“என்னை ஆவலோடு தேடுகின்றவர்கள் என்னைக் கண்டுபிடிப்பார்கள்”
நிகழ்வு
ஓரூரில் சோம்பேறி ஒருவன் இருந்தான். அவன் தன்னுடைய சோம்பலால் வறுமையில் வாடத் தொடங்கினான். இதற்கிடையில் அவனுடைய ஊருக்கு ஒரு மகான் வந்தார். அவரைச் சந்தித்த சோம்பேறி, தனது வறுமையைப் போக்கும்படி வேண்டினான். மகான் அவனுடைய சோம்பேறித்தனத்தை உணர்ந்தவராய், ஒரு கதைமூலம் அவனுக்குப் பாடம் கற்றுக்கொடுக்க விரும்பினார். அவர் அவனுக்குச் சொன்ன கதை:
காட்டில் ஒரு மரங்கொத்திப் பறவை இருந்தது. அது தன் கூரிய அலகால் ‘டொக் டொக்’ கென்று மரத்தைக் கொத்திக்கொண்டே இருந்தது. அதைப் பார்த்த ஒரு மனிதன், “ஏய் மூடப் பறவையே! எதற்காக இப்படி மரம் முழுவதையும் கொத்திக்கொண்டிருக்கிறாய்? இது வீண் வேலையல்லவா?” என்று கேட்டான். அதற்கு அந்தப் பறவை, “மனிதனே நான் என் உணவைத் தேடுகிறேன். தேடினால் கிடைக்கும்” என்றது. அவன் அந்த மரங்கொத்திப் பறவையைப் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, அது தொடர்ந்து மரத்தைக் கொத்தி, மரத்தில் ஓட்டை போட்டு, அதற்குள் பதுங்கியிருந்த புழுக்களை எடுத்து உண்ணத் தொடங்கியது.
தனது உணவைச் சாப்பிட்டு முடித்தபிறகு, மரங்கொத்திப் பறவை அந்த மனிதனைப் பார்த்து, “மனிதனே! நீயும் தேடு… மரத்திலும் மண்ணிலும் நீரிலும் ஏன் எல்லா இடங்களிலும் தேடு. உனக்கும் ஏதாவது கிடைக்கும்” என்றது. கதையைச் சொல்லி முடித்த மகான் சோம்பேறியிடம், “நீயும் இந்தப் பரந்த உலகத்தில் தேடு… உனக்கும் ஏதாவது கிடைக்கும்… சோம்பேறியாக இருந்தால் வறுமைதான் கிட்டும்” என்றார்.
தேடுவோர் நிச்சயம் கண்டடைவர் என்ற உண்மையை எடுத்துச் சொல்லும் இந்நிகழ்வு நமது சிந்தனைக்குரியது. நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசுவைத் தொடர்ந்து தேடிக் கண்டடைந்த ஒருவரைக் குறித்து வாசிக்கின்றோம். அவர் யார்? அவருடைய தேடல் எப்படிப்பட்டதாக இருந்தது? என்பதை இப்பொழுது சிந்தித்துப் பார்த்து நம்முடைய வாழ்விற்காக பாடத்தை எடுத்துக் கொள்வோம்.
ஆண்டவரை முழுமனதோடு தேடிய மகதலா மரியா
வாரத்தின் முதல் நாள், விடியற்காலை வேளையில் இயேசு அடக்கம் செய்துவைக்கப்பட்டிருந்த கல்லறைக்கு வரும் மகதலா மரியா, கல்லறையை மூடியிருந்த கல் அகற்றப்பட்டிருப்பதைக் கண்டு பதறிப்போய், செய்தியை பேதுருவிடமும் யோவானிடமும் சொல்ல, அவர்கள் விரைந்து வந்து கல்லறையைப் பார்த்துவிட்டுச் செல்கின்றார்கள். ஆனால், மகதலா மரியா மட்டும் அங்கேயே இருந்து, “என் ஆண்டவரை எடுத்துக்கொண்டு போய்விட்டனர்; அவரை எங்கே வைத்தனரோ எனக்குத் தெரியவில்லை” என்று அழுதுகொண்டிருக்கின்றார்.
மகதலா மரியா இயேசுவின்மீது தனிப்பட்ட அன்பு கொண்டிருந்தார் என்றால் அது மிகையாகாது. அவர் இயேசு சிலுவையில் தொங்கிக்கொண்டிருந்தபோது கடைசிவரைக்கும் இருந்தவர். மட்டுமல்லாமல், மற்ற எல்லாச் சீடர்களை விடவும் அவர்தான் இயேசுவின் கல்லறைக்கு முதலில் வருகின்றார். இப்படிப்பட்ட அளவுகடந்த அன்புகொண்டிருந்த மகதலா மரியாவுக்கு உயிர்த்த ஆண்டவர் இயேசு தன்னை முதன்முறையாக வெளிப்படுத்துகின்றார். மகதலா மரியாவின் இச்செயல், “என்னை ஆவலோடு தேடுகிறவர்கள் என்னைக் கண்டுபிடிப்பார்கள்” (நீமொ 8:17) என்ற இறைவார்த்தையை நினைவுபடுத்துகின்றது. நாமும் ஆண்டவரை ஆவலோடு தேடினால் நிச்சயம் கண்டுகொள்வோம் என்பது உறுதி.
மகதலா மரியாவால் இயேசுவை ஏன் முதலில் அறிந்துகொள்ளமுடியவில்லை?
மகதலா மரியா, இயேசு அங்கு நின்றுகொண்டிருக்கின்றார் என்று தெரிந்தும் அவரால் அடையாளம் கண்டுகொள்ள முடியவில்லை. இதற்கு மூன்று காரணங்கள் இருப்பதாக விவிலிய அறிஞர்கள் கூறுகிறார்கள். ஒன்று. இயேசு தன்னை மகதலா மரியாவுக்கு வெளிப்படுத்தவில்லை. எப்படி எம்மாவு சீடர்களுக்கு இயேசு தன்னை மறைத்துக்கொண்டாரோ, அதுபோன்று மகதலா மரியாவுத் தன்னை மறைத்துக்கொண்டார் (லூக் 24: 13-35). இரண்டு. மகதலா மரியா அழுதுகொண்டிருந்தார், அதனால் அவரால் இயேசுவை அடையாளம் கண்டுகொள்ள முடியவில்லை. மூன்று. அந்நேரம் மிகவும் இருட்டாக இருந்தது. இத்தகைய காரணங்களால் மகதலா மரியாவால் இயேசுவை அடையாளம் கண்டுகொள்ள முடியாமல் போனாலும், இயேசு அவருக்கு அவர் தன்மீதுகொண்ட அன்பின் காரணமாக வெளிப்படுத்துகின்றார்.
மகதலா மரியாவிடம் தன்னை ஏன் பற்றிக்கொள்ளவேண்டாம் என்று இயேசு சொன்னார்?
இயேசு, மகதலா மரியாவிடம் சொன்ன இவ்வார்த்தைகளும் நமது சிந்தனைக்குரியவை. இதற்கு இரண்டு காரணங்கள் உண்டு. ஒன்று. மகதலா மரியா இயேசு உயிர்த்தெழுந்த செய்தியை சீடர்களுக்குச் சொல்லவேண்டும். இரண்டு. மகதலா மரியாவிற்கு இயேசுவைப் பார்ப்பதற்கு இன்னொரு வாய்ப்புக் கிடைக்கும் (திப 1:1-9). அதன்காரணமாக இயேசு அவரிடம் தன்னைப் பற்றிக்கொண்டிருக்க வேண்டாம் என்று சொல்கின்றார்.
சிந்தனை
‘தேடுவோர் கண்டடைகின்றனர்’ (மத் 7:8) sஎன்பார் இயேசு. மகதலா மரியா, இயேசுவின் மீது கொண்ட அன்பினால் தேடினார். இறுதியில் கண்டடைந்தார். நாமும் இயேசுவைத் தேடிக் கண்டடைவோம். கண்டடைந்தவரை மற்றவருக்கும் அறிவிப்போம். அதன்வழியாக இறையருள் நிறைவாய்ப் பெறுவோம்.
Source: New feed