பொதுக்காலம் முப்பத்து இரண்டாம் வாரம் செவ்வாய்க்கிழமை
லூக்கா 17: 7-10
உங்கள் கடமையைச் செய்துகொண்டே இருங்கள்!
நிகழ்வு
உலகெங்கும் ஆங்கிலேயர்களின் காலனியாதிக்கம் கோலோச்சியிருந்த நேரம் அது. இப்படிப்பட்ட சமயத்தில் ஒருநாள் நண்பகல் வேளையில், திடீரென்று கதிரவன் மறையத் தொடங்கியது. இதனால் எங்கும் இருள் சூழத் தொடங்கியது.
இக்காட்சியைக் கண்டு பலரும், “உலகம் இத்தோடு அழியப் போகிறது” என்று புலம்பத் தொடங்கினர்; இன்னும் ஒருசிலர் செய்வதறியாது திகைத்து நின்றனர். அப்பொழுது ஓர் அலுவலத்தில் வேலை செய்துகொண்டிருந்த மிகவும் கடமையுணர்வு உள்ள ஒருவர், தன்னோடு வேலை பார்த்துக்கொண்டிருந்த ஒருவரிடம், “இந்த உலகம் இன்றோடு அழியப்போகிறதோ? இல்லையோ? எனக்குத் தெரியவில்லை. ஒருவேளை இந்த உலகம் இன்றோடு அழியப்போகிறது எனில், நான் என்னுடைய கடமையை – வேலையை – செய்துகொண்டிருக்கும்பொழுது இந்த உலகம் அழிந்தது என்பதாக இருக்கட்டும்” என்று சொல்லிவிட்டு, எங்கும் இருள்படர்ந்திருந்த அந்த அறையில் ஒரு மெழுகுதிரியை ஏற்றிவைத்துக் கொண்டு, தன் கடமையைச் செய்யத் தொடங்கினார் அந்த மனிதர் (The Speaker’s Quote Book – Roy B. Zuck)
உலகமே அழியப்போகிறது என்று எல்லாரும் அஞ்சிக்கொண்டிருந்த சூழலில், குறிப்பிட்ட அந்த மனிதர் மட்டும் ‘என் கடன் பணிசெய்து கிடப்பது’ என்ற சிந்தனையோடு தன்னுடைய கடமையைச் செய்துகொண்டிருந்தது நம்முடைய கவனத்திற்குரியதாக இருக்கின்றது. நற்செய்தியில் ஆண்டவர் இயேசு, பலனையோ பாராட்டையோ எதிர்பாராமல் நம்முடைய கடமையைச் செய்யவேண்டும் என்ற செய்தியை எடுத்துச் சொல்கின்றார். அது குறித்து நாம் சிந்தித்துப் பார்ப்போம்.
எதையும் பலனையும் பாராட்டையும் எதிர்பார்த்துச் சொல்லும் உலகம்
மாவீரன் நெப்போலியன் சொன்ன ஒரு செய்தி மிகுந்த அதிர்வலையை மிகுந்த ஏற்படுத்தியது. அவன் சொன்ன செய்தி இதுதான்: “வண்ண ரிப்பனின் ஒரு சிறிய துண்டுக்காக வீரர்கள் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் போராடத் தயாராக இருப்பார்கள்.”
இராணுவத்தில் வண்ண ரிப்பனின் ஒரு துண்டு என்பது, ஒருவர் செய்த வீரதீரச் செயலுக்காகக் கொடுக்கப்படக்கூடியது. இந்த வண்ண ரிப்பனின் ஒரு துண்டை அங்கிகாரம், பாராட்டு ஆகியவற்றோடு தொடர்பு படுத்திக்கொள்ளலாம். ஆம், ஒருவருடைய பாராட்டை அல்லது அங்கீகாரத்தைப் பெறுவதற்காக மக்கள் எதையும் செய்வார்கள் என்பதைத்தான் மாவீரன் நெப்போலியன் அப்படிக் கூறினான். மாவீரன் நெப்போலியன் சொன்ன வார்த்தைகள் முற்றிலும் உண்மை என்றுதான் சொல்லவேண்டும். ஏனென்றால் இன்றைக்குப் பலர் எந்தவொரு செயலைச் செய்தாலும் அதில் பெயர் கிடைக்குமா…? பாராட்டுக் கிடைக்குமா…? அங்கீகாரம் கிடைக்குமா…? என்றுதான் செய்துகொண்டிருக்கின்றார்கள் (ஒருசில விதிவிலக்குகள் இருக்கலாம்); ஆனாலும் எதையும் பாராட்டிற்காகவும் அங்கீகாரத்திற்காகவும் செய்யக்கூடிய மக்கள் பெருகிவிட்டார்கள் என்பதுதான் வேதனை கலந்த உண்மை.
இத்தகைய சூழ்நிலயியில் ஆண்டவர் இயேசு இந்த உலகப்போக்கிற்கு முற்றிலும் மாறுபட்ட ஒரு கருத்தைக் கூறுகின்றார். அது குறித்து நாம் தொடர்ந்து சிந்தித்துப் பார்ப்போம்.
பலனையும் பாராட்டையும் எதிர்பாராமல் நம்முடைய கடமையைச் செய்வோம்!
பொதுவாக ஒருவர் இன்னொருவரிடம் சாதாரண ஒரு பணியாளராய்ப் பணிசெய்து கொண்டிருக்கின்றார் எனில், அவர் செய்த பணிக்காகத் தலைவர் அவரைப் பாராட்டுவதுமில்லை; அவருக்குப் பணிவிடை செய்வதுமில்லை. மாறாக, அந்தப் பணியாளரிடம் தலைவர் மேலும் மேலும் வேலையைத்தான் வாங்குவார். இந்த அடிப்படை உண்மையை எடுத்துக்கொண்டு பேசும் இயேசு, “நீங்கள் உங்களுக்குப் பணிக்கப்பட்ட யாவற்றையும் செய்த பின், ‘நாங்கள் பயனற்ற பணியாளர்கள் எங்கள் கடமையைத்தான் செய்தோம்’ எனச் சொல்லுங்கள்” என்கின்றார்.
இயேசு சொல்லக்கூடிய இந்த வார்த்தைகளை கடவுளுக்கும் நமக்கும் உள்ள உறவோடு ஒப்பிட்டுச் சிந்தித்துப் பார்க்கலாம். இயேசு சொல்லக்கூடிய உவமையில் வரும் தலைவர்தான் கடவுள், பணியாளர்தான் நாம் என்று வைத்துக்கொண்டோம் எனில், நமது கடமை அவருக்குப் பணிவிடை செய்வதுதான். நாம் அவருக்குச் செய்யும் பணிவிடைக்காக, வேலைக்காக அவரிடமிருந்து நன்றியையோ, பாராட்டையோ எதிர்பார்க்கக்கூடாது. ஏனெனில், அவர் நமக்கு ஏராளமான நன்மைகளைச் செய்திருக்கின்றார். நாம் அவருக்குச் செய்யும் பணிவிடையெல்லாம் கடுகளவுதான். அதனால் நாம் இயேசு சொல்வதுபோல், செய்யும் பணிக்காக எந்தவொரு பாராட்டையும் எதிர்பாராமல், “நாங்கள் பயனற்ற பணியாளர்கள்; எங்கள் கடமையைத்தான் செய்தோம்” என்ற உணர்வோடு செய்து, இயேசுவின் உண்மையான சீடர்களாவோம்
சிந்தனை
‘நன்மை செய்வதில் நீங்கள் மனந்தளர வேண்டாம்’ (1 தெச 3: 13) என்பார் புனித பவுல். ஆகையால், நாம் அடுத்தவருடைய பாராட்டிற்காகவோ, புகழுக்காகவோ எதையும் செய்யாமல், நன்மை செய்வது நம்முடைய கடமை என்ற உணர்வோடு, மனந்தளராமல் நன்மை செய்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
Source: New feed