
தவக்காலம் இரண்டாம் வாரம்
சனிக்கிழமை
லூக்கா 15: 1-3, 11-32
என் மகன் இவன் இறந்துபோயிருந்தான்; மீண்டும் உயிர்பெற்றுள்ளான்
நிகழ்வு
சில ஆண்டுகளுக்கு முன்பாக கேரளா மாநிலம், கோட்டயத்தைச் சார்ந்த ஜாய் என்ற இளம்பொறியாளர் ஒருவருக்கு மும்பையிலுள்ள ஒரு பெரிய நிறுவனத்தில் வேலை கிடைத்தது. உடனே அவர் தன்னுடைய அன்பான மனைவி மற்றும் அழகான மகளை விட்டுவிட்டு மும்பைக்குச் சென்றார். அங்கு அவர் குடிப்பழத்திற்கும் பல்வேறு தீய பழக்கவழக்கத்திற்கும் அடிமையாகி வாழ்வைத் தொலைக்கத் தொடங்கினார். இதனால் குடும்பத்தையும் மறந்தார்.
இதற்கிடையில் ஒருநாள் பள்ளிக்கூடம் விட்டு வீடுதிரும்பிய ஜாயின் மகள்மீது வாகனம் ஒன்று மோத, அவள் பயங்கரக் காயங்களோடு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாள். செய்தி ஜாய்க்குத் தெரிவிக்கப்பட்டது. உடனே ஜாய் மும்பையிலிருந்து மகள் அனுமதிக்கப்பட்டிருந்த மருத்துவமனைக்கு ஓடிவந்தார். அவர் வருவதற்குள் அவருடைய மகள் இறந்துபோனாள். தன்னுடைய மனைவியையும் மகளையும் நல்லமுறையில் பராமரிக்காததால்தான் மகளுக்கு இப்படியொரு நிலை ஏற்பட்டுள்ளது என்று நினைத்து கதறி அழுத ஜோய், அப்போதிலிருந்தே தன்னுடைய பாவ வாழ்க்கையைத் துறந்துவிட்டு, புதிய மனிதராய் வாழத் தொடங்கினார்.
எப்படி ஜோய் தனது குற்றத்தை உணர்ந்து, மனம்வருந்தி, புது வாழ்க்கை வாழத் தொடங்கினாரோ, அதுபோன்று ஊதாரி மைந்தன் உவமையில் வரும் இளைய மகன் தன்னுடைய குற்றத்தை உணர்ந்து, திருந்தி நடக்கத் தொடங்கினான். அதனால் அவன் தந்தையின் அன்பு மகனானான். ஜாயைப் போன்று, ஊதாரி மைந்தனைப் போன்று கடவுளை விட்டு வெகுதொலைவில் போயிருக்கும் ஒவ்வொருவரும், கடவுளின் பேரன்பை உணர்ந்து, அவரிடமிருந்து திரும்பிவரவேண்டும் என்றுதான் இன்றைய நற்செய்தி வாசகம் எடுத்துரைக்கின்றது. எனவே, நாம் அதைக் குறித்து சிந்தித்துப் பார்ப்போம்.
பேரன்புகொண்ட இறைவன்
நற்செய்தியில் இயேசு செய்துவந்த பணிகளைப் பார்த்துவிட்டு, “இவர் பாவிகளை வரவேற்று, அவர்களோடு உணவருந்துகிறாரே” என்று பரிசேயர்களும் மறைநூல் அறிஞர்களும் அவருக்கு எதிராக முணுமுணுக்கத் தொடங்குகிறார்கள். அப்பொழுது இயேசு அவர்களுக்கு ஊதாரி மைந்தன் உவமையைச் சொல்கின்றார்.
இயேசு சொல்லும் இவ்வுவமை இறைவனின் பேரன்பை மிக அருமையாக எடுத்துச் சொல்கின்றது என்றால், அது மிகையாகாது. ஏனென்றால், ஊதாரி மைந்தன் உவமையில் வரும் தந்தை, இளைய மகன் சொத்தைப் பிரித்துத் தருமாறு கேட்கும்போது, அவனுடைய சுதந்திரத்திற்கு மதிப்பளித்து, சொத்தைப் பகிர்ந்து தருகின்றார். யூத சமூகத்தில், சொத்தில் (100) மூன்றில் இரண்டு பங்கு (66.67) மூத்த மகனுக்கும் ஒரு பங்கு (33.33) இளைய மகனுக்குப் போய்ச் சேரவேண்டும். ஆனால், உவமையில் வருகின்ற தந்தை சொத்தைப் பகிர்ந்தளிக்கின்றார் (50) என்று வாசிக்கின்றோம். அப்படியானால், தந்தை இளைய மகனிடம் பெருந்தன்மையோடு அல்லது பேரன்போடு நடந்து கொண்டார் என்றுதான் சொல்லவேண்டும். இதுமட்டுமல்லாமல், தந்தையை விட்டுப் பிரிந்துசென்ற இளைய மகன், தன்னிடம் இருந்த பணமெல்லாம் தீர்ந்துபோனபின்பு, பிழைப்பிற்காகப் பன்றிகளை மேய்க்கின்றான். யூதர்கள் தூய்மை கருதி பன்றிகளை வெறுத்து ஒதுக்கினார்கள். அப்படிப்பட்ட விலங்குகளை இளைய மகன் மேய்த்தான் எனில், அவன் வெறுத்து ஒதுக்கப்படவேண்டிவன், அந்நிலையிலும் தந்தை அவனை மன்னித்து ஏற்றுக்கொள்கிறார்.
மேலும் இளைய மகன் தன்னுடைய தவற்றை உணர்ந்து தந்தையிடம் திரும்பி வந்தபோது, அவன் சொன்ன நினைத்தையெல்லாம் சொல்வதற்கு முன்பாகவே, அவனுடைய குற்றங்களை எல்லாம் மன்னித்து, அவனைத் தனது அன்பு மகனாக ஏற்றுக்கொள்கின்றார். இப்படி ஒவ்வொருநிலையிலும் தந்தை இளையமகனிடம் பேரன்போடு நடந்துகொள்வதால், அவர் பேரன்புகொண்ட கடவுள் என்று அழைப்பது மிகவும் பொருத்தமாக இருக்கும்.
கடவுள் நம்மீது பேரன்பு கொள்ளக் காரணமென்ன?
கடவுள் மனிதர்கள் ஒவ்வொருவர்மீதும் பேரன்புகொள்ளக் காரணம், அவர்கள் அவருக்கு உரியவர்கள் (உரோ 1:31) என்பதாலும் படைப்பின் சிகரம் (தொநூ 1:31) என்பதாலும்தான். யாராவது தனக்குச் சொந்தமானதை இழக்க விரும்புவார்களா? நிச்சயமாக விரும்ப மாட்டார்கள். அதுபோன்றுதான் கடவுளும் தனக்குச் சொந்தமான மனிதர்களை இழக்க விரும்பாமல் அவர்கள்மீது பேரன்பு கொள்கின்றார். அவர்கள் அவரை விட்டு விலகிச் சென்றாலும், எப்போது வருவார்கள் என்று எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கின்றார். இப்படியெல்லாம் அவர் மனிதர்கள் ஒவ்வொருவரின்மீதும் பேரன்பைக் காட்டுகின்றார்.
சிந்தனை
‘உங்கள் முழு இதயத்தோடு என்னிடம் திரும்பி வாருங்கள். ஏனெனில் நான் பேரன்புமிக்கவன்’ (யோவே 2: 12,13) என்று இறைவாக்கினர் யோவேல் நூலில் ஆண்டவராகிய கடவுள் கூறுவார். ஆகையால், கடவுளின் பேரன்பை உணர்ந்து, பாவத்திற்கு அடிமையாயிருக்கும் நாம் அவரிடம் திரும்பி வருவோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய்ப் பெறுவோம்.
Source: New feed