
2020ம் ஆண்டின் வேதனைகள், துயரங்கள், மற்றும், கண்ணீரையும் தாண்டி, நம்பிக்கையுடன் 2021ம் ஆண்டை நோக்கி நடைபோடுவோம் என்ற அழைப்புடன், தன் புத்தாண்டு வாழ்த்துச் செய்தியை வெளியிட்டுள்ளார், ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் தலைமைப் பொதுச்செயலர் அந்தோனியோ கூட்டேரஸ்.
இவ்வுலகின் பல்வேறு பகுதிகளின் மக்களால் வெளிப்படுத்தப்பட்டுவரும் இரக்கச் செயல்கள், முன்னணியில் நின்று பணியாற்றுவோர், விரைவில் தடுப்பூசியை கண்டுபிடித்த அறிவியலாளர்கள், சுற்றுச்சுழலை பாதுகாக்க உழைப்போர், என அனைவரையும் தன் புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் பாராட்டியுள்ள கூட்டேரஸ் அவர்கள், மக்களிடையே காணப்படும் ஒன்றிப்பும் ஒருமைப்பாடும் நம்பிக்கையின் கதிர்களாக உள்ளன எனவும் கூறியுள்ளார்.
நோய் மற்றும் மரணத்தின் அலைகளை உருவாக்கிவரும் கொள்ளைநோய் காலத்தில், ஏழ்மை, சரிநிகரற்ற தன்மை, பட்டினி, வேலையின்மை, கடன் அதிகரிப்பு, குழந்தைகளின் துயர், வீடுகளில் வன்முறை, மற்றும், பாதுகாப்பின்மைகள் பெருகி வருவதையும் குறிப்பிடும் ஐ.நா. பொதுச்செயலர், நம்பிக்கையுடன் கூடிய ஒரு புதிய ஆண்டு முன்னிற்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.
தட்ப வெப்ப நிலை மாற்றம், கோவிட்-19 கொள்ளைநோய் போன்றவைகளால் எழுந்துள்ள நெருக்கடிகள், அனைவரும் ஒன்றிணைந்து உழைக்கவேண்டியதன் தேவையை நமக்கு உணர்த்தியுள்ளன என்பதையும் தன் செய்தியில் குறிப்பிட்டுள்ளார் ஐ.நா. பொதுச்செயலர்.
அமைதி என்பது, மனிதர்களுக்கிடையே மட்டுமல்ல, மனிதர்களுக்கும் இயற்கைக்கும் இடையேயும் இடம்பெறவேண்டியது அவசியம் எனக்கூறும் ஐ.நா. பொதுச்செயலரின் அறிக்கை, இவ்வுலகை குணப்படுத்த மனித சமுதாயம் ஆற்றவேண்டிய நடவடிக்கைகளையும் வலியுறுத்தியுள்ளது.
வரும் 2021ம் ஆண்டு, அமைதியும் மகிழ்வும் நிறைந்த ஓர் ஆண்டாக அனைவருக்கும் விடியட்டும் என்ற வாழ்த்துடன், தன் புத்தாண்டு செய்தியை நிறைவுசெய்துள்ளார் கூட்டேரஸ்.
Source: New feed