பொதுக்காலம் ஆறாம் வாரம்
வியாழக்கிழமை
மாற்கு 8: 27-33
மானிடமகன் பலவாறு துன்பப்படவும்…
நிகழ்வு
வயதான சிற்பி ஒருவர் இருந்தார். அவருக்கு இரண்டு மகன்கள் இருந்தார்கள். ஒருநாள் அவர் தன் இரு மகன்களையும் அழைத்து, “எனக்கு வயதாகிக்கொண்டே போகிறது. கண்பார்வை வேறு மங்கிவிட்டது. நான் உங்களுக்கு சொத்துப்பத்து எதுவும் சேர்த்து வைக்கவில்லை. என்னிடம் உள்ள கருவிகளை உங்களுக்குத் தருகிறேன். அதை வைத்து நீங்கள் உங்கள் வாழ்க்கையை செம்மையாக்கிக் கொள்ளுங்கள்” என்றார். இருவரும் அதற்குச் சரி என்று சொன்னதும், அவர் தன்னிடமிருந்த கருவிகளை அவர்களுக்கு சரி சமமாகப் பங்கிட்டுக் கொடுத்தார். அவர் கொடுத்த கருவிகளில் சிற்பம் வடிக்கும் பல்வேறு கருவிகள் இருந்தன.
பெரிய மகன் முகிலன் சரியான சோம்பேறி, ஊதாரியும்கூட. அவன், ‘தந்தை கொடுத்த உளிகளையும் சுத்திகளையும் வைத்து நான் என்ன செய்வது? பேசாமல் கிடைத்த வேலையைப் பார்த்துகொண்டு நிம்மதியாக இருப்போம்’ என்று எண்ணி, தந்தை தந்த கருவிகளை வீட்டிலேயே வைத்துவிட்டு வேலைதேடிப் புறப்பட்டான். எங்கெல்லாமோ வேலை தேடி அலைந்தான். ஆனால், அவனுக்கு அவன் ‘நினைத்த மாதிரி’ வேலை கிடைக்கவில்லை. அதனால் அவன் அங்கும் இங்கும் சுற்றிச் சுற்றி வந்தான்.
இளையவன் வளவனோ பெரியவனுக்கு அப்படியே நேர் எதிர். அவன் தந்தை தனக்குத் தந்த கருவிகளைக் கொண்டு மிகக் கடினமாக உழைத்து, சிறு சிறு சிற்பங்கள் வடித்து, விற்பனை செய்தான், அதன்மூலம் கிடைத்த வருமானத்தில் குடும்பத்தை காப்பாற்றி வந்தான். அவன் செய்துவந்த இந்தத் தொழிலில் போதிய வருமானம் கிடைக்காவிட்டாலும், மனநிறைவோடு குடும்பத்தை வழிநடத்தி வந்தான். ஒருமுறை பக்கத்துக்கு நகரில் சிற்பபோட்டி ஒன்று நடந்தது. வளவன் தான் மிகக்கடினமாக உழைத்து அழகிய சிற்பம் ஒன்றை போட்டிக்கு அனுப்பி வைத்தான். போட்டியில் அந்த அழகு சிற்பம் முதல் பரிசுக்கு தேர்வாகி, வளவனுக்கு பொன்முடிப்பை பரிசாகப் பெற்றுத்தந்தது. அத்துடன் குறுநில மன்னரால் பாராட்டப்பட்டு அரசாங்கத்தில் சிற்பப் பணி செய்யும் வேலையும் கிடைத்தது. அதன்பிறகு வளவன் வாழ்வே வசந்தமானது.
இதற்கிடையில் வளவனின் அண்ணன் முகிலன் பல ஊர்களைச் சுற்றி அலைந்துவிட்டு, ‘நினைத்த மாதிரி’ வேலை கிடைக்காமல் ஏமாற்றத்துடன் சொந்த ஊருக்கு திரும்பினான். வறுமையால் தவித்த அவன், உடல் மெலிந்து காணப்பட்டான்.. அப்பொழுது அங்கு வந்த அவனுடைய தந்தை, அவனின் பரிதாப நிலையைப் பார்த்துவிட்டு, “மகனே! நீ கஷ்டப்படாமல் வாழ்க்கையில் முன்னேற நினைத்தாய். ஆனால், உனக்கு நேர்ந்ததோ இப்படியோர் அவலநிலை. உன் தம்பி அப்படியில்லை. அவன் மிகக் கடினமாக உழைத்து, இன்றைக்கு வாழ்க்கையில் முன்னேறியிருக்கின்றான். இனிமேலாவது நீயும் கடினமாக உழைக்கக் கற்றுக்கொள். அப்பொழுதுதான் உன்னால் வாழ்க்கையில் முன்னேற முடியும்” என்றார். அன்று முதல் அவன், தம்பி செய்துவந்த சிற்பத் தொழிலில் மிகக் கடினமான உழைப்பினைச் செலுத்தி, வாழ்க்கையில் முன்னேறத் தொடங்கினான்.
‘துன்பமில்லாமல் இன்பமில்லை’ ‘வலிகள் இல்லாமல் வாழ்க்கை’ என்ற இந்த கூற்றுகளுக்கு ஏற்ப, எவர் ஒருவர் துன்பங்களைத் துணிவோடு தாங்கிக்கொள்கின்றாரோ, அவரே வாழ்க்கையில் உன்னதநிலையை அடைகின்றார்.
தம்மைப் பற்றி எவரிடமும் சொல்லவேண்டாம் என்று சொன்ன இயேசு
இயேசு தன் சீடர்களிடம், “நான் யார் என மக்கள் சொல்கிறார்கள்?” என்று கேட்டுவிட்டு, தொடர்ந்து அவர்களிடம், “நீங்கள் நான் யார் எனச் சொல்கிறீர்கள்?” என்று கேட்க, சீமோன் பேதுரு மறுமொழியாக, “நீர் மெசியா” என்று உரைக்கின்றார். உடனே இயேசு அவரிடம்/ அவர்களிடம், தம்மை குறித்து எவரிடமும் சொல்லவேண்டாம் என்று மிகக் கண்டிப்பாகக் கூறுகின்றார். இயேசு தம் சீடர்களிடம் இவ்வாறு கூறக் காரணம், அவர்கள் இயேசுதான் மெசியா என்று மக்களிடத்தில் சொன்னால், மெசியா வருவார், அதுவும் எல்லா நாடுகளின்மீதும் அதிகாரம் செலுத்தும் அரசியல் மெசியாவாக வருவார் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்த மக்கள் மத்தியில் ஒருவிதமான பதற்றமான சூழ்நிலை ஏற்படும், அது கடவுளின் திருவுளம் நிறைவேறத் தடையாக இருக்கும் என்று சீடர்களும் அப்படிச் சொல்கின்றார்.
இயேசு என்னும் துன்புறும் மெசியா
தம்மைக் குறித்து யாரிடமும் சொல்லவேண்டாம் என்று தன் சீடர்களும் மிகக் கண்டிப்பாகக் கூறிய இயேசு, அதன்பிறகு எருசலேமில் தான் அடையயிருக்கும் பாடுகளைக் குறித்து வெளிப்படையாக எடுத்துக்கூறுகின்றார். இது இயேசுவின் சீடர்களுக்கு உவகையை அளிக்கவில்லை என்றாலும், அவர் அவர்களிடம் மீண்டும் மீண்டுமாகச் சொல்லிப் புரிய வைக்க முயற்கின்றார். இதற்கு மிக முக்கியமான காரணம், இயேசு இந்த உலகிற்கு வந்தது மக்களை அடக்கி ஆளவோ, அதிகாரம் செலுத்தவோ அல்ல, தன்னுடைய உடலைப் பலியாகத் தந்து அனைவரையும் மீட்கத்தான். இந்த உண்மையை நாம் உணர்கையில், நம்முடைய வாழ்க்கையில் வரும் துன்ப, துயரங்களை திறந்த மனதோடு ஏற்றுக்கொள்வோம்.
சிந்தனை
‘இன்பம் என்பது சுட்ட நிலக்கரி போன்றது. அது ஒரு செய்பொருளின் விளைவேயாகும்’ என்பது முதுமொழி. நம்முடைய வாழ்க்கையிலும் இன்பம் என்பது உடனடியாகக் கிடைத்துவிடாது. துன்பத்தைத் தாங்குகின்றபோதுதான் அது கிடைக்கும். ஆகவே, வாழ்க்கையில் வரும் துன்பங்களைத் துணிவோடு தாங்கிக்கொள்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.
Source: New feed