பொதுக்காலம் முப்பதாம் வாரம் வெள்ளிக்கிழமை
லூக்கா 14: 1-6
உங்களுள் ஒருவர் தம் பிள்ளையோ மாடோ கிணற்றில் விழுந்தால் (ஓய்வுநாள் என்றாலும்) அதனை உடனே தூக்கிவிடமாட்டாரா?”
நிகழ்வு
கோவையில், இரண்டு சக்கர மற்றும் நான்கு சக்கர உதிரிப்பாகங்கள் தயாரிக்கும் நிறுவனத்தை நடத்திக்கொண்டே மனநலம் குன்றியவர்கள், ஆதரவற்றோர் மற்றும் குடும்பத்தால் கைவிடப்பட்டோரை அவரவர்க்குரிய காப்பகங்களில் சேர்த்து, அவர்களுக்கு மறுவாழ்வு வழங்கிக்கொண்டிருப்பவர் திருவாளர் மகேந்திரன் என்பவர்.
யாராவது இவரிடம், “எது உங்களை மனநலம் பாதிக்கப்பட்டவர்கள், கைவிடப்பட்டவர்கள் மற்றும் ஆதரவற்றோர் ஆகியோரின் மறுவாழ்விற்காக உழைக்கத் தூண்டியது?” என்று கேட்டால், அவர் இவ்வாறு பதிலளிக்கின்றார்: “எனக்கொரு சகோதரி உண்டு. அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர். ஒருநாள் அவர் சாலையைக் கடக்கும்பொழுது, கால் இடறிச் சாக்கடைக்குள் விழுந்துவிட்டார். அந்த வழியாகப் பலர் கடந்துசென்றனர். யாருக்குமே சாக்கடைக்குள் விழுந்து கிடந்த என் சகோதரியைத் தூக்கவேண்டும் என்ற எண்ணம் ஏற்படவில்லை. கடைசியில் ஓர் ஆட்டோ ஓட்டுநர் என் சகோதரியின்மீது பரிவுகொண்டு, சாக்கடைக்குள் கிடந்த அவரை வெளியே தூக்கியெடுத்துக் குளிப்பாட்டி வீட்டிற்குக் கொண்டு, விட்டுவிட்டுப் போனார்.
யாரோ ஓர் ஆட்டோ ஓட்டுநர் மனநலம் பாதிக்கப்பட்ட என் சகோதரிக்கு உதவி செய்திருக்கும்பொழுது, என் சகோதரியைப் போன்று இந்த நகரில் இருக்கும் எத்தனையோ மனநலம் பாதிக்கப்பட்டவர்கள், கைவிடப்பட்டவர்கள், ஆதரவற்றோர்கள ஆகியோருக்கு நான் ஏன் உதவி செய்யக்கூடாது என்ற எண்ணமானது என் மனத்தில் ஏற்பட்டது. அதனால்தான் நான் இத்தகையோருக்கு என்னால் முடிந்த உதவிகளைச் செய்து வருகின்றேன்.”
திருவாளர் மகேந்திரன் இதுவரைக்கும் நானூறுக்கும் மேற்பட்ட மனநலம் குன்றியவர்களைக் காப்பகங்களில் சேர்த்து, அவர்களுக்கு மறுவாழ்வு தந்திருக்கின்றார்; நூற்றுக்கும் மேற்பட்ட ஆதவற்றவர்களை நல்லடக்கம் செய்திருக்கின்றார். இவருடைய இந்தத் தன்னலமற்ற பணிகளைப் பார்த்து கோவை மாநகரக் காவல்துறை ஒரு மனநலக் காப்பகம் வைத்துக் கொள்ள இடமளித்திருக்கின்றது. இவரும் அந்த இடத்தில் ஒரு மனநலக் காப்பகம் கட்டி, அதில் ஐம்பத்துக்கும் மேற்பட்ட மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு அடைக்கலம் தந்து, மறுவாழ்வு தந்து வருகின்றார். இவர் தான் ஏற்படுத்திருக்கும் ‘ஈர நெஞ்சம்’ என்ற அறக்கட்டளையின் மூலமாக இத்தகைய பணிகளை ஒருங்கிணைத்து வருகின்றார்.
யாருமே கண்டுகொள்ளாத நிலையில் உள்ள அல்லது ‘குழியில் உள்ள’ மனநலம் பாதிக்கப்பட்டவர்கள், கைவிடப்பட்டவர்கள், ஆதரவற்றவர்கள் ஆகியோர்மீது தனிப்பட்ட அக்கறை எடுத்துக்கொண்டு, அவர்களிடம் மறுவாழ்விற்காக உழைத்து வரும் திருவாளர் மகேந்திரன் உண்மையில் நம்முடைய பாராட்டிற்கு உரியவராக இருக்கின்றார். நற்செய்தியில் ஆண்டவர், “உங்களுள் ஒருவர் தம் பிள்ளையோ மாடோ கிணற்றில் விழுந்தால் ஓய்வுநாள் என்றாலும் அதனை உடனே தூக்கிவிடமாட்டாரா?” என்கின்றார். இயேசு இந்த வார்த்தைகளை எத்தகைய சூழ்நிலையில் சொன்னார் என்பதையும், இவ்வார்த்தைகளின் மூலம் நாம் என்ன கற்றுக்கொள்ளலாம் என்பதையும் சிந்தித்துப் பார்ப்போம்.
குற்றம் காணும் நோக்குடன் இருந்த பரிசேயர்கள்
நற்செய்தியில் ஆண்டவர் இயேசு, தன்னை விருந்துக்கு அழைத்திருந்த பரிசேயர்த் தலைவரின் வீட்டிற்கு உணவருந்தச் செல்கின்றார். இங்கு நாம் ஒரு முக்கியமான செய்தியைக் கவனிக்கவேண்டும். அது என்னவெனில், இயேசுவை விருந்துக்கு அழைத்திருந்திருந்த பரிசேயர்த் தலைவருக்கு அவருக்கு நல்லமுறையில் விருந்துகொடுக்கவேண்டும் என்பதைவிடவும், அவரிடம் குற்றம் காணவேண்டும் என்பது பெரிதாக இருந்தது. அதனாலேயே அவர் இயேசுவை ஓய்வுநாளில் விருந்துக்கு அழைக்கின்றார்; கூடவே ஒரு நீர்க்கோவை நோயாளர் அவர்முன் இருக்குமாறு பார்த்துக்கொள்கின்றார்.
ஓய்வுநாளில் நன்மைசெய்வதே முறை
இயேசு தன்னை விருந்துக்கு அழைத்திருந்திருந்த பரிசேயர்த் தலைவர் மற்றும் அங்கிருந்த ஏனைய பரிசேயர்களின் எண்ணங்கள் அறியாமல் இல்லை. அவர் அவர்களுடைய எண்ணங்களை நன்றாகவே அறிந்திருந்தார். அதனாலேயே அவர் அவர்களிடம், “ஓய்வு நாளில் நலப்படுத்துவது முறையா? இல்லையா?” என்கின்றார். இதற்கு அவர்களிடம் எந்தவொரு பதிலும் வராததால், இயேசு நீர்க்கோவை நோயாளரை நலமாக்குகின்றார். பின்னர் அவர் அவர்களைப் பார்த்து, “உங்களுள் ஒருவர் தம் பிள்ளையோ மாடோ கிணற்றில் விழுந்தால் ஓய்வுநாள் என்றாலும் அதனை உடனே தூக்கிவிடமாட்டாரா?” என்கின்றார்.
பரிசேயர்கள் வெளிவேடத்தின் மொத்த உருவாய் இருந்தார்கள். அவர்கள் ஓய்வுநாளில்பொழுது தங்களுடைய பிள்ளையோ அல்லது மாடோ கிணற்றில் விழுந்தால் அதைத் தூக்குவதில் தீவிரம் காட்டினார்கள். அதே நேரத்தில் இயேசு ஓய்வு நாளில் யாராவது ஒருவரை நலப்படுத்தினால் அதைப் பெரிய குற்றமாகப் பார்த்தார்கள். இதனால்தான் இயேசு நீர்க்கோவை நோயாளரை ஓய்வுநாளில் நலப்படுத்தி, ஓய்வுநாள் நன்மை செய்வதற்கே என்ற உண்மையை அவர்களிடம் உணர்த்துகின்றார்.
ஆம், நன்மை செய்வதற்கு நல்ல நாளோ, நல்ல நேரமோ தேவையில்லை. எல்லா நாளும், எல்லா நேரத்திலும் இயேசுவைப் போன்று, மேலே குறிப்பிடப்பட்ட திருவாளர் மகேத்திரேனைப் போன்று நன்மை செய்யலாம். நாம் எல்லா நாளும், எல்லா நேரமும் நன்மை செய்யத் தயாரா? சிந்திப்போம்.
சிந்தனை
‘நீங்கள் நன்மை செய்வதில் ஆர்வமுடையவர்களாய் இருந்தால், உங்களுக்குத் தீமை செய்யப்போகிறவர் யார்?’ (1 பேது 3: 13) என்பார் பேதுரு. ஆகையால், நாம் நன்மை செய்வதில் ஆர்வமுடையவர்களாய் இருப்போம். எதிர்வரும் வரும் தடைகளைக் கண்டு கலங்காமல், தொடர்ந்து இறைவழியில் நடப்போம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
Source: New feed