பொதுக்காலம் இருபத்து ஏழாம் வாரம் செவ்வாய்க்கிழமை
லூக்கா 10: 38-42
ஆண்டவரோடு பேச நேரம் ஒதுக்காமல் பலவற்றைக் குறித்துக் கவலைப்பட்டுக் கொண்டிருக்கும் ‘மார்த்தா’க்கள்
நிகழ்வு
செய்தித்தாள் வாசித்துக்கொண்டிருந்த தன் தந்தையை நோக்கி, “அப்பா!” என்று அழைத்தான் அவருடைய சிறு வயது மகன். அவரோ அதைக் கண்டுகொள்ளாமல், செய்தித்தாள் வாசிப்பதிலேயே மும்முரமாக இருந்தார். அவன் இரண்டு மூன்று முறை அவரை அவ்வாறு அழைத்தபிறகுதான், “என்ன?” என்று கேட்டுவிட்டு மீண்டுமாகச் செய்தித்தாள் வாசிக்கத் தொடங்கினார் தந்தை.
“அப்பா! கட்டாயம் செய்தித்தாள் வாசிக்க வேண்டுமா…? சிறிதுநேரம் என்னோடு பேசலாம்தானே!” என்று சொன்ன மகனிடம் தந்தை, “நாட்டு நடப்பை உடனுக்குடன் தெரிந்து வைத்திருக்க வேண்டும். அதனால் கட்டாயம் செய்தித்தாள் வாசிக்கவேண்டும்?” என்றார். “செய்தித்தாள் வாசிப்பது கட்டாயம் என்றால், என்னோடு பேசிக்கொண்டே செய்தித்தாள் வாசிக்கலாம்தானே!” என்றான் மகன். “செய்தித்தாள் வாசிக்கின்றபொழுது யாரோடும் பேசிக்கொண்டிருந்தால், கவனம் சிதறும். அது அவ்வளவு நல்லதல்ல” என்று சொல்லிவிட்டு மீண்டுமாகச் செய்தித்தாள் வாசிக்கத் தொடங்கினார் தந்தை.
“அப்பா! யாரோடும் பேசினால் கவனம் சிதறும் என்று சொல்கின்றீர்களே! எங்களுக்குப் பாடம் சொல்லித்தரும் ஆசிரியை, பாடம் கற்பிக்கும்பொழுது கவனம் சிதறாமல் பேசிக்கொண்டுதானே இருக்கின்றார். அதுமாதிரி நீங்கள் செய்தித்தாள் வைத்துக்கொண்டே என்னிடம் பேசலாம்தானே” என்றான் மகன். “மகனே! இதோ பார்! பாடம் நடத்தும்பொழுது பேசுவது என்பது வேறு. செய்தித்தாள் வாசிக்கும்பொழுது பேசுவது என்பது வேறு, இரண்டையும் போட்டுக் குழப்பவேண்டாம். மேலும் இப்படியே நீ என்னிடம் கேள்வி கேட்டுக்கொண்டிருந்தால் எனக்குப் பைத்தியம் பிடித்துவிடும். அதன்பிறகு நான் மனநலம் பாதிக்கப்பட்டோர் காப்பகத்தில்தான் போய்ச் சேரவேண்டும்” என்று சற்றுக் குரலை உயர்த்திப் பேசினார் தந்தை.
அப்பொழுதும்கூட மகன் மிகவும் சாதாரணமாக, “அப்பா! நீங்கள் மனநலம் பாதிக்கப்பட்டோர் காப்பகத்தில் போய்ச் சேர்ந்தபிறகு செய்தித்தாள் வாசிப்பீர்களா?” என்றான். அவர் “இல்லை” என்றதும், “அப்படியானால் உங்களுக்கு எந்தவொரு தொந்தரவு இல்லாமல் நான் உங்களோடு பேசலாம்தானே!” என்றான் மகன். இதைக் கேட்டு அந்தத் தந்தை வெட்கித் தலைகுனிந்தார்.
இந்த நிகழ்வில் வருகின்ற தந்தையைப் போன்றுதான் இன்றைக்குப் பலர் தங்கள் குடும்பத்தில் உள்ளவர்களோடும் பேச நேரம் ஒதுக்காமல், கடவுளோடும் பேச நேரம் ஒதுக்காமல், பற்பல பணிகளில் மிகவும் பரபரப்பாக அலைந்துகொண்டிருக்கின்றார்கள். இத்தகைய சூழ்நிலையில் இன்றைய நற்செய்தி வாசகம், நம்முடைய வாழ்விற்கு எது முதன்மையானது என்ற செய்தியை எடுத்துக்கூறுகின்றது. அது குறித்து நாம் சிந்தித்துப் பார்ப்போம்.
பற்பல பணிகளில் பரபரப்பாய் இருந்த மார்த்தா
நற்செய்தியில் இயேசு மார்த்தா மரியாவின் வீட்டிற்குச் செல்கின்றார். இயேசு அவர்களுடைய வீட்டிற்குச் சென்றதும், மார்த்தா அவரை வரவேற்றுவிட்டு, பற்பல பணிகள் புரிவதில் மிகவும் பரபரப்பாகிவிடுகின்றார். மட்டுமல்லாமல், “நான் பணிவிடை செய்ய, என் சகோதரி என்னைத் தனியாய் விட்டுவிட்டாளே!” என்று இயேசுவிடம் ஆதங்கப்படுகின்றார் அவர். அப்பொழுதுதான் இயேசு அவரிடம், “நீ பலவற்றைப் பற்றிக் கவலைப்பட்டுக் கலங்குகின்றாய்” என்கின்றார்.
மார்த்தாவைப் போன்று இன்றைக்குப் பலர் பலவற்றை இழுத்துப் போட்டுக்கொண்டு பரபரப்பாகிவிடுகின்றார்கள். மேலும் அதை நினைத்தே அவர்கள் மிகவும் கலங்கவும் செய்கின்றார்கள். இப்படிப்பட்டவர்கள் எது தேவையானது என்பதை மறந்துவிடுகின்றார்கள்.
நல்ல பங்கைத் தேர்ந்துகொண்ட மரியா
மார்த்தா இவ்வாறு பலவற்றைப் பற்றி நினைத்துக் கவலைப்பட்டுக் கொண்டிருக்க, மரியா இயேசுவின் காலடியில் அமர்ந்து, அவர் சொல்வதைக் கேட்டுக்கொண்டிருக்கின்றார். இதனாலேயே அவர் இயேசுவால், “மரியாவோ நல்ல பங்கைத் தேர்ந்தெடுத்துக் கொண்டாள்” என்று பாராட்டப்படுகின்றாள்.
இங்கு இயேசு ஏன் மார்த்தாவைப் பாராட்டுகின்றார் என்று தெரிந்துகொள்வது இன்றியமையாதது. மத்தேயு நற்செய்தியில் இயேசு இவ்வாறு கூறுவார்: “ஆகவே, அனைத்திற்கும் மேலாக அவரது ஆட்சியையும் அவருக்கு ஏற்புடையவற்றையும் நாடுங்கள். அப்பொழுது இவையனைத்தும் உங்களுக்குச் சேர்த்துக் கொடுக்கப்படும்” (மத் 6: 33). இவ்வார்த்தைகளை அடிப்படையாகக் கொண்டு, நாம் சிந்தித்துப் பார்க்கின்றபொழுது, மரியா ஆண்டவருக்கு ஏற்புடையவற்றை நாடினார். அதனாலேயே அவர் இயேசுவால் பாராட்டப் படுகின்றார். மேலும் திருவிவிலியம் ஆண்டவருக்குச் செவி கொடுத்து வாழவேண்டும் என்பதை மீண்டும் மீண்டுமாக வலியுறுத்திக் கூறுகின்றது. குறிப்பாக திருப்பாடல் எழுபத்து எட்டு, “என் மக்களே! என் அறிவுரைக்குச் செவிசாயுகள்; என் வாய்மொழிக்குச் செவிகொடுங்கள்” (திபா 78: 1) என்று கூறுகின்றது. இவ்வாறு மரியா ஆண்டவரின் வார்த்தைக்குச் செவிகொடுத்தார். அதன்மூலம் அவர் ஆண்டவருடைய வார்த்தையைத் தியானிப்பதற்கும், அதன்படி நடப்பதற்கும் தயாரானார். அதனாலேயே இயேசு மரியாவைப் பாராட்டுகின்றார்.
நம்முடைய வாழ்விற்கு மன்ற வேலைகளும் தேவைதான்; ஆனால், எல்லாவற்றிலும் முதன்மையானது ஆண்டவரின் வார்த்தையைக் கேட்பது. ஏனெனில், ஒருவர் ஆண்டவரின் வார்த்தையைக் கேட்பதன்மூலமாகவே, அவர் எத்தகைய வாழ்க்கை வாழவேண்டும், எதை எப்பொழுது செய்யவேண்டும் என்பதை நன்கு அறிகின்றார். ஆதலால், நாம் மரியாவைப் போன்று இறைவார்த்தைக்குச் செவிகொடுத்து, அதன்படி நடக்க முயற்சி செய்வோம்.
சிந்தனை
‘பிள்ளாய்! என் வார்த்தைகளுக்குச் செவி கொடு. நான் சொல்வதைக் கவனி’ (நீமொ 4: 20) என்கிறது நீதிமொழிகள் நூல். ஆகையால், நாம் பற்பல பணிகளில் பரபரப்பாய் இருப்பதைத் தவிர்ப்போம் .ஆண்டவருக்குச் செவிகொடுத்து, அவருக்கு உகந்தவர்களாய் வாழ்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்
Source: New feed