நரகம் என்பது நித்திய தண்டனைக்குக் கடவுளால் தீர்ப்பிடப்பட்டவர்கள், சர்வேசுரனை ஒருபோதும் காணாமல், அவியாத அக்கினியில் பசாசுக்களோடு நித்திய காலமும் எரிந்து கொண்டேயிருக்கிற, சகல விதமான வேதனைகளும் நிறைந்த இடம் என்று ஞான உபதேசக் கோர்வை கூறுகிறது (பக்கம் 292).
நரகம்
(1) வேதாகமத்தில் நம் ஆண்டவரால் போதிக்கப்பட்ட சத்தியமாகவும்,
(2) கத்தோலிக்கத் திருச்சபை பாரம்பரியமாக விசுவசித்துப் போதித்து வரும் சத்தியமாகவும்
(3) மனித புத்திக்கும், நியாயத்திற்கும் முழுவதும் ஒத்ததாகவும் இருக்கிறது.
நரகம் உண்டென்பதும், அதன் தண்டனை நித்தியமானது என்றும், எப்போதும் திருச்சபை விசுவசித்து வந்துள்ளது. நரகவாசிகளின் தண்டனைக்கு முடிவுண்டு என்று சொல்லத் துணிந்தவர்களைக் கொன்ஸ்தாந்திநோப்பிள் பட்டணத்து இரண்டாம் பொதுச் சங்கம் திருச்சபை விலக்கத் தண்டனையைக் கொண்டு தண்டிக்கிறது.
நரகம் என்பது சர்வ வல்லப சர்வேசுரன் தம்மை எதிர்த்துப் பகைத்து விரோதிக்கும் துரோகிகளைத் தண்டிக்கும்படி ஏற்படுத்திய ஆக்கினை ஸ்தலம், வேதவாக்கியத்தின்படி சகல துன்பங்களும் குடியிருக்கும் இடம், இருளடர்ந்த சிறைக்கூடம், அக்கினிப் பெருங்கடல், நெருப்புக் கால்வாய், பயங்கரமுள்ள குகை, நன்மையொன்றும் இல்லாத சபிக்கப்பட்ட ஸ்தலம். பேய்கள் வாழும் சுடுகாடு என்று அர்ச். இஞ்ஞாசியாரின் தியானப் பிரசங்கங்களின் தொகுப்பு நூலாகிய மன்ரேசா கூறுகிறது.
நரகத்தில் இரண்டுவித முக்கியமான வேதனைகள் உண்டு.
1) சர்வேசுரனை இழந்து போனதினால் ஆத்துமம் அனுபவிக்கும் இழப்பின் வேதனை.
2) ஐம்புலன்களின் வேதனை. (கண், காது, வாய், மூக்கு, ஸ்பரிசம் தொடு உணர்வு)).
இந்த அத்தியாயத்தில், சர்வேசுரனை இழந்து போனதால் ஆத்துமம் அனுபவிக்கும் கொடிய இழப்பின் வேதனையை நாம் சற்று விரிவாக ஆராய்வோம்.
1. சர்வேசுரனை இழந்து போகும் வேதனை
சர்வேசுரனை தரிசிக்கும் பாக்கியத்தை இழந்து போவதுதான் சபிக்கப்பட்டவர்கள் நரகத்தில் அநுபவிக்கும் சகல தண்டனைகளிலும் அதிக அகோரமான தண்டனையாக இருக்கிறது.
ஆன்மா சர்வேசுரனால் உண்டாக்கப்படுகிறது. அது அவரிடமிருந்தே பிறக்கிறது. சர்வேசுரனாகிய அந்தப் பெருங்கடலில் அது ஒரு துளியாக இருக்கிறது. மனிதக் கருவோடு இணைக்கப்படும் வரை, அது தன்னைப் படைத்தவரை முழுமையாக அறிந்திருக்கிறது. அவரே தன் இறுதிக்கதி என்பதையும் அது நன்றாக உணர்ந்திருக்கிறது. ஆனால் மனிதக் கருவோடு அது இணைக்கப்படும் விநாடியில், ஜென்மப் பாவத்தின் கொடூர நஞ்சு அதைத் தீண்டுவதால், அது வரை தான் கொண்டிருந்த நித்திய நன்மையானவரைப் பற்றிய அறிவையும், காட்சியையும் ஆத்துமம் முழுமையாக இழந்து போகிறது.
ஜென்மப் பாவ தோஷங்களில் ஒன்றாகிய இருட்டடிக்கப்பட்ட அறிவு, கடவுளை ஆத்துமம் “மறந்து போகச் செய்கிறது. ஞானஸ்நானத்தின் மூலம் இந்த ஜென்மப் பாவம் ஆன்மாவிலிருந்து கழுவி அகற்றப்பட்ட பிறகும், ஜென்மப் பாவ தோஷம் அதை விட்டு விலகாதிருப்பதால், தொடக்கத்தில் தான் கொண்டிருந்த கடவுளைப் பற்றிய துலக்கமான அறிவை ஆத்துமமானது உடலை விட்டுப் பிரியும் வரை மீண்டும் பெற்றுக் கொள்வதில்லை. இதற்கு விதிவிலக்குகளும் உண்டு.
ஓர் ஆத்துமம் எந்த அளவுக்கு, சர்வேசுரனை அறிந்து, நேசித்து, அவருக்கு ஊழியம் செய்து அவரை நெருங்கிச் செல்கிறதோ, அந்த அளவுக்கு அது கடவுளை அதிகமாக ஞாபகப்படுகிறது, கடவுளின் கண நேர, கடந்து போகிற ஒரு காட்சியும் கூட அவ்வப்போது பரிசுத்தமுள்ள ஆன்மாவுக்கு அருளப்படுகிறது. எனினும், எந்த விதமான மூடுதிரையுமின்றி, ஆன்மா கடவுளை முழுமையாக மீண்டும் அறிந்து கொள்ள, மரணத்தால் அது தன் உடலிலிருந்து பிரிக்கப்படும் வரை காத்திருக்க வேண்டியுள்ளது.
ஆமென்.
அனைத்து பாரம்பரிய புத்தகங்கள், ஜெபங்கள் படிக்க, தியானிக்க நமது வெப்சைட்டை பயன் படுத்துங்கள்
Source: New feed