திருநீற்றுப் புதனுக்குப் பின்வரும்
வெள்ளிக்கிழமை
மத்தேயு 9: 14-15
நோன்பெனப்படுவது யாதெனில்…
நிகழ்வு
சுவாமி விவேகானந்தர் இளைஞராக இருந்தபோது, அவரது வீட்டு வாசலில் ஒரு துறவி வந்து யாசகம் கேட்டார். அவரை விவேகானந்தர் கூர்ந்து நோக்கியபோது, அவரது உடலில் கிழிந்து உடைகள் தொங்கிக்கொண்டிருந்தன. விவேகானந்தர் அப்போதுதான் ஒரு புதிய துணியை அணிந்திருந்தார். இதற்கிடையில் விவேகானந்தர் தன் ஆடையைக் கருணையோடு பார்ப்பதைக் கண்ட துறவி, “தம்பி உன் ஆடையை எனக்குத் தருவாயா?” என்று கேட்க, மறுகணமே அவர் தன் ஆடைகளை அந்தத் துறவிக்குக் கழற்றிக் கொடுத்தார்.
பசித்திருப்பவருக்கு உண்ணக் கொடுப்பதும் தங்க இடமில்லாதவருக்கு இடமளிப்பதும் அடையில்லாதவருக்கு ஆடை கொடுப்பதுதான் உண்மையான நோன்பு (எசா 58:7) என்கின்றது விவிலியம். அந்த வகையில் பார்க்கின்றபோது, சுவாமி விவேகானந்தரின் இச்செயல் உண்மையான நோன்பிற்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டாக இருக்கின்றது.
நோன்பு குறித்த கேள்வி
நற்செய்தி வாசகத்தில், யோவானின் சீடர் இயேசுவிடம் வந்து, “நாங்களும் பரிசேயர்களும் அதிகமாக நோன்பு இருக்க, உம்முடைய சீடர்கள் ஏன் இருப்பதில்லை?” என்றொரு கேள்வியைக் கேட்கின்றார்கள். இயேசு அவர்களுக்கு என்ன பதிலளித்தார் என்று சிந்தித்துப் பார்ப்பது முன்பாக, யோவானின் சீடர் நோன்பு என்று எதைக் குறிப்பிடுகின்றனர்?, அவர்கள் நோன்பிருந்த விதம் எப்படி இருந்தது? அவர்கள் ஏன் இயேசுவிடம் இப்படியொரு கேள்வியைக் கேட்கிறார்கள் என்று சிந்தித்துப் பார்ப்பது நல்லது.
வெளிவேடத்திற்காக நோன்பிருந்தவர்கள்
ஆண்டுக்கொரு முறை பாவப் பரிகார நாளில் நோன்பிருப்பது யூதர்களின் வழக்கம். அதை ஒவ்வொரு யூதரும் தவறாமல் கடைப்பிடித்து வந்தனர். ஆனால், நாட்கள் ஆக ஆக ‘சமயக் காவலர்கள்’ என்று தங்களைப் பிரகடனப்படுத்திக் கொண்ட பரிசேயர்கள், மற்றவர்களை விடத் தங்களை உயர்ந்தவர்கள் என்று காட்டிக்கொள்ள விரும்பி, வாரம் இருமுறை நோன்பிருக்கத் தொடங்கினார்கள் (லூக் 18:12). இந்த இரண்டு நாட்களுமே சந்தை கூடும் நாட்கள் என்பது இன்னொரு தகவல். மக்கள் அதிகமாகக் கூடிவரும் சந்தை நாட்களில் தாங்கள் நோன்பிருப்பது போன்று (மத் 6:16) மக்களிடம் காட்டிக்கொண்டால், மக்கள் தங்களைப் புகழ்வார்கள் என்பதற்காக நோன்பிருந்தார்கள். பரிசேயர்கள் பின்பற்றி வந்த இந்த வழக்கத்தை யோவானின் சீடர்களும் கடைபிடித்தார்கள் என்பதுதான் இதிலுள்ள வேடிக்கை.
இப்படிப்பட்டவர்கள் தாங்கள் நோன்பிருந்ததோடு மட்டுமல்லாமல், இயேசுவிடம் வந்து, “உம்முடைய சீடர்கள் ஏன் நோன்பிருப்பதில்லை?” என்று கேட்பதுதான் மிகவும் அபத்தமாக இருக்கின்றது. அப்பொழுதுதான் இயேசு அவர்களிடம், தன்னுடைய சீடர்கள் ஏன் நோன்பிருக்கவில்லை என்ற காரணத்தை விளக்குகின்றார்.
இவ்வுலகிற்குத் துக்கத்தை அல்ல, மகிழ்ச்சியைக் கொண்டுவந்த இயேசு
‘மணமகன் தங்களோடு இருக்கும்வரை மணவிருந்தினர்கள் துக்கம் கொண்டாட முடியுமா? மணமகன் அவர்களை விட்டுப் பிரியவேண்டிய காலம் வரும். அப்பொழுது அவர்களும் நோன்பு இருப்பார்கள்” இதுதான் இயேசு யோவானின் சீடர்களுக்குச் சொல்கின்ற பதிலாக இருக்கின்றது.
யூதர்களின் திருமண விழா ஒருவாரத்திற்கு மேல் நடைபெறும். அந்த ஒருவாரம் முழுவதும் மணமக்களை வாழ்த்துவதற்காகவும் அவர்கள் அளிக்கின்ற விருந்தில் கலந்துகொள்வதற்காகவும் அவர்களுடைய உறவினர்கள், நண்பர்கள், தெரிந்தவர்கள் வருவதும் போவதுமாக இருப்பார்கள். இதனால் மணவீடே மிகவும் கலகலப்பாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கும். இங்கு தன்னை மணமகனாகச் சுட்டிக்காட்டும் இயேசு, தான் தன்னுடைய சீடர்களோடு/ பிரியமானவர்களோடு இருக்கும்போது அவர்கள் எப்படி துக்கம் கொண்டாட முடியும்?. தான் அவர்களை விட்டுப் பிரியவேண்டிய நாள்வரும். அப்பொழுது அவர்கள் நோன்பிருப்பார்கள் என்று இயேசு மிகத் தெளிவாக எடுத்துரைக்கின்றார்.
இயேசு யோவானின் சீடர்களுக்கு கூறுகின்ற பதிலிலிருந்து ஒன்றைப் புரிந்துகொள்ளவேண்டும். இயேசு இந்த உலகத்திற்கு மகிழ்ச்சியைக் கொண்டுவந்தாரே ஒழிய, துக்கத்தை அல்ல (யோவா 15:11). ஆகையால், இயேசுவின் வழியில் நடக்கின்ற ஒவ்வொருவரும் அவரோடு இணைந்து மகிழ்ந்திருப்பது நல்லது. அதைவிடுத்து ‘நான் நோன்பிருக்கிறேன், நீ ஏன் நோன்பிருக்கவில்லை’ என்று அடுத்தவரிடம் குற்றம் காண்பது எந்தவிதத்திலும் சரியானதாக இருக்காது.
சிந்தனை
இறைவனை வழிபடுவதும் வழிபடாததும் அவரவருடைய தனிப்பட்ட விருப்பம். அதைவிடுத்து, ஒருவர் வழிபடவில்லை என்பதற்காக அவரிடம் நாம் குற்றம் காண்பது எந்தவிதத்திலும் ஏற்றுக்கொள்ளத் தக்கது இல்லை. மேலும், நாம் இருக்கும் நோன்பு வெறும் சடங்காக மட்டும் இருந்துவிடாமல், அது செயல்வடிவம் பெற்று, எளியவரின் தேவையைப் பூர்த்தி செய்வதாக இருக்கவேண்டும். அப்படிப்பட்ட நோன்பே உண்மையான நோன்பு.
ஆகவே, நோன்பின் அர்த்தத்தை உணர்ந்து நோன்பிருப்போம். அதன்வழியாக இறையருள் நிறைவாய்ப் பெறுவோம்
Source: New feed