
திருவருகைக் காலம் முதலாம் வாரம் செவ்வாய்க்கிழமை
லூக்கா 10: 21-24
“நீங்கள் காண்பவற்றைக் காணும் வாய்ப்புப் பெற்றோர் பேறுபெற்றோர்”
நிகழ்வு
அந்தோனி டிமெல்லோ சொல்லக்கூடிய நிகழ்வு இது.
துறவி ஒருவர் இருந்தார். ஒருநாள் அவரிடம் வந்த மெத்தப் இளைஞன் ஒருவன், “சுவாமி! நான் கடவுளைப் பார்க்கவேண்டும்?” என்றான். “இப்பொழுது நீ அவரைப் பார்த்துக்கொண்டுதானே இருக்கின்றாய்!” என்றார் துறவி.
“இப்பொழுது நான் கடவுளைப் பார்த்துக் கொண்டிருக்கின்றேனா…? இல்லை இல்லை. என்னால் ஏன் அவரைப் பார்க்க முடியவில்லை. என் கண்கள் அவரைக் காண வில்லை” என்று ஆதங்கத்தோடு சொன்னான் இளைஞன். அதற்குத் துறவி அவனிடம், “மக்கள் தன்னைக் காணுமாறு கடவுள் தன்னை ஒவ்வொருநாளும் வெளிப்படுத்திக் கொண்டுதான் இருக்கின்றார்; ஆனால், சாதாரண விளக்கொளி எப்படி நிலவொளியை வீட்டிற்குள் வரவிடாமல் தடுத்துக்கொண்டிருக்கின்றதோ, அப்படி உன்னிடத்தில் இருக்கின்ற ‘எல்லாம் எனக்குத் தெரியும் என்ற ஆணவம்’ கடவுளை நீ காணவிடாமல் தடுத்துக் கொண்டிருக்கின்றது. முதலில் ஆணவத்தை உன்னிடமிருந்து அகற்று, பிறகு கடவுளை உன்னால் எளிதாகக் காணலாம்” என்றார்.
ஆம், இந்த இளைஞனிடத்தில் இருந்த ஆணவம் எப்படிக் கடவுளைக் காணவிடாமல் தடுத்ததோ, அப்படி நம்மிடம் உள்ள ஆணவம், செருக்கு, தலைக்கனம் போன்ற மாசுகள் நம்மைக் கடவுளைக் காணவிடாமல் தடுத்துக் கொண்டிருக்கின்றன. என்றைக்கு நாம் இந்த மாசுகளை நம்மிடமிருந்து அகற்றுகின்றோமோ, அன்றைக்கு நம்மால் கடவுளை மிக எளிதாகக் காண முடியும் என்பது உறுதி. இன்றைய நற்செய்தியில் இயேசு, “நீங்கள் காண்பவற்றைக் காணும் வாய்ப்புப் பெற்றோர் பேறுபெற்றோர்” என்கின்றார். இயேசு சொல்லக்கூடிய இந்த வார்த்தைகளின் பொருள் என்ன என்று சிந்தித்துப் பார்ப்போம்.
இறைஞானம் குழந்தைகளுக்கு வெளிப்படுத்தப்படல்
இன்றைய நற்செய்தி வாசகம், இயேசு எழுபத்து இரண்டு சீடர்களைப் பணித்தளங்களுக்கு அனுப்ப, அவர்கள் பணித்தளங்களுக்குச் சென்று திரும்பி வருகின்றபொழுது அவர்களிடம் அவர் பேசக்கூடிய வார்த்தைகளாக இருக்கின்றன. மேலும் இன்றைய நற்செய்தி வாசகம் இரண்டு பகுதிகளைக் கொண்டிருகின்றன. முதற்பகுதி இயேசு, ஞானத்தைக் குழந்தைகளுக்கு வெளிப்படுத்தியதற்காகத் தந்தைக் கடவுளைப் போற்றுவது பற்றியதாகவும், இரண்டாவது பகுதி, தன்னைக் காணும் பேறு சீடர்களுக்குக் கிடைத்தற்காக அவர்களைப் பேறுபெற்றவர்கள் என்று சொல்வது பற்றியதாகவும் இருக்கின்றது. இந்த இரண்டு பகுதிகளையும் குறித்து நாம் சற்று விரிவாகச் சிந்தித்துப் பார்ப்போம்.
இயேசுவின் காலத்தில் வாழ்ந்த பரிசேயர்கள், மறைநூல் அறிஞர்கள் மற்றும் திருச்சட்ட அறிஞர்கள் எல்லாம் தங்களுக்குத்தான் தெரியும்; மற்றவர்களுக்கு ஒன்றும் தெரியாது என்ற செருக்கோடு இருந்தார்கள். மேலும் இவர்கள் அறிவுக் களஞ்சியத்தின் திறவுகோலை எடுத்துக் கொண்டார்கள். இதனாலேயே இயேசு திருச்சட்ட அறிஞர்களைப் பார்த்து, “ஐயோ! திருச்சட்ட அறிஞரே! உங்களுக்குக் கேடு. ஏனெனில், அறிவுக் களஞ்சியத்தின் திறவுகோலை நீங்கள் எடுத்துக்கொண்டீர்கள்…..” (லூக் 11: 52) என்று சாடுகின்றார். இத்தகைய பின்னணியில் இயேசு தூய ஆவியாரால் பேருவகையடைந்து, “தந்தையே, விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆண்டவரே, உம்மைப் போற்றுகிறேன். ஏனெனில், ஞானிகளுக்கும் அறிஞர்களுக்கும் இவற்றைக் குழந்தைகளுக்கு வெளிப்படுத்தினீர்” என்கின்றார்.
ஆம், தங்களுக்கு எல்லாமும் தெரியும் என்று ஞானிகளும் அறிஞர்களும் நினைத்துக்கொண்டிருந்த பொழுது, கடவுள் ஞானத்தை அவர்களுக்கு மறைத்துக் குழந்தைகளுக்கு வெளிப்படுத்துகின்றார் (மத் 13: 11). இதற்காக இயேசு கடவுளைப் போற்றுகின்றார்.
இயேசுவைக் காணும் பேறுபெற்ற அவருடைய சீடர்கள்
மெசியாவாம் இயேசுவின் வருகையைப் பற்றி, பல நூறு ஆண்டுகளுக்கு முன்பாகவே இறைவாக்கினர்கள் முன்னறிவித்தார்கள். இதனால் அவரைக் காண்பதற்கு அரசர்களிலிருந்து சாதாரண மக்களை வரை ஏங்கினார்கள்; ஆனால், அவர்களால் இயேசுவைக் காண முடியவில்லை. மேலும் அவரைக் காணும் பேறு அவர்களுக்குக் கிடைக்கவில்லை. இப்படியிருக்கையில் இயேசுவின் சீடர்களுக்கு அந்த வாய்ப்புக் கிடைத்தது. அதனால்தான் இயேசு “பல இறைவாக்கினர்களும் அரசர்களும் நீங்கள் காண்பவற்றைக் காண விரும்பினர். ஆனால், அவர்கள் காணவில்லை…” என்கின்றார்.
சீடர்களுக்கு இயேசுவைக் காணக்கூடிய பேறு கிடைத்து என்றால், அவர்கள் எளிய மனத்தவராக இருந்தார்கள். நாமும் சீடர்களைப் போன்று எளிய மனத்தவராக, தாழ்ச்சி நிறைந்த உள்ளத்தினராக இருந்தோமெனில், அவரைக் காணும் பேற்றினைப் பெறுவோம் என்பது உறுதி. நாம் நம்முடைய அன்றாட வாழ்க்கையில் எளியவர்களாக, தாழ்ச்சியுள்ளவர்களாக இருக்கின்றோமா? சிந்திப்போம்.
சிந்தனை
‘தூய்மையான உள்ளத்தோர் பேறுபெற்றோர்; ஏனெனில், அவர்கள் கடவுளைக் காண்பர்’ (மத் 5:8) என்பார் இயேசு. ஆகையால், நாம் எளியவர்களாக, தூய்மையான உள்ளத்தினராக வாழ்ந்து, கடவுளைக் காணும் பேறு பெறுவோம்; அதன்மூலம் இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
Source: New feed