தவக்காலம் நான்காம் வாரம்
சனிக்கிழமை
யோவான் 7: 40-53
முறம் எடுத்து விரட்டப்படவேண்டிய முன்சார்பு எண்ணங்கள்
நிகழ்வு
நேர்மைக்கும் உண்மைக்கும் பெயர்போன இந்திய ஆட்சிப் பணியாளர். திரு. சகாயம் அவர்கள் ஒரு மேடையில் பகிர்ந்துகொண்ட நிகழ்வுகள் இவை (அவருடைய வார்த்தைகளில்):
“என்னுடைய வீட்டுக்குப் பக்கத்தில் அறுபது வயது மதிக்கத்தக்க பெரியவர் ஒருவர் இருந்தார். அவர் தாபல்துறையில் பணிசெய்துவிட்டு ஓய்வுபெற்ற அதிகாரி. ஒவ்வொருநாளும் அதிகாலை வேளையில் ஆற்றுக்குச் சென்று குளித்துவிட்டு வருவது அவரது வழக்கம். ஒருநாள் அவர் ஆற்றுக்குச் சென்று குளித்துவிட்டு வரும் வழியில் மயக்கம் போட்டுக் கீழே விழுந்துவிட்டார். அந்த வழியாகப் போனோர் வந்தோர் எல்லாம், அவர் குடித்துவிட்டுதான் ‘மட்டையாகி’க் கிடக்கிறார் என்று கடந்துபோனார்கள். உண்மையில் அவருக்கு குறைந்த இரத்த அழுத்தப் பிரச்சினை (Low Pressure) உண்டு. அதனால்தான் அவர் மயக்கம் போட்டுக்கீழே விழுந்திருந்தார். இது தெரியாமல் ‘அவர் குடித்துவிட்டுத்தான் கிடக்கின்றார்’ என்று எல்லாரும் கடந்தபோனதால், கவனிப்பாரற்று அவர் அந்த இடத்திலேயே இறந்துபோனார்.
இன்னொரு முறை என்னுடைய தந்தை வேலை நிமித்தமாக தூத்துக்குடி சென்றிருந்தபொழுது, அங்கிருந்த பேருந்து நிலையத்தில் மயக்கம் போட்டுக் கீழே விழுந்துவிட்டார். மக்களெல்லாம், ‘இந்தாள் நன்றாகக் குடித்துவிட்டு இப்படிக் கிடக்கின்றார்’ என்று வாய்க்கு வந்தபடி பேசிவிட்டுக் கடந்துபோனார்கள். நேரம் ஆக ஆக என் தந்தை அவராகவே சுயநினைவு பெற்று வீடு திரும்பினார். உண்மையைச் சொல்லவேண்டும் என்றால், என் தந்தையும் சரி, என் வீட்டுக்குப் பக்கத்துக்கு வீட்டில் வசித்துவந்த பெரியவரும் சரி, வாழ்க்கையில் மதுவைத் தொட்டதே கிடையாது. ஆனாலும் சூழ்நிலை காரணமாக அவர்கள் இருவரும் மயக்கம் போட்டுக்கிழ, மற்றவர்களுடைய பார்வைக்குக் குடிகாரர்களைப் போன்று அவர்கள் தென்பட்டிருக்கிறார்கள். இப்படித்தான் பலரும் ஒருவரைப் பற்றி முழுமையாக அறிந்துகொள்ளாமல், அவர் இப்படித்தான் என்று தவறாகப் பேசுகிறார்கள். இத்தகைய போக்கை ஒவ்வொருவரும் தவிர்ப்பது நல்லது.
திரு. சகாயம் அவர்கள் சொன்ன இச்செய்தி நூற்றுக்கு நூறு உண்மை. இன்றைய நற்செய்தியிலும் இதுபோன்று ஒரு சிக்கல் எழுகின்றது. அதற்கு எப்படிப்பட்ட எதிர்வினை ஆற்றப்பட்டது. இந்நிகழ்விலிருந்து நாம் என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என்று சிந்தித்துப் பார்த்து நிறைவுசெய்வோம்.
இயேசுவைப் பிடிக்க முயன்ற தலைமைக்குருக்கள் மற்றும் பரிசேயர்கள்
இயேசு ஓய்வுநாள் சட்டத்தை மீறிவிட்டார் என்றும் தன்னை அவர் இறைமகன் என்று அழைக்கிறார் என்றும் வெகுண்டெழுந்த தலைமைக் குருக்கள் மற்றும் மற்றும் மறைநூல் அறிஞர்கள் அவரைப் படைவீரர்களை அனுப்பிப் பிடித்துவரச் சொல்கிறார்கள். அவர்களோ அவரைப் பிடித்துவராமல், வெறுங்கையோடு வந்ததைப் பார்த்துவிட்டு, பரிசேயர்கள் காரணத்தைக் கேட்டபொழுது படைவீரர்கள் அவர்களிடம், “அவரைப் போல எவரும் என்றுமே பேசியதில்லை” என்கின்றார்கள். படைவீரர்கள் தங்களை அனுப்பியவர்களிடம் சொன்னதை வேறு வார்த்தைககளில் சொல்லவேண்டும் எனில், இயேசு சாதாரணமானவர் அல்ல, அவர் மிகப்பெரியவர் என்று சொல்லலாம். அவர்கள் இப்படிச் சொன்னதால் பரிசேயக் கூட்டம், “இவர்களுக்குத் திருச்சட்டம் தெரியாது. இவர்கள் சபிக்கப்பட்டவர்கள்” என்கின்றது. அப்பொழுது பரிசேயர்களுள் ஒருவரான நிக்கதேம் அவர்களிடம் என்ன கூறினார் என்பதுதான் இன்றைக்கு நமது சிந்தனைக்குரியதாக இருக்கின்றது.
ஒருவரின் சொல் கேளாமல், அவர் என்ன செய்தார் என்று அறியாமல் தீர்ப்பிடுவது தவறு
பரிசேயக் கூட்டம் இயேசுவின்மீது எந்தவொரு ஆதாரமும் இல்லாமல் குற்றம் சுமத்தியபொழுது, அங்கிருந்த நிக்கதேம், ஒருவரின் சொல் கேளாமல், அவர் என்ன செய்தால் என்று அறியாமல் தீர்ப்பிடுவது தவறு என்கின்றார். இந்த நிக்கதேமைக் குறித்து யோவான் நற்செய்தியில் மூன்றுமுறை சொல்லப்படுகின்றன. (இன்றைய நற்செய்தி வாசகம் தவிர்த்து, யோவா 3: 1-2; 19:39) இதன்மூலம் இவர் இயேசுவைப் பற்றி ஓரளவு தெரிந்துவைத்திருப்பார் என்று உறுதியாகச் சொல்லலாம். இப்படிப்பட்ட நிலையில் பரிசேயர்களும் தலைமைக்குருக்களும் இயேசுவைப் பற்றி முழுமையாக அறிந்துகொள்ளலாம் பேசியதால்தான் அவர் அவர்களுக்கு அவ்வாறு பதிலளிக்கின்றார்.
பரிசேயக்கூட்டம் கலிலேயாவிலிருந்து இறைவாக்கினர் யாரும் தோன்றியதில்லை என்று கூறுகின்றது. இறைவாக்கினர் யோனா கலிலேயாவைச் சார்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இயேசு பெத்லகேமில் பிறந்தவர். அதையும் அறியாமல் அவர்கள் உளறிக்கொண்டும் இயேசுவைக் குறித்து தவறான ஒரு முடிவுக்கும் வருகின்றார்கள். இத்தகைய சூழ்நிலையில்தான் நிக்கதேமின் வார்த்தைகள் சிந்தனைக்குரியதாக இருக்கின்றது.
சிந்தனை
இயேசுவைக் குறித்து முழுமையாக அறிந்துகொள்ளாமல், அவரைக் குறித்துத் தீர்பிட்ட பரிசேயக் கூட்டத்தைப் போன்றுதான் பலரும் அடுத்தவரைக் குறித்து முழுமையாக அறிந்துகொள்ளாமல், தீர்ப்பிட்டுக் கொண்டிருக்கின்றார்கள். இது மிகவும் ஆபத்தானது. எனவே இத்தகைய போக்கினை நம்மிடமிருந்து களைந்துவிட்டு, எல்லாரையும் திறந்த மனதோடு ஏற்றுக்கொள்ளப் பழகுவோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய்ப் பெறுவோம்.
Source: New feed