பொதுக்காலம் ஐந்தாம் வாரம்
புதன்கிழமை
மாற்கு 7: 14-23
உள்ளத்தைத் தூய்மையாக வைப்போம்
நிகழ்வு
ஒரு கிராமத்தில் இருந்த தொடக்கப்பள்ளியின் தலைமையாசிரியர் தனது மானவர்களுக்கு ஒரு முக்கியமான் பாடம் கற்றுத்தர விரும்பினார். எனவே ஒவ்வொரு குழந்தையையும் ஒரு நெகிழி (Plastic) பையும் சில உருளைக்கிழங்குகளும் எடுத்து வரச் சொன்னார். பின்னர் ஒவ்வொருவரையும் தங்களது நெகிழிப் பையில் தாங்கள் எத்தனை நபர்களை வெறுக்கிறார்களோ அத்தனை உருளைக்கிழங்குகளை போடச் சொன்னார்.
எல்லாக் குழந்தைகளும் அவ்வாறே செய்தார். சில குழந்தைகள் இரண்டு உருளைக்கிழங்குகளையும் இன்னும் ஒருசில குழந்தைகள் மூன்று உருளைக்கிழங்குகளையும் போட்டனர். விதிவிலக்காக ஓரிரு குழந்தைகள் ஐந்து உருளைக்கிழங்குகளைப் போட்டனர். ஒரு வாரத்திற்கு அந்தப் பைகளை உருளைக்கிழங்குகளுடன் தங்கள் கையிலேயே வைத்திருக்கவேண்டும் என்பதுதான் விளையாட்டு. எங்கு சென்றாலும் குளியலறை உட்பட பையையும் அதனுள் உருளைக்கிழங்குகளையும் எடுத்துச் செல்லவேண்டும்
இந்த வித்தியாசமான விளையாட்டை எல்லாரும் உற்சாகமாக ஆரம்பித்தனர். மூன்று நாட்கள் கழித்து மெதுவாக ஒவ்வொருவராக அதன் கஷ்டத்தை உணரத் தொடங்கினார்கள். சிறிது கனமான பையை கையிலேயே வைத்திருப்பது கஷ்டமாக இருந்தது. மேலும் உருளைக்கிழங்கு அழுகிப்போய் துர்நாற்றம் எடுக்கத் தொடங்கியது. அதுவும் மிகவும் கஷ்டமாக இருந்தது. ஒருவழியாக கஷ்டப்பட்டு ஒரு வாரத்தை முடித்தனர். தலைமையாசிரியர் ஒவ்வொருவரையும் தமது அனுபவத்தைச் சொல்லச் சொன்னார். எல்லாரும் பையை எப்பொழுதும் தூக்கிச்செல்வது மிகவும் கடினமாக இருந்ததாகவும் அழுகிப்போன உருளைக்கிழங்குகளின் துர்நாற்றம் கஷ்டத்தைத் தந்ததாகும் கூறினர்.
அப்பொழுது தலைமையாசிரியை அதன் அர்த்தத்தை விளக்கினார். “இப்படித்தான் நாமும் மற்றவகளின்மீது வெறுப்பைச் சுமக்கும்போது அது நமக்குக் கடினமாகவும் அதனால் உண்டாகும் தீய எண்ணம் (துர்நாற்றம்) நமது மனத்தைக் கெடுப்பதாகவும் உள்ளது. நம்முடைய உள்ளத்திலிருந்து வெறுப்பைத் தூங்கி எரிந்துவிட்டால் நிம்மதியாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கலாம்.”
இந்நிகழ்வு நமக்குக் கற்றுத்தருகின்ற உண்மை மிகவும் அற்புதமானது. நம்முடைய உள்ளத்தில் இருக்கின்ற தீய எண்ணங்களை அப்புறப்படுத்திவிட்டால், நம்முடைய வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும் என்ற உண்மையை எடுத்துச் சொல்லும் இந்நிகழ்வு நமது சிந்தனைக்குரியது.
கடவுளால் படைக்கப்பட்டவை அனைத்தும் நல்லவையே
நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு, தூய்மை குறித்த ஒருசில உண்மைகளை நமக்கு மிகத் தெளிவாக எடுத்துக் கூறுகின்றார். அவர் கூறுகின்றார், “வெளியேயிருந்து மனிதருக்கு உள்ளே சென்று அவர்களைத் தீட்டுப்படுத்தக்கூடியது ஒன்றுமில்லை. மனிதருக்கு உள்ளேயிருந்து வெளியே வருபவையே அவர்களைத் தீட்டுப்படுத்தும்.” இயேசு கூறும் இவ்வார்த்தைகளில் இரண்டு முக்கியமான உண்மைகள் அடங்கி இருக்கின்றன. ஒன்று, இந்த உலகத்தில் படைக்கப்பட்ட எல்லாமும் நல்லவை, தூயவை. இரண்டு. மனிதருடைய உள்ளத்திலிருந்துதான் தீயவை தோன்றுகின்றன. இந்த இரண்டையும் குறித்து சிறிது சிந்தித்துப் பார்ப்போம்.
ஆண்டவராகிய கடவுள் இந்த உலகத்தையும் இதிலுள்ள யாவற்றையும் படைத்தபோது அவை நன்றாக இருந்தன (தொநூ 1:31) என்று விவிலியம் நமக்கு எடுத்துக்கூறுகின்றது. அப்படியிருக்கின்றபோது இவ்வுலகத்தில் உள்ள எதுவும் தீட்டாக, தூய்மையில்லாமல் இருக்குமா? என்றால், நிச்சயமாக இல்லை என்றுதான் சொல்லவேண்டும். மனிதர்கள் இது இது தூய்மையானது, இது இது தீட்டானது என்று பிரித்துவைத்து விட்டார்கள். இங்கேதான் பிரச்சனை ஆரம்பிக்கின்றது.
மனித உள்ளத்திலிருந்து எழும் எண்ணங்கள்தான் தீயவை
வெளியே இருந்து வருபவை அல்ல, உள்ளே இருந்து வருபவைதான் மனிதர்களைத் தீட்டுப்படுத்தும் என்று இயேசு சொல்வதற்குக் காரணம், உள்ளிருந்துதான் எல்லாவிதமான தீய எண்ணங்களும் பிறப்பெடுக்கின்றன. ஆகவே, இத்தகைய தீய எண்ணங்களை ஒருவர் தன்னுடைய மனத்திலிருந்து அப்புறப்படுத்திவிட்டு, அங்கு தூய எண்ணங்களை வைத்திருக்கும்போது அல்லது மனதில் உள்ள சாத்தானை அப்புறப்படுத்திவிட்டு, அங்கு தூயவராம் கடவுளைக் குடியமர்த்தினால் அவருடைய வாழ்க்கை மிகவும் மகிழ்சியாக இருக்கும் என்பதில் எந்தவொரு மாற்றுக்கருத்தும் கிடையாது. இத்தகைய சிந்தனையைத்தான் இயேசு மக்களுக்கும் பின் தன்னுடைய சீட்ரகளுக்கும் எடுத்துச் சொல்கின்றார்.
இதில் வேடிக்கை என்னவென்றால், இயேசு தீட்டு – தூய்மை குறித்து இவ்வளவு எடுத்துச் சொன்னபோதும் பேதுரு, “தீட்டானதும் தூய்மையற்ற எதையும் நான் உண்டதில்லை” என்பார். பின்னர் பேதுருவிடம் பேசிய குரல், “தூய்மையான எதையும் தீட்டாகக் கருதாதே” என்று சொன்னபின்தான் அவ்வுணவை அவர் உண்பார். ஆகையால், பேதுருவிடமிருந்து விலகிய தீட்டு குறித்த எண்ணம் நம்மிடம் விலகவேண்டும்; எல்லாவற்றையும் தூய்மையானதாகப் பார்க்கப் பழகவேண்டும் (திப 10: 14,15).
சிந்தனை
கடவுள் படைத்த எல்லாமும் நல்லவைதான், நம்முடைய உள்ளம்தான் தீமைகளின் பிறப்பிடமாக இருக்கின்றது. ஆகவே, நம்முடைய உள்ளத்தைத் தூய்மையாக வைத்து, தூயவரின் வழியில் நடப்போம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.
Source: New feed