
பொதுக்காலம் முப்பத்து மூன்றாம் வாரம் சனிக்கிழமை
லூக்கா 20: 27-40
“இனி அவர்கள் சாக முடியாது; வானதூதரைப் போல் இருப்பார்கள்”
நிகழ்வு
இளைஞன் ஒருவன் இருந்தான். இவனுக்குக் கடவுள்மீதும் நம்பிக்கை கிடையாது; இறப்புக்குப் பின் வாழ்வு உண்டு என்பதிலும் நம்பிக்கை கிடையாது. இத்தனைக்கும் இவனுடைய பெற்றோர் ஆண்டவர் இயேசுவின்மீது மிகுந்த பற்றுக் கொண்டவர்கள். உயிர்ப்பில் உறுதியான நம்பிக்கை கொண்டவர்கள். அப்படியிருந்தும் இவன், ‘இறப்போடு வாழ்க்கை முடிந்துவிடும்’ என்று இருந்தது இவனுடைய பெற்றோருக்கு மிகுந்த வியப்பைத் தந்தது.
தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்த இவன், ஒருநாள் பகலிலேயே வேலையை முடித்துக்கொண்டு வீட்டிற்குத் திரும்பி வந்தான். வீட்டில் இவனுடைய தாய் இருந்தார். அவரிடத்தில் இவன், “அம்மா! எனக்கு மிகவும் களைப்பாக இருக்கின்றது. அதனால் நான் தூங்கப் போகிறேன். நீங்கள் சாப்பாடு தயார் செய்ததும், என்னை எழுப்பிவிடுங்கள்; நான் சாப்பிட்டுக் கொள்கிறேன்” என்றான். இப்படிச் சொல்லிவிட்டு இவன் தன்னுடைய அறைக்குச் சென்றுப் படுத்துத் தூங்கிவிட்டான்.
சாப்பாடு தயாரானதும் இவனுடைய அம்மா இவனது அறைக்குச் சென்று, இவனை எழுப்பினார். இவன் எழும்பவில்லை. மீண்டுமாக அவர் இவனை எழுப்பிப் பார்த்தும் இவன் எழாதால் பதறிப் போனார். இதனால் அவர் தனக்குத் தெரிந்த மருத்துவரைத் தொடர்புகொண்டு, நடந்ததெல்லாம் அவரிடத்தில் சொல்லி, அவரைத் தன்னுடைய வீட்டிற்கு வரவழைத்தார். மருத்துவர் வந்து இவனைச் சோதித்துப் பார்த்தபொழுது, இவன் ஏற்கெனவே இறந்துவிட்டது தெரியவந்தது. இருந்தாலும் இதை வெளியே சொல்லாமல், “இன்னும் ஓரிரு மணிநேரம் பொறுத்திருந்து பாருங்கள். எப்படியும் திரும்ப எழுவான்” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து சென்றார் மருத்துவர்.
இதற்கு நடுவில் வெளியே சென்றிருந்த இளைஞனின் தந்தை வீட்டிற்கு வந்தார். அவர் தன் மகன் பேச்சு மூச்சற்றுக் கிடப்பதைக் கண்டு அதிர்ந்துபோய், தன் மனைவியோடு சேர்த்துகொண்டு அழத் தொடங்கினர். மாலை சரியாக ஐந்து மணி இருக்கும். செத்தவன் போல் கிடந்த இளைஞன், படுக்கையிலிருந்து எழுந்து உட்கார்ந்தான். பின்னர் அவன் தன் தாயைப் பார்த்து, “இறப்புக்குப் பிறகு வாழ்வு என்று நீங்கள் சொன்னபொழுது நான் நம்பவில்லை. சிறிது நேரத்திற்கு முன்பு நான் இறந்து விண்ணகத்திற்குச் சென்றபோதுதான் நீங்கள் சொன்னது உண்மையென நம்பித் தொடங்கினேன்” என்று சொல்லிவிட்டு அப்படியே படுக்கையில் விழுந்தான். விழுந்தவன் மீண்டும் எழவே இல்லை.
இவையெல்லாவற்றையும் கண்ணீர் மல்கப் பார்த்துக்கொண்டிருந்த இளைஞனின் தாய், தன் மகன் தன்னைவிட்டுப் பிரிந்துவிட்டானே என்று பக்கம் வருந்தினாலும், இன்னொரு பக்கம், அவன் கடவுள்மீதும் உயிர்ப்பின்மீதும் நம்பிக்கை கொண்டுவிட்டான் என்று ஆறுதல் அடைந்தார்.
ஆம், இந்த கதையில் வருகின்ற உயிர்ப்பின்மீது கொள்ளாத இளைஞன், பின்னர் உயிர்ப்பின்மீது நம்பிக்கை கொண்டான்; ஆனால், நற்செய்தியில் வருகின்ற உயிர்ப்பின்மீது நம்பிக்கை இல்லாத சதுசேயர்கள் உயிர்ப்பு தொடர்பான ஒரு கேள்வியைக் கேட்டு, இயேசுவைச் சிக்கலில் மாட்டிவிடத் துணிகின்றார்கள். இவர்களுக்கு இயேசுவின் பதில் என்னவாக இருக்கின்றது என்பதைக் குறித்து நாம் சிந்தித்துப் பார்ப்போம்.
உயிர்ப்பு பற்றிய கேள்வியோடு வரும் சதுசேயர்கள்
யூதச் சமூகத்தில் இருந்த சதுசேயர்களுக்கு உயிர்ப்பின்மீதோ, வானதூதர்களின்மீதோ நம்பிக்கை கிடையாது. இவர்கள் ஐந்நூல்களை மட்டுமே ஏற்றுக் கொண்டார்கள். இப்படிப்பட்டவர்கள் உயிர்ப்பு பற்றிய கேள்வியோடு இயேசுவிடம் வருகின்றார்கள். இவர்களுடைய நோக்கமெல்லாம் இயேசுவிடமிருந்து உயிர்ப்பு பற்றிய தெளிவைப் பெறவேண்டும் என்பதல்ல; மாறாக, அவரைச் சிக்கலில் மாட்டிவிட வேண்டும் என்பதாகவே இருந்தது.
உயிர்ப்பு பற்றி சான்று ஐநூலில் இருப்பதை இயேசு எடுத்துச் சொல்லுதல்
சதுசேயர்கள், உயிர்ப்பு பற்றிய சான்று ஐந்நூலில் இல்லை என்று நினைத்துக் கொண்டிருக்கையில், இயேசு அவர்களிடம் அவர்கள் நம்பி ஏற்றுக்கொண்ட விடுதலைப் பயண நூல் 3:6 இலிருந்தே பதில் தந்து, கடவுள் இறந்தோரின் கடவுள் அல்ல, வாழ்வோரின் கடவுள் என்று கூறுகின்றார். சதுசேயர்கள் உண்மையை அறிந்துகொள்ள இயலாத நிலையில் இருந்தபொழுது, இயேசு அவர்களிடம் அவர்கள் நம்பிய ஐந்நூலிலிருந்து பதிலளித்து, அவர்களுக்கு உண்மையை எடுத்துக் கூறுகின்றார்.
நாம் உண்மையை ஏற்றுக்கொள்ளும் திறந்த மனத்தவர்களாய் இருக்கின்றோமா? சிந்திப்போம்.
சிந்தனை
‘நாம் அவரோடு இறந்தால், அவரோடு வாழ்வோம்’ (2 திமொ 2: 11) என்பார் புனித பவுல். ஆகையால், நாம் பாவத்திற்கு அவரோடு இருந்து, அவரோடு வாழ்வோம்; உயிர்ப்பின்மீது நம்பிக்கை கொண்டவர்களாய், இயேசுவின் உயிர்ப்புக்குச் சாட்சிகளாய்த் திகழ்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
Source: New feed