பொதுக்காலம் ஆறாம் வாரம்
சனிக்கிழமை
மாற்கு 9: 2-13
முதலில் பாடுகள், அதன்பிறகுதான் பரலோகம்
நிகழ்வு
காலில் இரு பலகைகளை மாட்டிக்கொண்டு, கையில் ஒரு குச்சியை வைத்துக்கொண்டு பனிபடர்ந்த பிரதேசத்தில் சாகசம் செய்யும் பனிச்சறுக்கு விளையாட்டை எப்போதாவது நீங்கள் பார்த்திருக்கிறீர்களா?… தொலைக்காட்சியிலும் காணொளிகளிலும் பார்த்திருக்கக்கூடும்.
இப்படிப்பட்ட பனிச்சறுக்கு விளையாட்டில் பெரிய ஆளாக வேண்டும் என்று கிறிஸ்டோபருக்கு நீண்ட நாளை ஆசை. எனவே, அவன் இதற்காக சிறப்பாகப் பயிற்சி கொடுக்கும் பயிற்சியாளரைச் சந்தித்தான். அவரும் அவனுக்குப் பயிற்சி கொடுக்கத் தயார் என்றதும், இரண்டு பெரிய பலகைகள், ஒரு குச்சி இன்னும் தேவையான உபகரணங்களுடன் பயிற்சிக்குத் தயாரானான்.
பயிற்சி தொடங்கிய தொடக்கத்தில் அவன் கால்களில் மாட்டப்பட்டிருந்த இரு பலகைகள் தடுக்கி, இடறி இடறி விழுந்தான். அப்பொழுது அவன் பயிற்சியாளரிடம், “என்னால் இந்த பனிச்சறுக்கு விளையாட்டில் பெரியாளாக முடியாதா?” என்று மிக வருத்தத்துடன் கேட்டான். அதற்கு அவர் அவனிடம், “உன்னால் நிச்சயம் பெரியாளாக முடியும்… ஆனால், உடனடியாக முடியாது. முதலில் உன்னுடைய கால்களில் சிறு பலகைகளைக் கட்டி பயிற்சியை மேற்கோள், அதில் நன்றாகத் தேறியவுடன் பெரிய பலகைகளைக் கட்டி, பயிற்சி மேற்கொள். இப்படிச் செய்தால் உன்னால் நிச்சயம் இந்த பனிச்சறுக்கு விளையாட்டில் பெரியாளாக முடியும்” என்றார்.
கிறிஸ்டோபரும் பயிற்சியாளர் சொன்னதை உள்வாங்கிக்கொண்டு, முதலில் சிறிய பலகைகளை வைத்து பயிற்சிகளை மேற்கொண்டான். அதில் அவன் தேறியவுடன் பெரிய பலகைகளை வைத்து பயிற்சிகளை மேற்கொண்டான். இவ்வாறு அவன் தொடர்ந்து பயிற்சிகளை மேற்கொண்டதால், ஒருகட்டத்தில் அவன், அவன் நினைத்தவாறே பனிச்சறுக்கு விளையாட்டில் மிகபெரிய ஆளாய் உருமாறி நின்றான்.
பனிச்சறுக்கு விளையாட்டு என்றில்லை, நமது வாழ்க்கையிலும்கூட துன்பங்களையும் சவால்களையும் தாங்கிக்கொள்ளத் தயாராகவேண்டும். அப்பொழுதுதான் இன்பமான வாழ்வு நமக்கு கிடைக்கும். இதனை இன்றைய நற்செய்தியில் இடம்பெறுகின்ற ஆண்டவர் இயேசுவின் உருமாற்ற நிகழ்வும் நமக்கு எடுத்துச் சொல்கின்றது. எனவே, அதைக் குறித்து சிந்தித்துப் பார்ப்போம்.
இயேசுவின் உருமாற்றம்
இயேசு தன்னுடைய மூன்று முதன்மைச் சீடர்களான யோவான், யாக்கோபு மற்றும் பேதுருவுடன் ஓர் உயர்ந்த மலைக்குச் சென்று அங்கு உருமாற்றம் அடைகின்றார். இயேசுவின் இந்த உருமாற்றம் அவரோடு சென்ற பேதுருவை தன்னிலை மறந்து பேசச் செய்கின்றது. இயேசுவின் இந்த உருமாற்றம் நமக்குச் சொல்லும் செய்தி என்ன என்று சிந்தித்துப் பார்ப்பதற்கு முன்பாக, இந்நிகழ்விற்கு முன்பாக என்ன நடந்தது என்று தெரிந்துகொள்வது நல்லது.
இந்நிகழ்விற்கு முன்பு, இயேசு தன்னுடைய பாடுகளையும் எருசலேமில் அடைய அடைய இருந்த சிலுவைச் சாவைக் குறித்தும் எடுத்துச் சொன்னார். இதைக் கேட்ட சீடர்கள், இந்த உலகத்தைத் தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டு, ஆட்சி செலுத்தும் ஒருவர் எப்படி பாடுகள் படமுடியும்… ஒருவேளை இயேசு மெசியாதானா என்று ஐயம் கொள்ளத் தொடங்கினார்கள். இப்படிப்பட்ட பின்னணியில்தான் இயேசு தன்னுடைய உருமாற்றத்தின் வழியாக, தான் மெசியாதான் என்பதை அவர்களுக்கு நிரூபித்துக் காட்டுகின்றார். இருந்தாலும், மானிடமகன் இறந்து உயிர்த்தெழும் வரை இதைக் குறித்து யாரிடமும் சொல்லவேண்டாம் என்று அவர்களுக்குக் கட்டளை பிறப்பிக்கின்றார். ஒருவேளை, சீடர்கள் மூவரும் தன்னுடைய உருமாற்றத்தைக் குறித்து மக்களிடத்தில் எடுத்துச் சொன்னால், அது மக்கள் மத்தியில் ஒருவிதமான பதற்றத்தை ஏற்படுத்தும் என்பதால் இயேசு அவ்வாறு கட்டளையிடுகின்றார்.
இயேசு பயணப்பட்ட பாடுகளின் வழியில் பயணப்படவேண்டும்
இயேசுவின் உருமாற்றம் நிகழ்ந்ததன் முக்கியத்துவத்தை அறிந்துகொண்ட நாம், இயேசுவின் உருமாற்றம் நமக்குச் சொல்லும் செய்தியென்ன என்று இப்போது சிந்தித்துப் பார்ப்போம்.
இயேசுவின் உருமாற்றத்தைப் பார்த்துவிட்டு தன்னிலை மறந்த பேதுரு, “ரபி, நான் இங்கேயே இருப்பது நல்லது” என்பார். அவ்வேளையில் மேகத்திலிருந்து ஒரு குரல், “என் அன்பார்ந்த மைந்த இவரே; இவருக்குச் செவிசாயுங்கள்” என்று ஒலிக்கும். இதுதான் இயேசுவின் உருமாற்றம் நமக்குச் சொல்லும் செய்தியாக இருக்கின்றது. அதாவது, நாம் பேதுருவைப் போன்று தன்னிலை மறந்து இவ்வுலகம் தரும் மகிழ்ச்சியில் திளைத்துக்கொண்டிருக்காமல், இயேசு நமக்குப் போதித்த பாடுகளின் வழியில் நடக்கவேண்டும். ஏனெனில், இயேசுவின் வார்த்தையும் அவருடைய விழுமியங்களும்தான் நமக்கு நிலையான மகிழ்ச்சியைத் தருமே ஒழிய, இவ்வுலக இன்பமல்ல.
ஆகையால், இயேசுவின் சீடர்களாக, அவருடைய வழியில் நடக்கின்ற நாம், அவருடைய குரலைக் கேட்டு, அவருடைய பாடுகளின் வழியில் பயணப்படுவது நல்லது.
சிந்தனை
‘துன்பங்களை ஏற்கத் துணிந்த ஒருவரையே கடவுள் மிகப்பெரிய செயல்களைச் செய்யப் பயன்படுத்துகின்றார்’ என்பார் ஏ. டபிள்யு. டோஜர். எனவே, நாம் இயேசுவைப் போன்று துன்பங்களை ஏற்பத் துணிவோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.
Source: New feed