
பொதுக்காலம் இருபத்து ஆறாம் வாரம்
சனிக்கிழமை
லூக்கா 10: 17-24
“உங்களுக்கு எதுவுமே தீங்கு விளைவிக்காது”
நிகழ்வு
கிபி ஆறாம் நூற்றாண்டில், இத்தாலியில் வாழ்ந்து வந்த மிகப்பெரிய புனிதர் புனித பெனடிக்ட். இறைவேண்டலுக்கும் நோன்பிற்கும் மிகுந்த முக்கியத்துவம் கொடுத்து வாழ்ந்துவந்த இவருடைய பெயர் எங்கும் பரவியது. இதனால் பல்வேறு இடங்களிலிருந்தும் மக்கள் இவரைப் பார்க்கவும், இவரிடமிருந்து ஆலோசனைகளை பெற்றுச் செல்லவும் வந்து போனார்கள்.
இதைக் கண்ட ஃபளாரன்டியுஸ் (Florentius) என்ற துறவியின் உள்ளத்தில் பெனடிக்ட்மீது வெறுப்பும் பொறாமையும் ஏற்பட்டன. இதனால் அவர் பெனடிக்ட்டை எப்படியாவது ஒழித்துக் கட்டவேண்டும் என்று சூழ்ச்சி செய்தார். இதைத்தொடர்ந்து அவர் ரொட்டியில் நஞ்சு தடவி, அதைப் பெனடிக்ட்டிடம் கொண்டு வந்து கொடுத்துச் சாப்பிடச் சொன்னார். பெனடிக்ட்டும் அந்த ரொட்டியைச் சாப்பிட முற்பட்டபோது, அவர் வழக்கமாக உணவு உண்ணும்போது அவரோடு உணவைப் பகிர்ந்து கொள்ள வரும் ஒரு காகம் அவரிடமிருந்த ரொட்டியைப் பறித்துக் கொண்டு மேலே பறந்தது.
பெனடிக்ட் ஒன்றும் புரியாமல் விழித்தார். ‘வழக்கமாக இந்தக் காகம் நம்மிடமிருந்து உணவைப் பெறத்தானே செய்யும், இன்றைக்கு ஏன் அது நம்மிடமிருந்து ரொட்டியை பறித்துச் சென்றது’ என்று தீவிரமாக யோசிக்கத் தொடங்கினார் பெனடிக்ட். சிறிது நேரத்தில் ரொட்டியை மேலே தூக்கிச் சென்ற காகம் அதை ஆள் நடமாட்டம் இடத்தில் போட்டுவிட்டு அவரிடம் திரும்ப வந்தது.
இதற்கிடையில் தனக்கு ரொட்டி கொண்டுவந்த ஃபளான்டியுஸ் என்பவரிடத்தில் ஒரு சில மாற்றங்கள் தெரிவதை பெனடிக்ட் உணர்ந்தார். உடனே அவர், ‘என்னை இவர் கொல்வதற்குத்தான் ரொட்டியில் நஞ்சு தடவிக் கொண்டு வந்திருக்கிறார் போலும்… அதனால் தான் வழக்கமாக என்னிடமிருந்து உணவைப் பெறும் காகம் அதை என்னிடமிருந்து பறித்துக் கொண்டு எங்கேயோ போட்டுவிட்டு வந்திருக்கிறது. இறைவன் என்னை காப்பாற்றுவதற்காகத்தான் இந்தத் காகத்தை இங்கு அனுப்பி இருக்கிறார்’ என்று நினைத்துக்கொண்டு, தன்னைக் கொல்ல முயன்ற அந்தத் துறவியை அங்கிருந்து துரத்தி விட்டார்.
புனித பெனடிக்ட் தன்னைக் கொல்ல முயன்ற துறவியிடமிருந்து இறையருளால் காப்பாற்றப்பட்டது, “உங்களுக்கு எதுவுமே தீங்கு இழைக்காது” என்று இன்றைய நற்செய்தியில் இயேசு கூறும் வார்த்தைகளை நமக்கும் நினைவுபடுத்துவதாக இருக்கிறது. இயேசு இந்த வார்த்தைகளை எத்தகைய சூழ்நிலையில் பேசினார், இவ்வார்த்தைகள் நமக்கு என்ன உண்மையை வெளிப்படுத்துகின்றன என்பன குறித்து நாம் சிந்தித்துப் பார்ப்போம்.
மகிழ்வுடன் திரும்பி வந்த எழுபத்து இரண்டு சீடர்கள்
இன்றைய நற்செய்தியில் இயேசுவால் பணித்தளங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்ட எழுபத்து இரண்டு சீடர்கள், பணித் தளங்களுக்குச் சென்றுவிட்டுத் திரும்பி வருவதை குறித்து நாம் வாசிக்கிறோம். அவ்வாறு அவர்கள் திரும்பி வருகின்ற பொழுது மகிழ்வுடன் திரும்பி வந்ததாகவும் நாம் வாசிக்கிறோம். அவர்கள் மகிழ்வுடன் திரும்பி வந்ததற்கான காரணம் இன்றைய நற்செய்தி வாசகத்தில் சொல்லப்படுகிறது.
பேய்களை ஓட்ட அதிகாரம் கொடுக்கப்பட்டுப் பணித்தளங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட சீடர்கள், தங்களுக்குக் கொடுக்கப்பட்ட அதிகாரத்தைக் கொண்டு பேய்களை ஓட்டியபொழுது, அவைகளும் அவர்களுக்கு அடிபணிகின்றன. அதனாலேயே அவர்களின் மகிழ்வோடு பணித்தளங்களிலிருந்து திரும்பி வருகிறார்கள். அப்பொழுது தான் இயேசு “…உங்களுக்கு எதுவுமே தீங்கு விளைவிக்காது” என்று கூறுகிறார்.
உங்கள் பெர்கள் விண்ணகத்தில் எழுதப்பட்டிருக்கின்றன என்பது பற்றியே மகிழுங்கள்!
சீடர்கள், பேய்கள் தங்களுக்கு அடிபணிகின்றன என்று நினைத்து மகிழ்ந்திருக்கும்போது இயேசு அவர்களிடம், “உங்கள் பெயர்கள் விண்ணகத்தில் எழுதப்பட்டிருக்கின்றன என்பது பற்றியே மகிழுங்கள்” என்று கூறுகிறார்.
இயேசு இவ்வாறு சொல்வதற்கு இரண்டு முதன்மையான காரணங்கள் இருக்கின்றன. ஒன்று, சீடர்கள் தங்களுக்குப் பேய்கள்கூட அடிபணிகின்றன என்று அதையே நினைத்துக் கொண்டிருக்கும்பொழுது, அது அவர்களுடைய உள்ளத்தில் செருக்கையும் ஆணவத்தை வரவழைக்கும். அதனால் இயேசு தீய ஆவிகள் உங்களுக்கு அடிபணிகின்றன என்பது பற்றி மகிழ வேண்டாம் என்கிறார். இரண்டு, ஒருவருடைய பெயர் விண்ணகத்தில் எழுதப்பட்டிருப்பது என்பது மிகப்பெரிய பேறு. திருவெளிப்பாடு நூலில், “நகரின் மதில் பன்னிரண்டு அடிக்கற்களை கொண்டிருந்தது. அவற்றில் ஆட்டுக்குட்டியின் பண்ணிரண்டு திருத்தூதர்களின் பெயர்களும் எழுதப்பட்டிருந்தன” (திவெ 21:14) என்று வாசிக்கிறோம். இதன்மூலம்சீடர்கள் விண்ணகத்தில் தங்கள் பெயர்கள் எழுதப்பட்டிருப்பதை நினைத்து மகிழும் போது அவர்களுடைய உள்ளத்தில் ஆணவம் அல்ல, அமைதியும் மனநிறைவும் பிறக்கும் என்பதால் அப்படி கூறுகிறார் இயேசு.
நாமும் கூட பல வேளைகளில் சீடர்களைப் போன்று ஒருசில செயல்களை செய்து விட்டு, எல்லாம் என்னால் தான் ஆனது என்று ஆணவத்தில் ஆடலாம். உண்மையில் ஆட்சியும் புகழும் இறைவனுக்கு உரியவை. எனவே, நாம் மிகுந்த தாழ்ச்சியோடு இறைப்பணியைச் செய்வோம். விண்ணகத்தில் இயேசுவின் வழியில் நடக்கிற ஒவ்வொருவருடைய பெயரும் எழுதப்பட்டிருக்கும் என்பதை நினைத்து மகிழ்வோம்; இயேசுவின் உண்மையான சீடர்களாய் வாழ்வோம்.
சிந்தனை
‘சீடர் குருவை விட மேலானவர் அல்ல. பணியாளரும் தம் தலைவரை விடப் பெரியவர் அல்ல’ (மத் 10:24) என்பார் இயேசு. ஆகவே நாம் எல்லாப் புகழும் இறைவன் ஒருவருக்கே உரியது என்ற மனநிலையோடு தாழ்ச்சியோடு பணி செய்வோம். நம்முடைய பெயர்கள் விண்ணகதத்தில் எழுதப்பட்டிருக்கின்றன என்பதை நினைத்து மகிழ்வோம். அதன் வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
Source: New feed