
தவக்காலம் இரண்டாம் வாரம்
புதன்கிழமை
மத்தேயு 20: 17-28
உங்களிடையே அப்படி இருக்கக்கூடாது
நிகழ்வு
ஒரு கிராமத்தில் இளைஞன் ஒருவன் இருந்தான். அவனுக்கு பெரிய மதத்தலைவராக வேண்டும் என்று ஆசை. அதற்காக அவன் ஏராளமான பயிற்சிகள் எடுத்தான். அப்படியிருந்தும் அவனால் மக்களை ஈர்க்க முடியவில்லை.
இதற்கிடையில் ஒருநாள் அவன் கடவுளிடம் முறையிட்டான். “கடவுளே! நான் உன் மதத்தைப் பரப்பத்தானே தலைவராக விரும்பினேன்… என்னால் ஏன் வெற்றிபெற முடியவில்லை?”. கடவுள் அவனுடைய கனவில் வந்து, ஒரு ஞானியைச் சென்று பார்க்கச் சொன்னார். அவனும் கடவுள் தனக்குக் கனவில் சொன்னதுபோன்று ஒரு ஞானியைச் சென்று பார்த்தான். அவன் ஞானியைப் பார்த்ததும் அவர் அவனிடம் சொன்னார். “நீ ஏன் வெற்றி பெறவில்லை தெரியுமா? கடவுள் பணிக்கு தலைவர்கள் தேவையில்லை. தொண்டர்கள்தான் தேவை”.
அந்த ஞானியின் சொற்களில் இருந்த ஆழமான உண்மையை உணர்ந்தவனாய், ஒரு தொண்டரைப் போல வாழத் தொடங்கினான். சீடத்துவ வாழ்வு என்பது தலைவராக இருந்துகொண்டு மற்றவரை அடக்கி ஆள்வது அல்ல, மாறாக ஒரு தொண்டரைப் போன்று இருந்து, எல்லாருக்கும் பணிவிடை செய்து வாழ்வது. அத்தகைய உண்மையை எடுத்துச் சொல்லும் இந்நிகழ்வு ஆழமான சிந்தனைக்குரியது.
இன்றைய நற்செய்தி வாசகம் சீடத்துவ வாழ்வு என்பது எப்படிப்பட்டது, அதற்காக ஒருவர் என்ன செய்யவேண்டும் என்பதைப் பற்றிய தெளிவான விளக்கத்தைத் தருகின்றது. எனவே, நாம் அதைக் குறித்து சிந்தித்துப் பார்ப்போம்.
செபதேயுவின் மனைவியின் வேண்டுகோள்
நற்செய்தியில் இயேசு, தனது சிலுவைச் சாவைக் குறித்தும் மூன்றாம் நாளில் உயிர்த்தெழுவதைக் குறித்தும் சீடர்களிடம் பேசிக்கொண்டிருக்கும்போது, இயேசுவிடம் வரும் செபதேயுவின் மனைவி, தன் மக்களாகிய யோவானுக்கும் யாக்கோவுக்கும் ஆட்சியில் பங்கு கேட்கின்றார். ‘இயேசு தன்னுடைய பாடுகளைக் குறித்துப் பேசிக்கொண்டிருக்கின்றாரே… அதைக் குறித்து அவரிடம் எதையாவது கேட்போம்’ ஒரு சீடருக்குக்கூடத் தோன்றவில்லை. ஆனால், அவருடைய ஆட்சியில் பங்குகேட்கின்றார்கள்!. எப்படிப்பட்டவர்கள் எல்லாம் இயேசுவின் சீடர்களாக (!) இருந்திருக்கிறார்கள் என்று கற்பனை செய்து பார்த்துக்கொள்ளவேண்டியதுதான். இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான் இயேசு சீடத்துவ வாழ்வு என்றால் என்ன? அதில் ஈடுபடும் ஒருவர் எத்தகைய வாழ்வு வாழவேண்டும் என்பதைக் குறித்து மிகத் தெளிவாக எடுத்துக்கூறுகின்றார்.
பெரியவராக இருக்க விரும்புகிறவர் தொண்டராக இருக்கட்டும்
தன்னுடைய சீடர்களுக்கு சீடத்துவ வாழ்வின் முக்கியத்துவத்தைக் குறித்துக் கற்பிக்க விரும்பிய இயேசு, அவர்களுக்குச் சொல்லக்கூடிய முதன்மையான அறிவுரைதான், “உங்களுள் பெரியவராக இருக்க விரும்புகிறவர் உங்கள் தொண்டராய் இருக்கட்டும்” என்பதாகும்.
சீடத்துவ வாழ்வு என்றால், மக்களை அடக்கி ஆள்வதும் அதிகாரம் செலுத்துவதும்தான் என்ற தவறான எண்ணத்தில் சீடர்கள் வாழ்ந்து வந்தார்கள். இதை செபதேயுவின் மனைவியும் யாக்கோபு மற்றும் யோவானின் தாயுமான சலோமியின் பேச்சிலிருந்து அறிந்துகொள்ளலாம். ஆனால், இயேசு, சீடத்துவ வாழ்வு என்பது அதிகாரம் செலுத்துவதோ, மற்றரை அடக்கி ஆள்வதோ அல்ல, மாறாக மற்றவருக்குத் தொண்டு செய்வதும் பணிவிடை செய்வதும்தான் என்று அழகாக எடுத்துரைக்கின்றார். இதைவிடவும் மானிடமகனாகிய நானே மக்களுக்குத் தொண்டு செய்யவும் பலருடைய மீட்புக்கு ஈடாக என்னுடைய உயிரையும் கொடுக்க வந்திருக்கின்றேன் என்கின்றார்.
மக்களுக்குத் தொண்டுசெய்த இயேசு
தன்னுடைய சீடர்களுக்கு சீடத்துவ வாழ்வு என்றால், அதிகாரம் செலுத்துவதோ அடக்கி ஆள்வதோ அல்ல, தொண்டு செய்வது அல்லது பணிவிடை செய்வது என்று போதித்த இயேசு, போதித்ததோடு நின்றுவிடாமல், தொண்டு செய்யவும் செய்கின்றார். இந்த நிகழ்வைத் தொடர்ந்து வருகின்ற நிகழ்வில் இயேசு பார்வையற்ற இருவரைக் குணப்படுத்துகின்றார் அல்லது தொண்டு செய்கின்றார். இந்த நிகழ்வு மட்டும் கிடையாது, இதுபோன்ற பல நிகழ்வுகளிலும் இயேசு மக்களுக்குத் தொண்டு செய்கின்றார் என்று விவிலியம் சான்று பகர்கின்றது. இவ்வாறு இயேசு தன்னுடைய சீடர்களுக்கு முன்மாதிரியாய் விளங்குகின்றார். ஆகையால், இயேசுவின் சீடராக இருக்க விரும்புகின்ற ஒவ்வொருவரும் அவரைப் போன்று தொண்டு செய்யவும் பணிவிடை புரியவும் தயாராக இருக்கவேண்டும். அப்படி இல்லாத ஒருவரால் இயேசுவின் சீடராக இருக்க முடியவே முடியாது.
சிந்தனை
‘தூய்மையற்ற மனிதர்கள் அதிகாரம் செலுத்தும்பொழுது கெளரவமான பதவி தனி உடைமையாகிவிடுகின்றது’ என்பார் ஷேக்ஸ்பியர். இது உண்மை. அதிகாரம் என்பது எல்லாருக்கும் அன்புப் பணி செய்யத்தானே ஒழிய, தனிப்பட்ட ஒருவருடைய நலனுக்காகப் பயன்படுத்திக் கொள்ள அல்ல. ஆகவே, இந்த உண்மையை உணர்ந்து, இயேசுவின் வழியில் நடக்கும் நாம் ஒவ்வொருவரும் அவரைப் போன்று தொண்டு செய்யத் தயாராவோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய்ப் பெறுவோம்.
Source: New feed