பொதுக்காலம் இருபத்து ஒன்றாம் வாரம் சனிக்கிழமை
மத்தேயு 25: 14-30
“ஒவ்வொருவருக்கும் அவரவர் செயலுக்கேற்பக் கைம்மாறு அளிக்கும் ஆண்டவர்”
நிகழ்வு
அமெரிக்காவில் தோன்றிய மிகப்பெரிய பேச்சாளர் ஹென்றி வார்ட் பீசர் (Hendry Ward Beecher 1813- 1887). பன்முகத்தன்மை கொண்டவரான இவருக்கு ஓர் இளைஞனிடமிருந்து கடிதம் ஒன்று வந்தது. அந்தக் கடிதத்தில் இவ்வாறு எழுதப்பட்டிருந்தது: “பெரும் மதிப்பிற்குரிய ஹென்றி வார்ட் பீசர் அவர்களுக்கு வணக்கம்…! நான் இப்பொழுதுதான் என்னுடைய கல்லூரிப் படிப்பைப் படித்து முடித்தேன். ஆதலால், உங்களிடத்தில் அல்லது உங்களுக்குத் தெரிந்த ‘மிகவும் எளிய வேலை’ ஏதாவது இருந்தால் சொல்லுங்கள். நான் அதைச் செய்து, என்னுடையை வாழ்க்கையை ஓட்டிக் கொள்கின்றேன்.”
இக்கடிதத்தை வாசித்த ஹென்றி வார்ட் பீசருக்குச் சற்று அதிர்ச்சியாக இருந்தது. ‘பலர் எப்படியெல்லாமோ உழைத்து முன்னுக்கு வருவது பற்றிச் சிந்தித்துக் கொண்டிருக்கையில், இந்த இளைஞன் இப்படிச் சிந்தித்துக் கொண்டிருக்கின்றானே…! இவனுக்கு நல்லதோர் அறிவுரையைச் சொல்லி வைப்போம்’ என்று நினைத்துக் கீழ்கண்டவாறு கடிதம் எழுதி அதை அவர் அவனிடம் அனுப்பி வைத்தார்:
“அன்புத் தம்பி வணக்கம்! உங்களுடைய கடிதத்தைப் பெற்றுக்கொண்டேன். உங்களுடைய கடிதத்தில், ‘மிகவும் எளிய வேலை ஏதாவது இருந்தால் சொல்லுங்கள்’ என்று கேட்டிருந்தீர்கள். என்னைப் பொறுத்தளவில், மிகவும் எளிய வேலை என்று எதுவும் கிடையாது. விவசாயம் பார்ப்பதிலிருந்து, கட்டட வேலை, மருத்துவம் பார்த்தல், ஆசிரியப் பணி… இப்படி எதுவுமே எளிதான வேலை கிடையாது. எல்லா வேலைகளும் கடினமான வேலைகள்தான். நீ ‘மிகவும் எளிதான வேலை’ என்று கேட்டதால் நான் உனக்கு ஒன்றைச் சொல்கின்றேன். கல்லறையில் படுத்துக்கொள்வதுதான் மிகவும் எளிதான வேலை. இந்த வேலையைச் செய்ய நீ தயாரா…? இப்படிக்கு ஹென்றி வார்ட் பீசர்.”
ஹென்றி வார்ட் பீசரிடமிருந்து இப்படியொரு கடிதத்தைப் பெற்றுக்கொண்ட அந்த இளைஞன், ‘மிகவும் எளிய வேலையைப் பார்த்து, வாழ்க்கையை ஓட்டிக்கொள்ளலாம்’ என்ற தன்னுடைய முடிவை மாற்றிக்கொண்டு, நல்லதொரு வேலையைத் தேடி, கடினமாக உழைத்து, நல்ல நிலைக்கு வந்தான்.
ஆம், ஒருவருடைய உயர்வும் தாழ்வும் அவருடைய உழைப்பினாலேயே என்ற செய்தியை இந்த நிகழ்வு நமக்கு எடுத்துக்கூறுகின்றது. இன்றைய நற்செய்தி வாசகமும் நமக்கு இதே செய்தியைத்தான் எடுத்துக்கூறுகின்றது. நாம் அதைக் குறித்து இப்பொழுது சிந்தித்துப் பார்ப்போம்.
கொடுக்கப்பட்ட தாலந்தை நல்லமுறையில் பயன்படுத்துவோருக்குப் பெரிய பொறுப்பு
நற்செய்தியில், ஆண்டவர் இயேசு விண்ணரசைத் தாலந்துக்கு ஒப்பிடுகின்றார் .மானிட மகன் மாட்சியோடு வருகின்றபொழுது, ஒவ்வொருவருக்கும் அவரவர் செயலுக்கேற்பக் கைம்மாறு அளிப்பார் (மத் 16: 27) என்ற உண்மையை எடுத்துக்கூற, இயேசு இந்த உவமையைச் சொல்கின்றார்.
இந்த உவமையில் வருகின்ற மூன்று பணியாளர்களுக்கும் தாலந்து கொடுக்கப்படுகின்றது. தாலந்தின் எண்ணிக்கையில் வேறுபாடு இருந்தாலும், மூன்று பேர்களுக்கும் தாலந்து கொடுக்கப்பட்டிருக்கின்றதே அதை நாம் கருத்தில் கொள்ளவேண்டும். இதன்மூலம் கடவுள் யாரையும் திறமையில்லாமல் படைக்கவில்லை; எல்லாரையும் திறமையோடுதான் படைத்திருக்கின்றார் என்பதை உணர்ந்துகொள்ளலாம். மேலும் இந்த உவமையில் வருகின்ற முதல் இரண்டு பணியாளர்கள், தங்களுடைய தலைவர் தங்களிடம் கொடுத்த தாலந்துகளை நல்லமுறையில் பயன்படுத்துகின்றார்கள். இதனால் அவர்கள் பெரிய பொறுப்புகளில் அமர்த்தப்படுகின்றார்கள். ஆம், எவர் ஒருவர் கடவுள் தன்னிடம் கொடுத்த தாலந்தை நல்ல முறையில் பயன்படுத்துகின்றாரோ, அவர் நிச்சயம் நல்ல நிலைக்கு வருவார்; அவர் இறைவனிடமிருந்து தக்க கைம்மாறும் பெறுவார்.
கொடுக்கப்பட்ட தாலந்தை நல்லமுறையில் பயன்படுத்தாதோருக்குத் தண்டனை
முதல் இரண்டு பணியாளர்களும் தலைவர் கொடுத்த தாலந்துகளை நல்லமுறை பயன்படுத்தியபொழுது, கடைசியில் வரும் பணியாளர் தலைவர் தனக்குக் கொடுத்த தாலந்தைச் சரியாகப் பயன்படுத்தாமல், மண்ணுக்குள் புதைத்து வைக்கின்றார். அவர் தாலந்தை மண்ணுக்குள் வைத்ததுகூட பெரிதில்லை; ஆனால், அவர் தலைவரிடம், “நீர் கடின உள்ளத்தினர்… நீர் விதைக்காத இடத்திலும் போய் அறுவடை செய்பவர்…” என்று பேசக்கூடிய வார்த்தைகள்தான் கவனிக்கத் தக்கவையாக இருக்கின்றன. உண்மையில் எந்தவொரு வேலையும் செய்யாமல், சோம்பேறியாய் இருக்கின்ற ஒருவரால் மட்டுமே இப்படியெல்லாம் பேச முடியும். கடைசியில் வரும் பணியாளர் இப்படிப்பேசியதால், தலைவர் அவரிடம், “சோம்பேறியே! பொல்லாத பணியாளனே!” என்று சொல்லி அவரைக் கடுமையாகத் தண்டிக்கின்றார்.
கடவுள் தனக்குக் கொடுத்த தாலந்தைச் சரியாகப் பயன்படுத்தாதோருக்கும் சோம்பேறியாய் இருந்துகொண்டு வீண்பேச்சுப் பேசுவோருக்கும் இத்தகைய தண்டனைதான் கிடைக்கும். இதில் எந்தவொரு மாற்றுக் கருத்தும் கிடையாது. ஆகையால், நமது செயல்களுக்கு ஏற்பக் கைம்மாறு தரும் இறைவனிடமிருந்து நல்லதொரு கைம்மாறு பெற, நாம் அவர் நமக்குக் கொடுத்திருக்கும் தாலந்துகளை நல்லமுறையில் பயன்படுத்தி, அவருக்குச் சான்று பகர்வோம்.
சிந்தனை
‘மானிடமகன் தம் தந்தையின் மாட்சியோடு தம் வானதூதருடன் வரப்போகிறார், அப்பொழுது ஒவ்வொருவருக்கும் அவரவர் செயலுக்கேற்பக் கைம்மாறு அளிப்பார்’ (மத் 16: 27) என்பார் இயேசு. ஆகையால், நாம் இயேசுவிடமிருந்து நல்ல கைம்மாறு பெற, நமக்குக் கொடுக்கப்பட்ட தாலந்துகளை நல்லமுறையில் பயன்படுத்திக் கடவுளுக்குப் பெருமை சேர்ப்போம். சோம்பேறித் தனத்தை விட்டொழிப்போம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
Source: New feed