பாஸ்கா காலம் மூன்றாம் வாரம்
சனிக்கிழமை
யோவான் 6: 60-69
இயேசுவின் வார்த்தைகள் நிலைவாழ்வை அளிக்கக்கூடியவை!
நிகழ்வு
ஜிம்பாப்வேவில் உள்ள திருவிவிலியப் பொதுச்சங்கத்தின் தலைவராக இருந்தவர் கய்லார்ட் கம்பராமி (Gaylord Kambarami). ஒருமுறை அவர் கடவுள்மீது நம்பிக்கை இல்லாத ஒருவரைச் சந்தித்தார். அவர் அந்த மனிதரிடம் புதிய ஏற்பாட்டைக் கொடுத்து, “இதை உனக்குக் நேரம் கிடைக்கின்றபோது வாசி” என்றார். அதற்கு அந்த மனிதர், “நான் இதிலுள்ள பக்கங்களை ஒரு சிகரெட்டைப் போன்று சுருட்டிப் புகைப்பேனே ஒழிய, இதை வாசிக்கவே மாட்டேன்” என்றார். “பரவாயில்லை. இதிலுள்ள பக்கங்களை சிகரெட்டைப் போன்று சுருட்டிப் புகைத்துக்கொள். ஆனால், அதற்கு முன்பாக ஒருமுறையேனும் இதை வாசி” என்றார். அவரும் அதற்குச் சரியென்று சொல்லிவிட்டு, அவரிடமிருந்து விடைபெற்றுச் சென்றார்.
நாட்கள் நகர்ந்தன. ஏறக்குறைய பதினைந்து ஆண்டுகள் கழித்து, ஜிம்பாப்வேயில் நடந்த ஒரு நற்செய்திக் கூட்டத்தில் இரண்டு முக்கியமான மறைபோதகர்கள் கலந்துகொண்டார்கள். ஒருவர் கய்லார்ட் கம்பராமி. இன்னொருவர் ஒருகாலத்தில் கடவுள்மீது நம்பிக்கை இல்லாமலும் திருவிவிலியத்தின் பக்கங்களை சிகரெட்டைப் போன்று சுருட்டிப் புகைப்பேன் என்று சொன்னவரும் ஆவார்.
அவர் தனக்கு முன்பாகத் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான மக்களைப் பார்த்து இவ்வாறு பேசத் தொடங்கினார்: “ஒரு காலத்தில் நான் கடவுள்மீது நம்பிக்கை இல்லாமல் வாழ்ந்து வந்தேன். அப்படிப்பட்ட சமயத்தில்தான் இங்கே வீற்றிருக்கின்ற கய்லார்ட் கம்பராமி என்னிடம் புதிய ஏற்பாட்டைக் கொடுத்து வாசிக்கச் சொன்னார். நானோ மத்தேயு, மாற்கு, லூக்கா நற்செய்தியின் பக்கங்களை சிகரெட்டைப் போன்று சுருட்டிப் புகைக்கத் தொடங்கினேன். எப்போது நான் யோவான் நற்செய்தி 3:16 ஐ தற்செயலாக வாசிக்கத் தொடங்கினேனோ, அப்போதே அதில் இடம்பெற்ற வார்த்தைகளால் ஆட்கொள்ளப்பட்டு, என் வாழ்வில் பெரிய மாற்றத்தைக் கண்டுகொண்டேன். அன்றைக்கு விவிலியத்தைக் கையிலெடுத்தவன்தான் இன்று வரை அதைப் பற்றி எல்லா மக்களுக்கும் எடுத்துரைத்துக்கொண்டிருக்கிறேன்.”
இறைவனின் வார்த்தைகள் அடங்கிய பெட்டகமான திருவிவிலியம் சாதாரண புத்தகம் கிடையாது. அது வாழ்வளிக்கும் வார்த்தைகளைக் கொண்டது என்பதை இந்நிகழ்வானது நமக்கு மிக அருமையாக எடுத்துக்கூறுகின்றது. இன்றைய நற்செய்தி வாசகமும் இறைவார்த்தைக்குரிய முக்கியத்துவத்தைக் குறித்துப் பேசுகின்றது. நாம் அதைக் குறித்து இப்பொழுது சிந்தித்துப் பார்த்து நிறைவுசெய்வோம்.
இயேசுவின் வார்த்தைகளை ஏற்றுக்கொள்ள மறுத்த இயேசுவின் சீடர்கள்
இயேசு, “விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த உணவு நானே” என்று சொன்னதையும் “மானிட மகனுடைய உடலை உண்டு, இரத்தத்தைக் குடித்தாலொழிய வாழ்வு அடையமாட்டீர்கள்” என்று சொன்னதையும் கேட்டு இயேசுவின் சீடர்களில் ஒருசிலர், “இதை ஏற்றுக்கொள்வது மிகக் கடினம்” என்று சொல்லி முணுமுணுக்கத் தொடங்குகிறார்கள், இறுதியில் அவர்கள் அவரைவிட்டு பிரிந்தும் போகிறார்கள். இயேசுவின் வார்த்தைகள் புரிந்துகொள்வதற்குக் கடினமானவையோ அல்லது ஏற்றுக்கொள்வதற்குக் கடினமானவையோ அல்ல. அப்படியிருந்தும் இயேசுவின் சீடர்களில் இருந்த ஒருசிலரால் அவற்றைப் புரிந்துகொள்ளவும் முடியவில்லை. ஏற்றுக்கொள்ளவும் முடியவில்லை.
இங்கு ஓர் உண்மையைப் புரிந்துகொள்ளவேண்டும். அது என்னவெனில். யோவான் நற்செய்தி 5: 24 ல் இயேசு கூறுவதுபோல, ஒருவர் நிலைவாழ்வைப் பெறவேண்டும் என்றால், அவர் இயேசுவின் வார்த்தைகளைக் கேட்டு, இறைவன்மீது நம்பிக்கை வைக்கவேண்டும். நற்செய்தியிலோ, இயேசுவின் சீடர்களில் இருந்த ஒருசிலர் இயேசுவின் வார்த்தைகளை கேட்டு, அவர்மீதும் இறைவன்மீதும் நம்பிக்கை கொள்ளவில்லை. அதனால் இறைவன் தரும் நிலைவாழ்வைப் பெறாமலே போனார்கள். அப்படியானால் ஒருவர் நிலைவாழ்வு பெறுவது என்பது அவர் இயேசுவின் வார்த்தைகள்மீது நம்பிக்கை கொள்வதைப் பொறுத்து அடங்கி இருக்கின்றது என்று உறுதியாகச் சொல்லலாம்.
நிலைவாழ்வு அளிக்கும் இயேசுவின் வார்த்தைகள்
தன்னுடைய வார்த்தைகளின் மீது நம்பிக்கை கொள்ளாமல், சீடர்களில் ஒருசிலர் தன்னைவிட்டுப் பிரிந்துபோனதைத் தொடர்ந்து, இயேசு மற்ற சீடர்களிடம், “நீங்களும் போய்விட நினைக்கிறீர்களா? என்று கேட்கும்போதுதான் பேதுரு மறுமொழியாக, “ஆண்டவரே நாங்கள் யாரிடம் போவோம்? நிலைவாழ்வு அளிக்கும் வார்த்தைகள் உம்மிடம் தானே உள்ளன” என்கின்றார்.
பேதுரு கூறுகின்ற இவ்வார்த்தைகள் அவர் இயேசுவின் மீதும் அவருடைய வார்த்தைகளின்மீதும் நம்பிக்கை கொண்டிருப்பதையும் இயேசுவின் வார்த்தைகளுக்கு இருக்கின்ற வல்லமையையும் நமக்கு எடுத்துரைக்கின்றன. பேதுருவுக்கு ஏற்பட்ட இந்த நம்பிக்கை நமக்கு ஏற்பட்டிருக்கின்றதா? என்று சிந்தித்துப் பார்த்து, இயேசுவின் வார்த்தைகளின்மீது நம்பிக்கை வைத்து, இறைவன் தருகின்ற நிலைவாழ்வைப் பெறுவது தேவையான ஒன்றாக இருக்கின்றது.
சிந்தனை
‘கடவுளின் ஒவ்வொரு வாக்கும் பரிசோதிக்கப்பட்டு நம்பத் தக்கதாய் விளங்குகின்றது’ (நீமொ 30: 5) என்கின்றது நீதிமொழிகள் நூல். ஆகவே, நம்பத்தக்கதாய், நிலைவாழ்வு அளிப்பதாய் இருக்கின்ற இயேசுவின் வார்த்தைகளின்மீது நம்பிக்கைகொண்டு, அவற்றை வாழ்வாக்க முற்படுவோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய்ப் பெறுவோம்.
Source: New feed