
திருவருகைக் காலம் முதலாம் வாரம் திங்கட்கிழமை
மத்தேயு 8: 5-11
“இத்தகைய நம்பிக்கையை நான் கண்டதில்லை”
நிகழ்வு
பாபூவா நியூ கினியாவில் (Papua New Guinea) நற்செய்திப் பணியாற்றி வந்த மறைப்பணியாளர் ஒருவர், அங்கிருந்த மக்கள் பேசும் மொழியில் திருவிவிலியத்தை மொழி பெயர்க்கும் பணியில் ஈடுபட்டார். திருவிவிலியத்தில் உள்ள எல்லாச் சொற்களுக்கும் அவர்களுடைய மொழியில் சரியான சொல் கிடைத்துவிட, நம்பிக்கை என்ற சொல்லுக்கு மட்டும், அவர்களுடைய மொழியில் சரியான சொல் கிடைக்கவில்லை. இதற்காக அவர் தீவிரமான தேடலில் ஈடுபட்டார்.
இந்நிலையில் அவருடைய பகுதியில் இருந்த கிறிஸ்தவர் ஒருவரின் குழந்தை ஒன்று இறந்துபோனது. அதற்கான அடக்கச் சடங்குகள் எல்லாம் முடிந்தபிறகு, அந்தக் குழந்தையைப் புதைப்பதற்காகக் குழி தோண்டிய பிற சமயத்தைச் சார்ந்த இளைஞன் ஒருவன், குழந்தை தந்தையிடம், “தொடக்கத்திலிருந்தே நான் உங்களைக் கவனித்து வருகின்றேன். நீங்கள் உங்கள் குழந்தை இறந்ததற்காக ஒரு சொட்டுக் கண்ணீர்கூட வடிக்கவில்லையே! ஏன்…?” என்றான். “நான் ஏன் என் குழந்தை இறந்ததற்காகக் கண்ணீர் விட்டு அழவேண்டும். என்னுடைய குழந்தை இப்பொழுது கடவுளோடு இருக்கின்றது. ஒருநாள் நானும் இறந்து, விண்ணகத்திற்குச் சென்று, அதைப் பார்ப்பேன் என்பதால்தான் நான் கண்ணீர் விட்டு அழாமல் இருக்கின்றேன்” என்று அமைந்த குரலில் சொன்னார் இறந்துபோன அந்தக் குழந்தையின் தந்தை.
இதற்கு அந்த இளைஞன், “இதை நான் ஏற்கெனவே கேள்விப்பட்டிருக்கின்றேன், கிறிஸ்தவர்களாகிய நீங்கள் ‘அடிவானத்திற்கு அப்பாலும் பார்க்கக்கூடியவர்கள்’. உண்மையில் நீங்கள் மிகப்பெரியவர்கள்” என்று வியந்து பேசினான். இதைப் பக்கத்தில் இருந்து கேட்டுக்கொண்டிருந்த மறைப்பணியாளர், ‘நம்பிக்கை என்பதற்கு அடிவானத்திற்கு அப்பாலும் பார்த்தல் என்பது எவ்வளவு பொருத்தமான சொல் என்று நினைத்துக் கொண்டு, திருவிவிலியத்தில் எங்கெல்லாம் நம்பிக்கை என்ற சொல் வந்ததோ அங்கெல்லாம் ‘அடிவானத்திற்கு அப்பால் பார்த்தல்’ என்று மொழிபெயர்த்தார்.
நம்பிக்கை என்பதற்கு, அடிவானத்திற்கு அப்பாலும் பார்த்தல் என்பது எவ்வளவு பொருத்தமான மொழிபெயர்ப்பு! இந்த இடத்தில் ‘நம்பிக்கை என்பது கண்ணுக்குப் புலப்படாதவை பற்றிய ஐயமற்ற நிலை’ (எபி 11: 1) என்ற வார்த்தைகளையும் இணைத்துப் பார்த்தல் நல்லது. ஆம், நம்பிக்கை என்பது கண்ணுக்குப் புலப்படாதவை பற்றிய ஐயமற்ற நிலை. அது நம்மை அடிவானத்திற்கு அப்பால் உள்ளவற்றையும் பார்க்க வைக்கும்.
நற்செய்தி வாசகத்தில் நூற்றுவத் தலைவரின் உயர்ந்த நம்பிக்கையைக் குறித்து வாசிக்கின்றோம். அதைக் குறித்து நாம் சிந்தித்துப் பார்ப்போம்.
ஒரு வார்த்தை சொல்லும் என் பையன் நலமடைவான்
கலிலேயாக் கடலின் வடபகுதியில் இருந்த ஒரு வணிக நகர்தான் கப்பர்நாகும். இந்த நகரைச் சார்ந்தவகள்தான் பேதுரு, அந்திரேயா, யோவான், யாக்கோபு மற்றும் மத்தேயு. பிற இனத்தார் மிகுதியாக வாழ்ந்த இந்த நகருக்கு இயேசு வந்தபொழுது, அவரிடம் வருகின்ற நூற்றுவத் தலைவர், தன்னுடைய மகன் முடக்குவாதத்தால் மிகுந்த வேதனையுடன் படுத்துக் கிடப்பதாகச் சொல்கின்றார். அதற்கு இயேசு, “நான் வந்து அவனை நலமாக்குவேன்” என்று சொன்னதும், நூற்றுவத் தலைவர் தன்னுடைய தகுதியின்மையையும், அதே நேரத்தில் வல்லமையையும் உணர்ந்தவராய், “….. ஒரு வார்த்தை மட்டும் சொல்லும்; என் பையன் நலமடைவான்” என்கின்றார்.
லூக்கா நற்செய்தியில் நூற்றுவத் தலைவர் இயேசுவிடம் நேரடியாக வராமல், யூதரின் மூப்பர்களைத் தன் சார்பாக இயேசுவிடம் அனுப்பி வைப்பதாக நாம் வாசிப்போம் (லூக் 7: 3-4); ஆனால், மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய நற்செய்தியில் அவரே இயேசுவிடம் நேரடியாக வருவதைக் குறித்து நாம் வாசிக்கின்றோம். மேலும் அவர், யூதர்கள் பிற இனத்தாரின் வீட்டிற்குள் நுழைவது தீட்டு என்பதையும் (யோவா 18: 28), இயேசு தன்னைவிட அதிகாரத்தில் உயர்ந்தவர் என்பதையும் உணர்ந்திருந்ததால் இயேசுவிடம், “ஒரு வார்த்தை சொல்லும் என் பையன் நலமடைவான்” என்கின்றார்.
நூற்றுவர் தலைவனின் வியக்க வைக்கும் நம்பிக்கை
பிற இனத்தாரும், அதிகாரத்தில் உள்ளவருமான நூற்றுவர் தலைவரிடமிருந்து நம்பிக்கை மிகுந்த வார்த்தைகள் வந்ததும், இயேசு அவருடைய நம்பிக்கையைக் கண்டு வியந்து, “இஸ்ரயேலர் யாரிடமும் இத்தகைய நம்பிக்கையை நான் கண்டதில்லை” என்று சொல்லிவிட்டு, “கிழக்கிலும் மேற்கிலும் பலர் வந்து, ஆபிரகாம்….. ஆகியோருடன் விண்ணரசின் பந்தியில் அமர்வர்” என்கின்றார்.
யூதர்கள் விண்ணரசின் பந்தியில் தாங்கள் மட்டுமே இடம்பெறுவோம் என்று நினைத்துக் கொண்டிருந்தார்கள்; ஆனால், இயேசு நம்பிக்கை கொண்ட யாவரும், அது பிற இனத்தவராக இருந்தாலும், விண்ணரசின் பந்தியில் அமர்வர் என்கின்றார். இயேசுவின் வார்த்தைகள், விண்ணரசின் பந்தியில் அவர்மீது நம்பிக்கை கொண்ட எல்லாருக்கும் இடமுண்டு என்ற உண்மையை உணர்த்துகின்றன (எசா 49: 8-12, 59: 19; மலா 1:11; லூக் 13: 28,29).
எனவே, நாம் நூற்றுவத் தலைவரைப் போன்று இயேசுவின்மீது ஆழமான நம்பிக்கை கொண்டு விண்ணரசின் பந்தியில் பங்குபெறும் பேறு பெறுவோம்.
சிந்தனை
‘ஆண்டவரிடம் நம்பிக்கை கொள்’ (சீஞா 11: 21) என்கின்றது சீராக்கின் ஞான நூல். ஆகையால், நாம் ஆண்டவரிடம் நம்பிக்கை கொண்டு, இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
Source: New feed