களையும் செய்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய்ப் பெறுவோம்.
Source: New feed