
வீரமாமுனிவர் என்று அழைக்கப்படும் அருட் தந்தை ஜோசப் பெஸ்கி எழுதிய ஞானம் உணர்த்துதல் என்ற புத்தகத்தில் இருந்து இந்த பதிவு
செத்தவனுடைய தீர்வை ஆன பின்பு அவனவன் செய்த பாவ புண்ணியத்துக்குத் தக்கபடி நரகம், மோட்சம் என்கிற இரண்டு வழியில் ஒன்று நேரிடும். பாவியுடைய ஆத்துமம் உடலைவிட்டுப் பிரிந்தவுடனே நரக பாதாளத்திலே விழும். எத்தனை நாழிகை எவ்வளவு நேரம் செல்லும் என்று யோசிக்க நேரமில்லை. கண் சிமிட்டி விழிக்குமுன்னே சம்பவிக்கும். ஒரு மனுஷனை மலைப்பாம்பு வந்து பிடித்துக் கொள்ள, கிட்ட நின்றவர்கள் எல்லாரும் கைவிட்டு ஓடிப் போக, அவனுக்கு ஒரு உதவியும் இல்லாதிருக்க, அந்தப் பாம்பு அவனைத் தன் வளைக்குள்ளே இழுத்துக் கொண்டு போகிற போது எப்படி நடுநடுங்குவான்! என்னமாய்த் துடித்துப் பதைத்து ஏங்கித் தடுமாறுவான்! அதை இவ்வளவென்று சொல்லக் கூடுமோ?
அப்படியே பாவியானவன் ஓர் உதவியும் இல்லாமல் ஜென்மப் பகையாளியான பசாசின் கையிலே ஒப்புக்கொடுக்கப்படுகிற போது அவனுக்குள்ள துக்கமும், பயமும், நடுநடுக்கமும் இம்மாத்திரம் என்று யாராலே சொல்லக்கூடும்? பாவி தான் இருந்த பெரிய மாளிகையை விட்டு இருட்டுக் குழியிலே விழுந்ததைக் கண்டு பிரமித்துப் போய்ப் பெருமூச்சு விட்டழுது, ஐயையோ! எங்கே இருந்து எங்கே வந்தேன்? என்னோடு கூட இருந்த உற்றார், பெற்றார், சேர்ந்தார், சிநேகிதர் எங்கே? ஒருவரையும் காணோமே என்று அலறிப் பதறிப் புலம்புவான்.
எங்கே பார்த்தாலும் அவலட்சணப் பசாசு மயமாய் நாலு திக்கும் சுற்றி வளைத்துக் கொண்டு, கத்தி, ஈட்டி, குறடு, சங்கிலி, சாட்டை, சம்மட்டி முதலான ஆயுதங்களை எடுத்துக் கொண்டு அவனைத் தலையான பசாசின் முன்னே கொண்டு போய் விட்டு இவனுக்கு தண்டனை சொல்லும் என்று கேட்க, இவன் உலகத்திலே முடி தரித்துக் கொடூரமாய் இராச்சிய பாரம் செய்ததற்கு அந்த வகையிலே ஆக்கினை இடுங்களென்று தலையான பசாசு சொல்ல, மகா உக்கிரமாய் எரிகிற சிங்காசனத்திலே வைத்து, பழுக்கக் காய்ந்திருக்கிற இரும்பு முடியும், செங்கோலும் அவன் கையிலேயும், சிரசிலேயும் பசாசுகள் தரிக்கச் செய்து, அவன் அலறுகிற சத்தம் கேட்டு, ஏன் கூப்பிடுகிறாய்?
இதோ உன் சகதோழர்களாய் நாங்கள் இருக்கிறோம் என்று எண்ணிக்கையில்லாத பசாசுகள் கூடி, அவனைக் கீழே விழத்தாட்டி, மேலே விழுந்தேறி, உதைத்து, மிதித்து, உலகத்திலே பாராட்டின இராஜ மகிமையின் அருமை இப்போது தெரிகிறதா என்று, நானாவிதமாகப் பங்கப்படுத்தும். இதெல்லாமல் முன்னே அவனால் அநியாயமாய்க் கொலையுண்ட பிராணிகள் வதை, அவனுடைய உயிரை அறுக்கிறதாகவும், அநியாயமாய் வரி கொடுத்த குடிமக்கள் வதை, அவன் இருதயத்திலே புகுந்து, குடல், ஈரல்களைப் பிடுங்குகிறதாகவும் காணப்படும். பொய்யான மதங்களைப் படிப்பித்து, நாடு தேசமெல்லாம் சுற்றித் திரிந்த போலி குருக்கள், கள்ள ஞானிகள் எல்லாரும் தங்களால் கெட்டுப் போன ஜனங்களாலே சவுக்கடி பட்டு , ஏன் இப்படி எங்களைக் கெடுத்தீர்கள் என்று முறைப்பாடு கேட்பார்கள். மனைவியும், புருஷனும் தங்களுக்குள்ளே ஒருவர் மேல் ஒருவர் பாய்ந்து ஓநாய்களைப் போலே விழுந்து கடித்துக் கொண்டு தூஷணித்துக் கொள்வார்கள்.
செல்வம் மிகுந்து தொந்தி பெருத்தவர்கள் அக்கினிக் குறடுகளால் மாமிசம் பிடுங்கப்படுவார்கள். போதை வெறி கொண்டு திரிந்தவர்களுக்கு பஞ்ச லோகத்தைத் தண்ணீராக உருக்கிக் குடிக்கக் கொடுப்பார்கள். சந்தணம், புனுகு, சவ்வாது, கந்தப் பொடி பூசிப் பாவத்திலே பழகினவர்களை துர்நாற்றமுள்ள ஆற்றிலே போட்டு அமிழ்த்துவார்கள். மோக பாவத்திலே பழகினவர்களைக் கொடூரமாய் எரிகிற நெருப்புக் கட்டிலின் மேல் கிடத்தி, சர்வாங்கமும் ஊடுருவிப் பாய்ந்து கடிக்கிற அக்கினி மயமான விஷ சர்ப்பத்தோடும், புழுத்து நாறித் துர்க்கந்தம் வீசுகிற செத்த பிணத்தோடும் சேர்ந்து பிணைத்து விடுவார்கள்.
கண், காதுக்கு இன்பமாய் ஆடல், பாடல், சரசம், சிரிப்பு, விளையாட்டு, வேடிக்கை, விநோதங்களிலே பழகினவர் களைப் பேய்கள் பயங்கரமான ரூபத்தோடும், கொடுமையோடும் முகக் கோரணி காட்டி, பரிகாசம் செய்து தூஷித்து, நிந்தித்து, பொறுக்க முடியாத வாதைப்படுத்தும். இப்படி அவனவன் எந்தெந்தப் பாவங்களைச் செய்தானோ, என்ன நினைவு நினைத்தானோ, எந்த வார்த்தை பேசி, எந்தக் கிரியையாய் நடந்தானோ, அதற்குத் தக்க ஆக்கினை மூச்சுவிட நேரம் இல்லாமல் அநுபவிப்பான்.
அங்கே நிற்கிறதும் வாதை, இருக்கிறதும் வாதை, பேசுகிறதும், கேட்கிறதும், நடக்கிறதும் சகலமும் வாதையே அல்லாமல் சுகமானது ஒன்றுமில்லை. ஆகையால், தர்க்க சாஸ்திரம் படித்திருந்த ஒரு சீஷன் செத்து நரகத்திலே விழுந்த பின்பு, தன் குருவுக்குத் தோன்றிய போது, நரகத்திலேயும் படிக்கிற கல்வி சாஸ்திரங்கள் உண்டா என்று குரு கேட்டதற்கு, இந்தக் கல்வியும், தர்க்கமும் உண்டென்றான்.
அதாவது : நோவில்லாதது ஏதாவது உண்டா என்று கேட்கிறதும், இல்லை என்று பதில் சொல்லுகிறதும், உன்னுடைய வாதை பெரியதா , என்னுடைய வாதை பெரியதா என்று ஒருவருக்கொருவர் தோர்வைப்படாமல் தர்க்கிக்கிறதும், இதுவே கல்வியும், சாஸ்திரமும் அல்லாமல் வேறொன்றும் இல்லையென்று சீஷன் சொன்னான். இப்படிப்பட்ட வாதையுள்ள ஸ்தலத்திலே பாவி சேர்ந்தவுடனே, உலையிலே வேகிற இரும்பைப் போல வெந்து, அடைகல்லின் மேலே வைத்துச் சம்மட்டியால் அடிக்கிற அடிகளைப் பாவிகள் பொறுக்க மாட்டாமல், ஆகாயம் வரை கேட்க, அபயசத்தமாய் வீறிட்டுப் பெருமூச்சு விட்டு, ஐயையோ! இந்த வாதைகள் அநுபவிக்க ஏன் வந்தேன் ? முன்னே அறிந்தேன் இல்லையே. இப்போதல்லவா மெய் என்று அறிந்தேன்.
Source: New feed