
பொதுக்காலம் முப்பத்து மூன்றாவது வாரம் புதன்கிழமை
லூக்கா 19: 11-28
“உள்ளவர் எவருக்கும் கொடுக்கப்படும்”
நிகழ்வு
இங்கிலாந்து நாட்டைச் சார்ந்தவர் அந்தோனி பர்கெஸ் (Anthony Burgess 1917-1993). தன் மனைவி, மக்களோடு மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த இவருக்கு நாற்பதாவது வயதில், மூளையில் கட்டி (Brain tumour) இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இவரைப் பரிசோதித்துப் பார்த்த மருத்துவர்கள், “நீங்கள் இன்னும் ஓராண்டுதான் உயிர் வாழ்வீர்கள்” என்று சொல்லிவிட்டுச் சென்றார்கள்.
மருத்துவர்கள் சொல்லிவிட்டுப் போன இவ்வார்த்தைகள் இவருடைய உள்ளத்தில் பேரிடியாய் இறங்கின. ‘இன்னும் ஓராண்டுதான் நான் உயிர் வாழ்வேனா…! ஓராண்டிற்குப் பிறகு என்னுடைய குடும்பத்தை நான் அனாதையாய் விட்டுவிட்டுப் போய்விடுவேனா…! என்னுடைய குடும்பத்திற்கென்று நான் எதுவும் பெரிதாக சேர்த்து வைக்கவில்லையே…! எனக்குத் தெரிந்ததெல்லாம் சுமாராக எழுதுவதுதான். இதை வைத்துக்கொண்டு நான் என்ன செய்வேன்…?’ என்று யோசிக்கத் தொடங்கினார் இவர்.
அப்பொழுதுதான் இவருக்கு, ‘இறைவன் எனக்குக் கொடுத்திருக்கின்ற எழுத்தாற்றலைக் கொண்டு என்னுடைய குடும்பத்திற்கென்று இந்த ஓராண்டிற்குள் ஏன் பெரிதாக எதையாவது செய்துவிட்டுப் போகக்கூடாது…?’ என்ற எண்ணம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து இவர் மிகுந்த சிரத்தை எடுத்துக்கொண்டு எழுதத் தொடங்கினார். இதனால் இவரால் ஓராண்டிற்குள் ஐந்து முழு நாவல்களையும், ஒரு நாவலில் பாதியையும் எழுந்த முடிந்தது.
மருத்துவர்கள் குறிப்பிட்ட அந்த நாளும் வந்தது. ‘இந்த நாள்தான் நான் இந்தப் பூமியில் வாழக்கூடிய கடைசி நாள்!’ என்று இவர் நினைத்துக் கொண்டிருக்கையில், இவருக்கு இறப்பு நேரவில்லை; இவர் உயிரோடுதான் இருந்தார். இதன்பிறகு இவர் மருத்துவர்களை அழைத்துத் தன்னைச் சோதித்துப் பார்த்தபொழுது மூளையில் கட்டி இருந்ததற்கான எந்தவோர் அறிகுறியும் காணவில்லை. தன்னுடைய குடும்பத்திற்கு எதையாவது செய்துவிட்டுப் போகவேண்டும் என்று இவர் மிகுந்த சிரத்தை எடுத்துக்கொண்டு எழுதியதால், இவருடைய மூளையில் இருந்த கட்டியானது முற்றிலும் மறைந்து போனது. இதற்குப் பின்னர் இவர் இறக்கும்வரைக்கும் எழுபது நூல்களுக்கும் மேல் எழுதி, எழுத்துத் துறையில் மிகப் பெரிய சாதனை படைத்தார். இவருடைய எழுத்தில் உருவான மிக முக்கியமான படைப்பு தான் A Clockwork Orange’ என்பதாகும்.
இங்கிலாந்து நாட்டைச் சார்ந்த அந்தோனி பர்கெஸ் கடவுள் தனக்குக் கொடுத்திருந்த எழுத்தாற்றலைத் தனது நாற்பதாவது வயதில் பயன்படுத்தத் தொடங்கினார். இதனால் இவரால் தன்னுடைய சாவைத் தள்ளிப் போட முடிந்தது. மட்டுமல்லாமல், எழுபதுக்கும் மேற்பட்ட நூல்களை எழுத முடிந்தது.
ஆம், எவர் ஒருவர் கடவுள் தனக்குக் கொடுத்ததிற்கும் திறமையை அல்லது மினாவைச் சரியான முறையில் பயன்படுத்துகின்றாரோ, அது அவருக்கு மேலும் மேலும் கொடுக்கப்படும். அத்தகைய செய்தியைத்தான் இன்றைய நற்செய்தி வாசகம் நமக்கு எடுத்துக்கூறுகின்றது. அது குறித்து நாம் சிந்தித்துப் பார்ப்போம்.
உள்ளவர் எவருக்கும் கொடுக்கப்படும்
கி.மு. 4 ஆம் ஆண்டு பெரிய ஏரோதின் மகனாகிய அக்கிலஸ் (Archelaus), தன் தந்தையின் இறப்புக்குப் பின், நாட்டை ஆளுகின்ற பொறுப்பைத் தனக்குத் தரவேண்டும் என்று கேட்க உரோமை மன்னனிடம் சென்றான். அவன் அதை உரோமை மன்னனிடமிருந்து பெற்றுக்கொண்டு நாட்டிற்குத் திரும்பி வந்தபொழுது, மக்களில் பலர் அவனை ஏற்றுக்கொள்ளவில்லை. இந்தப் பின்னணில் இயேசு மினாவை உவமையைப் பற்றிப் பேசுகின்றார். இது மத்தேயு நற்செய்தியில் இடம்பெறும் தாலந்து உவமையை விடப் பல காரணங்களால் வித்தியாசப்படுகின்றது.
மினா உவமையில் வருகின்ற உயர்குடிமகன் ஆட்சியுரிமையைப் பெறத் தொலை நாட்டிற்குப் போகும்பொழுது, தன்னுடைய பணியாளர்களை அழைத்து, அவர்களுடைய திறமைக்கேற்ப முறையே, பத்து, ஐந்து, ஒரு மினாவைத் தருவார். பின்னர் அவர் ஆட்சியுரிமை பெற்றுத் திரும்பிவரும்பொழுது, தன் பணியாளர்களை அழைத்து அவர்களிடம் கணக்குக் கேட்பார். பத்து மினாக்களைப் பெற்றவர் மேலும் பத்து மினாக்களையும், ஐந்து மினாக்களைப் பெற்றவர் மேலும் ஐந்து மினாக்களையும் தருவார்கள். இதனால் அந்த உயர்குடிமகன் அவர்களை முறையே பத்து மற்றும் ஐந்து நகர்களுக்கு அறிகாரியாய் நியமிப்பார். ஆம், இந்த இரண்டு பணியாளர்களிடமும் தங்களிடம் கொடுக்கப்பட்ட மினாவை நல்லமுறையில் பயன்படுத்தவேண்மென்ற எண்ணம் இருந்தது. அதனால் அவர்கள் பத்து மற்றும் ஐந்து நகர்களுக்கு அதிகாரிகளாக நியமிக்கப்படுகின்றார்கள்.
இல்லாதோரிடமிருந்து உள்ளதும் எடுக்கப்படும்
முதல் இரண்டு பணியாளர்களிடமும், தங்களிடம் கொடுக்கப்பட்ட மினாக்களை நல்லமுறையில் பயன்படுத்தவேண்டும் என்ற எண்ணம் இருந்ததால், அவர்களுக்கு மேலும் கொடுக்கப்பட்டது; மூன்றாவது வந்த பணியாளரிடம் தனக்குக் கொடுக்கப்பட்ட மினாவை நல்லமுறையில் பயன்படுத்த வேண்டும் என்ற எண்ணம் இல்லை. அதனால் அவரிடம் இருந்ததும் எடுக்கப்பட்டது.
ஆம், கடவுள் நம்மிடம் கொடுத்த மினாவை, திறமையை நல்லமுறையில் பயபடுத்தவேண்டும் என்ற எண்ணம் இருக்கவேண்டும். எண்ணத்தோடு கடின உழைப்பும் இருக்கவேண்டும். இவையெல்லாம் இருந்தால் நம்மால் மேலும் மேலும் உயர்வடைய முடியும். எனவே, நாம் கடவுள் கொடுத்திருக்கும் திறமைகளை நல்லமுறையில் பயன்படுத்தி, கடவுளின் ஆசியை மேலும் மேலும் பெறுவோம்.
சிந்தனை
‘நம்முடைய கனவுகளையெல்லாம் நனவாக்குவதற்கான துணிவு நம்மிடத்தில் இருக்கும், நிச்சயம் ஒருநாள் நம்முடைய கனவுகள் எல்லாம் நனவாகும்’ என்பார் வால்ட் டிஸ்டினி. ஆகையால், கடவுள் நமக்குக் கொடுத்திருக்கும் மினாவை நல்லமுறையில் பயன்படுத்தி, இயேசு கண்ட இறையாட்சிக் கனவை நனவாக்குவோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
Source: New feed