தவக்காலம் மூன்றாம் வாரம்
செவ்வாய்க்கிழமை
மத்தேயு 18: 21-35
நிபந்தனையின்றி மன்னிப்போம்
நிகழ்வு
நகரில் பெரிய நிறுவனம் ஒன்று இருந்தது. அந்நிறுவனத்தின் தலைவர் தனக்கெதிராகப் பெரும் துரோகம் செய்து, பிறகு மனம் வருந்திய அலுவலர் ஒருவரை, யாரும் எதிர்பாராத விதமாக மன்னித்தார். ஒருசிலர் அவரிடம், “அது தனிப்பட்ட துரோகமே தவிர நிறுவனம் சார்ந்த துரோகமல்ல என்பதால்தான் மன்னித்தீர்களா?” என்று கேட்டபோது, அவர் சொன்னார், “நான் ஆயிரம் தவறுகள் செய்த பிறகும் என்னை நான் மன்னித்து அன்பு செய்கிறேன். ஒரு தவறுக்காக ஒருவரைத் தண்டிப்பது என்ன நியாயம்?”.
எவ்வளவு அர்த்தம் நிறைய வார்த்தைகள் இவை. உண்மையில் நாம் நம்முடைய குற்றங்களை மன்னிக்கின்றபோது, தந்தைக் கடவுள் நம்முடைய குற்றங்களை மன்னிக்கின்றபோது, பிறர் செய்த குற்றங்களை மட்டும் மன்னியாது இருப்போமெனில், அது அவ்வளவு உவப்புடைய செயலல்ல.
எத்தனைமுறை மன்னிப்பது?
நற்செய்தி வாசகத்தில், பேதுரு, “என் சகோதரர் சகோதரிகளுள் ஒருவர் எனக்கெதிராகப் பாவம்செய்துவந்தால் நான் எத்தனை முறை அவரை மன்னிக்க வேண்டும்?” என்றொரு கேள்வியோடு இயேசுவிடம் வருகின்றார்.
பேதுரு, இயேசுவிடம் கேட்ட கேள்வியைக் கொண்டு இரண்டு விடயங்களைப் புரிந்துகொள்ளலாம். ஒன்று, அவர் தன்னை நேர்மையாளர் போன்று காட்டிக்கொள்ள விழைகின்றார் என்பதாகும். ஏனெனில், தன் சகோதரர் சகோதரிகள் தனக்கெதிராகப் பாவம் செய்துவந்தால்… என்று சொல்லும் அவர், நான் என் சகோதரர் சகோதரிகளுக்கு எதிராகப் பாவம் செய்துவந்தால்… என்பதைச் சொல்ல மறுக்கின்றார். இதனால்மூலம் அவர் தன்னை நேர்மையாளர் போன்று நிரூபிக்க முயல்வது அப்பட்டமாகத் தெரிகின்றது. இன்னொன்று, ‘இத்தனை முறை மன்னிக்கலாமா?’ என்று பேதுரு கணக்குப் போட்டு மன்னிக்க விழைக்கின்றார்.
பேதுரு இயேசுவிடம், ‘ஏழுமுறை மன்னிக்கலாமா?’ என்று கேட்டதற்கும் ஓர் அர்த்தம் இருக்கின்றது. அது என்னவெனில், யூத இரபிக்கள், ‘தவறும் செய்யும் ஒருவரை மூன்றுமுறை மன்னிக்கலாம்’ என்று சொல்லிவந்தனர். இதை உள்வாங்கிக்கொண்ட பேதுரு, பெருந்தன்மையாக (!) மூன்றோடு மூன்றைச் சேர்த்து, அதோடு இன்னும் ஒன்றைச் சேர்த்து, ஏழுமுறை மன்னிக்கலாமா? என்று கேட்கின்றார். உடனே இயேசு அவரிடம், “ஏழு முறை மட்டுமல்ல, எழுபது தடவை ஏழுமுறை” என்று சொல்லி நிபந்தனையின்றி மன்னிக்கச் சொல்கின்றார். இதை விளக்க இயேசு ஓர் உவமையையும் சொல்கின்றார்.
கடனாளியாக இருந்த பணியாளர்
இயேசு சொல்லும் மன்னிக்க மறுத்த பணியாளர் உவமையில் வரும் பணியாளர், அரசரிடம் பத்தாயிரம் தாலந்து கடன்பட்டிருக்கின்றார். பத்தாயிரம் தாலந்து என்பது ஒருவரின் இருபது ஆண்டுகால ஊதியம். (தோராயமாக ஒரு கோடி என்று வைத்துக்கொள்ளலாம்). இவ்வளவு பெரிய தொகைக்குக் கடன்பட்டிருந்த பணியாளர், அரசரிடம் கெஞ்சிக் கேட்டதும், அவருடைய கடன் அனைத்தையும் தள்ளுபடி செய்கின்றார். அவ்வளவு பெரிய தொகையைத் தள்ளுபடி செய்கின்றார் எனில், அந்த அரசர்/ கடவுள் எவ்வளவு இரக்கமிகுந்தவராகவும் மன்னிப்பதில் தாரளமானவராகவும் இருந்திருப்பார் என்று கற்பனை செய்து பார்த்துக் கொள்ளவேண்டும்.
கடன்கொடுத்தவரான பணியாளர்
அரசரிடமிருந்து அவ்வளவு பெரிய தொகைக்கான கடனைத் தள்ளுபடி பெற்ற பணியாளர், வெளிய வந்து, தன்னிடம் நூறு தெனாரியம் கடன்பட்ட பணியாளரின் கழுத்தைப் பிடித்து நெரித்து, கடன் தொகையைத் திருப்பிச் செலுத்துமாறு கேட்கின்றார். ஒரு தெனாரியம் என்றால், ஒருநாள் கூலி. அப்படியானால் ஒரு நாளைக்கு ஐந்நூறு ரூபாய் ஊதியமாக வைத்தாலும் நூறு நாட்களுக்கு ஐம்பதாயிரம் ரூபாய்தான் வரும். ஒரு கோடி ரூபாய் எங்கிருக்கின்றது, ஐம்பதாயிரம் ருபாய் எங்கிருக்கின்றது. அவ்வளவு பெரிய தொகைக்கான கடனைத் தள்ளுபடி பெற்ற பணியாளர், தன்னிடம் நூறு தெனாரியம் கடன் பட்ட பணியாளருடைய கடனைத் தள்ளுபடி செய்யாது வருத்தத்திற்கு உரியதாக இருக்கின்றது.
சிறையில் அடைபட்ட பணியாளர்
பத்தாயிரம் தாலந்து கடன்பட்டிருந்த பணியாளர், அவ்வளவு பெரிய தொகையை தள்ளுபடியாகப் பெற்றுவிட்டு, தன்னிடம் நூறு தெனாரியம் கடன்பட்டிருந்த ஒருவருடைய கடனைத் தள்ளுபடி செய்யாததைக் கேள்விப்பட்ட அரசர், அந்த பொல்லாத பணியாரைச் சிறையில் அடைக்கின்றார். அரசரிடமிருந்து தாரளமாக மன்னிப்பைப் பெற்றுக்கொண்டு, தன்னிடம் குறைவாகக் கடன்பட்ட ஒரு பணியாளரை மன்னிக்காமல் போனதால், கடன்தொகையைச் திருப்பிச் செலுத்தும்வரை சிறையில் அடைக்கப்படுகின்றார்.
உவமையில் வரும் இந்த பொல்லாத பணியாளரைப் போன்றுதான் பலரும் இறைவனிடமிருந்து மன்னிப்பைப் பெற்றுக்கொண்டு, அடுத்தவரை மன்னிக்காமல் இருக்கின்றார்கள். இப்படிப்பட்டவர்கள் தங்களுடைய வாழ்வை சுய ஆய்வுக்கு உட்படுத்தி, மன்னிக்கக் கற்றுக்கொள்வது நல்லது.
Source: New feed