
உடைகளை அல்ல, உள்ளத்தைக் கிழித்துக் கொள்ளுங்கள்
திரும்பி வர முடியாத இடம்
அமெரிக்காலிருந்து அட்லாண்டிக் கடலுக்குள் போகிற வழியில், சரியாக இரண்டாயிரம் மைலுக்கு அப்பால் ஓர் இடம் இருக்கின்றது. அந்த இடத்திற்குள் சென்று எந்தவொரு மனிதரோ, கப்பலோ, ஏன் வானூர்திகூட திரும்பிவந்த வரலாறு இல்லை. அது ஏன்? என்ற காரணத்தை இதுவரைக்கும் யாராலும் அறிந்துகொள்ள முடியவில்லை. இந்நிலையில், டிரான்ஸ்-ஓசியன் ஏர்லைன்ஸ் விமானிகள் குறிப்பிட்ட அந்த இடத்தை ஒரு சிகப்புக் கோட்டினால் வரையறுத்து, அந்த இடத்திற்குப் ‘திரும்பி வர முடியாத இடம்’ என்று பெயர் வைத்திருக்கிறார்கள். இதில் வேடிக்கை என்னவென்றால், திரும்பி வர முடியாத இடம் என்று விமானிகள் சிகப்புக் கோட்டினால் வரையறுத்த பின்பும், இன்னும் ஒருசில கப்பல்கள், வானூர்திகள் அந்த இடத்திற்குள் சென்று, திரும்பி வரமுடியாதவாறு இருக்கின்றன.
மனிதர்கள்கூட ‘திரும்பி வர முடியாதவாறு’ இருக்கின்ற சிற்றின்ப நாட்டங்கள், போதை, குடி, தலையாய பாவங்கள் என்று திரு அவை கூறுகின்ற ஆணவம், கோபம், பேராசை, பொறாமை, கட்டுப்பாடற்ற பாலுணர்வு, பெருந்தீனி, சிலைவழிபாடு போன்ற பாவங்களுக்குள் சிக்கி, வாழ்வையே தொலைத்துக் கொண்டிருக்கின்றார்கள். இத்தகைய சூழ்நிலையில்தான், நாம் திரும்பிவந்து ஆண்டவரோடு ஐக்கியமாக வேண்டும் என்பதற்காகத் திருஅவை இந்தத் தவக்காலத்தைக் கொடுத்திருக்கின்றது. இவ்வேளையில், ஆண்டவரிடம் திரும்பி வருவதற்கு, இன்றைய நாளில் நாம் படிக்கக்கேட்ட இறைவார்த்தை என்ன சொல்கின்றது என்று சிந்தித்துப் பார்ப்போம்.
முழு இதயத்தோடு ஆண்டவரிடம் திரும்பி வாருங்கள்
இறைவாக்கினர் யோவேல் புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய வாசகத்திலிருந்து, ஒவ்வொருவருக்கும் தரப்படுகின்ற அழைப்புதான் ‘முழு இதயத்தோடு ஆண்டவரிம் திரும்பி வாருங்கள்’ என்பதாகும். இந்த அழைப்பு கி.மு. 835 லிருந்து 796 வரையிலான காலகட்டத்தில், இறைவாக்குப் பணியைச் செய்துவந்த இறைவாக்கினர் யோவேல், ஆண்டவரின் வருகைக்காக இஸ்ரயேல் மக்கள் தங்களைத் தயார் செய்யவேண்டும் என்பதற்காக கொடுக்கப்பட்ட அழைப்பாக இருந்தாலும், அது நமக்குக் கொடுக்கப்பட்ட அழைப்பாக இருகின்றது.
முழு இதயத்தோடு ஆண்டவரிடம் திரும்பி வருவது என்பது, வழிபாட்டுக் கூட்டங்களில் கலந்துகொள்வதோ, உடைகளைக் கிழித்துக்கொண்டு, சாக்கு உடை உடுத்தி, சாம்பலில் உட்கார்வதோ அல்லது அழுது புரள்வதோ (மத் 15: 8-9) அல்ல. மாறாக, குற்றத்தை உணர்ந்து, நெருங்கிய இதயத்தோடு (திபா 51:17) ஆண்டவரிடம் வருவது. அதுதான் முழு இதயத்தோடு ஆண்டவரிடம் திரும்பி வருவதாகும். இன்னும் சொல்லப்போனால் ஆண்டவராகிய கடவுள் ஒவ்வொருவரிடமிருந்தும் எதிர்பார்ப்பது வெளிப்புற மாற்றத்தை அல்ல, உட்புற மாற்றத்தை. அத்தகைய மாற்றம்தான் ஆண்டவருக்கு உவப்புடையதாகும்.
நாம் ஏன் ஆண்டவரிடம் முழு இதயத்தோடு திரும்பி வரவேண்டும்?
ஒருசிலர் கேட்கலாம், நான் ஏன் ஆண்டவரிடம் முழு இதயத்தோடு திரும்பி வரவேண்டும் என்று. அதற்கு மூன்று முக்கியமான காரணங்கள் இருக்கின்றன. அவற்றை ஒவ்வொன்றாக இப்போது பார்போம்.
1. நாம் அவருடைய மக்கள்
நாம் ஆண்டவருடைய மக்கள், அவர் நம்முடைய (விண்ணகத்) தந்தை (எரேமியா 7:23) அதனால் நாம் அவரிடம் முழு இதயத்தோடு திரும்பி வரவேண்டும். இன்றைய முதல் வாசகத்தின் இறுதியில்கூட தன் மக்கள் மீது கருணைகாட்டினார் என்ற வாசிக்கின்றோம் (யோவே 2:18) ஆகையால், நாம் ஆண்டவரின் மக்கள் என்ற காரணத்திற்காக அவரிடம் திரும்பி வரவேண்டும்.
2. கடவுள் அருளாளவராகவும் அன்பானவராகவும் இருக்கிறார்
கடவுள் அருள் நிறைந்தவர், இரக்கம் மிக்கவர், நீடிய பொறுமையுள்ளவர், பேரன்பு மிக்கவர்… இதனாலும் நாம் ஆண்டவரிடம் முழு இதயத்தோடு திரும்பி வரவேண்டும். இவ்வுலகத்தில் யாரும் அருள் நிறைந்தவராக, இரக்கமிக்கவராக, பேரன்பு கொண்டவராக இருக்கின்றார்களா? என்று தெரியவில்லை. ஆனால், கடவுள் இருக்கின்றார். கடவுளின் இத்தகைய பண்புகள் விவிலியம் முழுமைக்கும் சொல்லப்பட்டிருக்கின்றது (விப 34: 6-7; எண்14:18; நெகே 9:17; திபா 86:1, 103:8. 145:8; யோனா 4:2). ஆகையால், கடவுளின் மக்களாகிய நாம் ஒவ்வொருவரும் அவருடைய பண்புகளை உணர்ந்து, அவரிடம் திரும்பி வருவது தேவையான ஒன்று.
இங்கு இன்னொரு கேள்வி எழலாம். ‘கடவுள் அருள்நிறைந்தவராக, பேரன்பு கொண்டவராக இருக்கின்றாரே, அது எப்படி?’ என்பதுதான் அந்தக் கேள்வி. இப்படித்தான் இளைஞர் ஒருவர் ஒரு துறவியிடம் சென்று, “கடவுளை அருளாளனாகவும் அன்பாளனாகவும் சொல்கிறார்களே?… அது எப்படி?” என்று கேட்டார். “இவ்வுலகத்தில், தன்னை அன்பு செய்பவரை மட்டுமல்லாது, வெறுப்பவரையும் அன்பு செய்வதால் அவர் அருளாளனாக இருக்கின்றார். மறுவுலகில் அப்படியில்லை, அவர் தன்னை அன்பு செய்பவரை மட்டும் அன்பு அன்புசெய்வதால் அன்பாளனாக இருக்கிறார்” என்றார் துறவி. எனவே, தன்னை அன்பு செய்பவரை மட்டுமல்லாது, வெறுப்பவரையும் அன்பு செய்யும் அருளாளனாக விளங்கும் ஆண்டவரிடம், அவருடைய மக்கள் ஒவ்வொருவரும் முழு இதயத்தோடு திரும்பி வருவது மிகவும் இன்றியமையாதது.
3. இதுவே தகுந்த காலம்
ஆண்டவரிடம் முழு இதயத்தோடு திரும்பி வர மிக முக்கியமான காரணம், இது தகுந்த காலமாகவும் இன்றே மீட்பு நாளாகவும் இருக்கின்றது என்பதால். இயேசு தன்னுடைய பணிவாழ்வைத் தொடங்கும்போது, “காலம் நிறைவேறிவிட்டது. இறையாட்சி நெருங்கி வந்து விட்டது; மனம்மாறி நற்செய்தியை நம்புங்கள்” (மாற் 1: 15) என்று சொல்லித்தான் தொடங்கினார். இயேசு சொல்லக்கூடிய இவ்வார்த்தைகளும் தூய பவுலின் வார்த்தைகளும் ஒருசேர இணைத்துப் பார்த்தோமெனில், நாம் ஆண்டவரிடம் திரும்பி வருவதற்கும் இறையாட்சியின் வருகைக்கும் இந்த நாளை விட்டால், வேறு பொன்னான நாளில்லை என்பது உறுதியாகின்றது. ஆகவே, இதுவே தகுந்த காலம், இன்றே மீட்பு நாள் என்று உணர்ந்து, முழு இதயத்தோடு ஆண்டவரிடம் திரும்பி வருவது நல்லது.
ஆண்டவரிடம் திரும்பி வருவதை செயலில் எப்படி வெளிப்படுத்துவது?
ஆண்டவரிடம் திரும்பி வருதல் என்றால் என்ன? ஏன் நாம் திரும்பி வரவேண்டும்? என்று இதுவரைக்கும் சிந்தித்துப் பார்த்தோம். இப்போது நாம் ஆண்டவரிடம் திரும்பி வருவதை எப்படி செயல்வடிவில் வெளிப்படுத்த போகின்றோம் என்று சிந்தித்துப் பார்ப்போம்.
மத்தேயு எழுதிய நற்செய்தி நூலிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய நற்செய்தியில், இயேசு மூன்று முதன்மையான காரியங்களைக் குறித்துப் பேசுகின்றார். நோன்பிருத்தல், அறம் செய்தல் அல்லது தர்மம் செய்தல், இறைவேண்டல் செய்தல் என்பதுதான் அந்த மூன்று முதன்மையான காரியங்கள். இவற்றின் மூலமாக ஒருவர் தன்னையும் பிறரையும் கடவுளையும் அன்பு செய்து, அவரிடம் முழு இதயத்தோடு திரும்பி வரலாம்.
ஒருவர் பிறரை அன்பு செய்யாமல், அந்த அன்பின் வெளிப்பாடாக அறம் செய்யாமல், ஆண்டவரை அன்பு செய்வதோ அல்லது அவரிடம் முழு இதயத்தோடு திரும்பி வருவதோ இயலாத காரியம். ஆகையால், இந்தத் தவக்காலத்தில் அறச் செயல்கள் செய்வதற்கு – அது பெரிதோ, சிறிதோ – தயாராக இருக்கவேண்டும். அப்போதுதான் ஆண்டவரை அன்பு செய்ய முடியும். அவரிடம் திரும்பி வரவும் முடியும்.
ஒரு தேனீர் கடையில், “எனக்கு ஒரு காபி, குட்டிச்சுவருக்கு ஒரு காபி” என்ற குரல் கேட்டு, அங்கு தேனீர் அருந்திக்கொண்டிருந்த இளைஞன் ஒருவன் திரும்பிப் பார்த்தான். அவன் திரும்பிப் பார்த்த இடத்தில் இருந்த ஒருவர், ஒரு காபி பருகிவிட்டு, கடைக்காரரிடம் இரண்டு காப்பிக்குப் பணம் கொடுத்துப் புறப்பட்டார். இப்படிப் பலரும் செய்ததைக் கண்ட இளைஞன், யாரைக் “குட்டிச்சுவர்” என்கிறார்கள் என்று கண்களைச் சுழலவிட்டான். அந்த தேனீர்க் கடையருகே இருந்த குட்டிச்சுவர் பக்கத்தில், உடம்புக்கு முடியாமல் ஒருசிலர் இருந்தார்கள். அவர்களுக்கும் மேசை. நாற்காலிகள் இருந்தன. அவர்களுக்கான காபிக்குத்தான் இவர்கள் பணம் தருகிறார்கள் என்பது அவனுக்குப் புரிந்தது. உடனே அவனும் அவ்வாறு செய்துவிட்டு அங்கிருந்து கிளம்பினான்.
தேவையில் உள்ள மனிதருக்கு உதவி செய்ய நினைத்தால் அல்லது ஆறாம் செய்ய நினைத்தால் எப்படியும் செய்யலாம். அதைத்தான் இந்த நிகழ்வு எடுத்துக் கூறுகின்றது. ஆகையால், தவக்காலத்தைத் தொடங்கி இருக்கும் நாம், நோன்பின் வழியாகவும் இறைவேண்டல் வழியாகவும் நம்மையும் கடவுளையும் அன்பு செய்யும் அதே அளவுக்கு, அறச் செயல்கள் வழியாக அடுத்தவரை அன்பு செய்வோம். அதன்வழியாக ஆண்டவரிடம் திரும்பி வருவதை அர்த்தமுள்ளதாக்குவோம்.
சிந்தனை
இன்றைய நாளில் நம் நெற்றியில் குருவானவரால் பூசப்படும் சாம்பல், நாம் ஒருநாள் மண்ணுக்குத் திரும்புவோம் என்பதை உணர்த்துகின்றது. நாம் மண்ணுக்குள் போவதற்குள் நம்முடைய மண்ணுலக வாழ்வை, நாம் செய்யும் இரக்கச் செயல்களால் அழகாக்குவோம். அதற்கு ஒரு வாய்ப்பாக இந்த தவக்காலத்தைப் பயன்படுத்துவோம். இவ்வாறு நாம் இறையருள் நிறைவாய்ப் பெறுவோம்.
Source: New feed